உள்ளூர் செய்திகள்

எதையும் கேட்காத இதய தெய்வம்

அனுமன் ஜெயந்திஅன்று அவருக்கு வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை எல்லாம் படைக்க முடியாவிட்டால் வருத்தப்படவே வேண்டாம். அவருக்கு பிடித்தமான 'ஸ்ரீ ராம ஜெயம்' சொல்லி வணங்கினாலே போதும். அவரது அருள் கிடைக்கும். எதையும் எதிர்பாராத இதய தெய்வம் அவர்.தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்த அனுமன், சீதையை மீட்டு வருவதற்காக ராமனிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக் கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்து கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவி மலையை கொண்டு வருதல் ஆகிய, அரிய செயல்களை செய்தார். தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப் பற்றியோ பிறரிடம் பெருமை பேசியதே இல்லை. 'நான் ராமனின் சாதாரண துாதன். அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரண பயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது, மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன்,' என்று சொன்னார். ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு, ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜ குமாரனாக முடி சூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளை செய்த அனுமனோ, ராமனிடம் எதுவுமே கேட்கவில்லை. இதனால் அனுமன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த ராமன், 'உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். எப்பொழுதும், உனக்கு கடன் பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னை போன்றே, உன்னையும் எல்லோரும் போற்றி வணங்குவர்.' என்றார். இப்படி எதையுமே எதிர்பாராத இதய தெய்வமாக இருந்தார் அனுமன். அதனால் தான் 'இந்த உலகம் இருக்கும் வரை உன் புகழ் நிலைத்திருக்கும்' என்று மகாவிஷ்ணுவால் வாழ்த்த பெற்றார்.