உள்ளூர் செய்திகள்

ஆறு மனமே ஆறு!

அரசர் ஒருவர் கோபக்காரராக இருந்தார். 'தான் செய்வது தவறு என்பதை தெரிந்தும்' அவரால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒருநாள் அவரை சந்திக்க வந்திருந்த அறிஞரிடம், தனது குறையை கூறினார். ''என்னிடம் பொன்னால் செய்த அதிசயமான குவளை ஒன்று உள்ளது. அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால், உங்களது கோபம் இல்லாமல் போய்விடும்'' என்றார் அறிஞர்.''குவளையில் தண்ணீர் குடித்தால் கோபம் போய்விடுமா...'' என்றார் அரசர்.''கோபம் வரும்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பி குடியுங்கள்'' என்று குவளையை கொடுத்து விட்டு சென்றார். அன்றிலிருந்து அவரும் அதை பின்பற்றினார். கோபமும் அவரை விட்டு விலகியது. சில வருடங்கள் சென்றது. அறிஞர் மீண்டும் வந்தார்.''அறிஞரே... என் குறை நீங்கிவிட்டது. என்ன வேண்டுமோ.. கேளுங்கள்'' என்று மகிழ்ச்சியில் குதித்தார் அரசர்.''அரசே... உங்களை இனியும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது சாதாரணமான குவளைதான். பொதுவாக கோபம் வரும்போது சில நொடிகள் அமைதியாக இருந்தாலே போதும். கோபம் பறந்தோடிவிடும். தண்ணீரை மூன்று முறை ஊற்றும்போது உங்களது மனம் அமைதி பெறுகிறது. நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.''ஆஹா... உங்கள் புத்திசாலித்தனத்திற்கு தலைவணங்குகிறேன்'' என்றார் அரசர்.எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருங்கள். பிரச்னைகள் உங்களை நெருங்க முடியாது.