பேசும் தெய்வம் (4)
'என்ன படிச்சும் மனசுல நிக்கமாட்டேங்கறது; கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் தெரியறது, ஆனா எழுதும்போது எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்கறது' என்றெல்லாம் பேசியிருப்போம்; கேட்டிருப்போம். வாருங்கள்! இந்தக் கேள்விக்கு யாராவது பதில் வைத்திருக்கிறார்களா என பார்ப்போம்.காயத்ரி நதிக்கரையில், ஒரு ஆசிரமத்தில் சுவ்ரதன் என்ற சீடன், வேதம் படித்து வந்தான். பலகாலம் படித்தும், அவனால் முடிக்க முடியவில்லை. சுவ்ரதனோடு படித்த மற்றவர்கள் படிப்பை முடித்து விட்டனர். சுவ்ரதன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது.'வேதங்களுக்கு அடிப்படை 'காயத்ரி' மந்திரம். பிரம்ம தேவரின் யாகத்திற்காக இங்கே நதி வடிவில் காயத்ரி ஓடுகிறாள். அவளை வழிபட்டு, படிப்பை நிறைவு செய்வேன்' என தீர்மானித்தான். அதன்படி நதியை வழிபட்டு தவம் செய்தான். எறும்பு ஊரக் கல்லும் தேயுமல்லவா? சுவ்ரதனின் தவத்தால், காயத்ரி மகிழ்ச்சி அடைந்தாள். இடுப்பளவு தண்ணீரில் நின்று, தன் வளைகளின் ஓசை, சுவ்ரதனுக்கு கேட்கும்படி கைகளை அசைத்தாள். கண்ணைத் திறந்து காயத்ரி தேவியைத் தரிசித்தான் சுவ்ரதன். ஒளிவீசும் நெல்லிக்கனியை, அவனிடம் கொடுத்து விட்டு, மின்னல் போல் மறைந்தாள். சுவ்ரதனுக்கு மெய் சிலிர்த்தது. வேதம் முழுவதும் கைகளில் வந்ததைப் போல் இருந்தது. ஓடிப்போய், குருநாதரிடமும், மற்றவர்களிடமும் நடந்ததை கூறினான். அப்போது உசங்கு என்னும் வயதான முனிவர்,' அப்பா! சுவ்ரதா! காயத்ரிதேவியே உன் தவத்திற்காக மனம் மகிழ்ந்து அளித்த பிரசாதம் இது. இதை நீ சாப்பிடு! இதன் மூலம் வேதம் உனக்கு விளங்கும். நீ சிறந்த அறிவாளி ஆவாய். மேலும், நான் சொல்வதைக் கேள்! இன்னும் கொஞ்சநாளில் பஞ்சம் வரப் போகிறது. மக்கள் வறுமையால் வேதத்தை மறப்பர். மறுபடியும் நல்லகாலம் வரும் வரை இந்த நெல்லிக்கனியால் துன்பம் உன்னைத் தீண்டாது. பஞ்சம் நீங்கியபின், பசியால் வேதங்களை மறந்த வேத வல்லுனர்கள் உன்னிடம் வந்து, வேதங்களை அறிந்து கொள்வர். மறைந்துபோன வேதம் மறுபடியும் உன்னால் தழைக்கும்,' என்றார்.சுவ்ரதனும், அவர் சொன்னபடியே நெல்லிக்கனியை சாப்பிட்டான். அந்த விநாடியில் சகல வேதங்களும் அவன் மனதில் பிரகாசித்தன. அதன்பின் சுவ்ரதன் ரைப்ய மகரிஷியின் மகளான சுசீலையை மணந்து, பலருக்கும் வேதம் கற்றுத்தந்தான். இந்நிலையில் முனிவர் சொன்னபடி பஞ்சம் வந்தது. 12 வருடகாலம் நீடித்த பஞ்சத்தின் கொடுமை தாங்காமல், அங்கிருந்த ரிஷிகள் வெளியேறினர். சுவ்ரதனும் சுபிட்சமான இடம் தேடிப் புறப்பட்டான். அப்போது காயத்ரி தேவி, நதியிலிருந்து மின்னலைப்போல் வெளிப்பட்டுத் சுவ்ரதனுக்கு காட்சி அளித்தாள்.அவனிடம், 'சுவ்ரதா! இங்கிருந்து நீயும் உன் சீடர்களும் வெளியேற வேண்டாம். நான் உங்களைக் காப்பாற்றுகிறேன். நீ தவம்செய்யும் வனத்திலே கிணறு தோண்டு. வற்றாத தண்ணீர் கிடைக்கும்' என்றாள். அம்பாள் சொன்னபடியே கிணறுதோண்டி, பயிர் விளைவித்தான். அக்னி ஹோத்ரம், யாகம், சிராத்தம் முதலானவற்றால் தேவர்கள், பித்ருக்களை திருப்திப்படுத்தினான்.ஒரு காலத்தில் பஞ்சம் நீங்கியது. முனிவர்கள் திரும்பி வந்தனர். பசி வந்தால் பத்தும் பறந்து போகுமல்லவா! அவர்களுக்கு வேதம் மறந்து விட்டது. அவர்கள் கதம்ப வனத்தில் தவம் செய்த சிறுவனான மார்க்கண்டேயரிடம் போய், தங்களுக்கு வேதம் மறந்ததையும், மீண்டும் கற்றுத்தர வேண்டும்' என்றும் வேண்டினர். மார்க்கண்டேயர் மறுத்தார்.''நான் சிறுவன். நீங்கள் பெரியவர்கள். உங்களுக்கு நான், வேதம் சொல்லி வைப்பது உசிதமல்ல. முறை தவறி வேதத்தை அத்யயனம் செய்பவரும், சொல்லிக் கொடுத்தவரும் நரகத்தை அடைவர் என்பது வேதத்தின் கட்டளை. நீங்கள் காயத்ரி நதிக்கரையில் இருக்கும், சுவ்ரத முனிவரிடம் போய் கேளுங்கள்,'' என்றார்.முனிவர்களும் சுவ்ரதனிடம் வந்து, மீண்டும் வேதங்களை கற்றனர். இந்த வரலாற்றின் அடிப்படையில் திருச்சி அருகிலுள்ள மாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது. காயத்ரி தேவி தன் வளையல்களை ஓசைப்படுத்திக் காட்டியதால், இத் திருத்தலம் 'வலயநாடி' எனப்பட்டது. சுவாமி பெயர் ஆம்ரவனேஸ்வரர். அம்பாள் பெயர் பாலாம்பிகா. இவர்களைத் தரிசிக்க நினைவாற்றல் பெருகும்! தொடரும்அலைபேசி: 97109 09069பி.என். பரசுராமன்