உள்ளூர் செய்திகள்

விட்டலனின் விளையாட்டு - 31

வேதம் ஓதிய எருமைஸந்த் ஞானேஸ்வரர் எழுதிய ' ஹரி உச்சாரணீம்' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். 'ஹரிநாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பதால் ஒரு நொடியில் நமது பாவங்கள் நாசமாகும். அக்னி தன்னிடம் வந்து சேரும் பொருளை தன்னோடு ஐக்கியமாக்கி விடும். அது போல நாம ஜபம் செய்பவர்களை ஹரி தன்னுடன் ஐக்கியமாக்கி கொள்கிறான். நாம ஜபம் எல்லையற்ற பெருமை வாய்ந்தது. அதைத் தொடர்ந்து செய்பவர்களிடமிருந்து தீயசக்திகள் ஓடி விடும். அளப்பரிய பெருமை கொண்ட ஹரிநாமத்தின் மகிமையை உபநிடதங்களால் கூட முழுமையாகக் கூற முடியவில்லை....'ஞானேஸ்வரி ஒன்றே போதும் ஞானேஸ்வரரின் புலமை, பக்தியை விளக்க' எனத் தொடங்கினார் பத்மநாபன்.'ஞானேஸ்வரி யார்? அது மற்றொரு விட்டல பக்தரின் பெயரா?' என பத்மாசனி கேட்க, 'இல்லை. பகவத் கீதையின் ஆய்வுரையான இதை மராத்திய மொழியில் எழுதியவர் ஞானேஸ்வரர்.தன் குரு நிவ்ருத்திநாதரின் உத்தரவுக்கு இணங்க ஆத்ம ஞானத்தை போதிக்கும் இந்த நுாலை எழுதினார். மகாராஷ்டிராவில் பக்தி இயக்கம் பரவ மூலகாரணமாக இருந்தவர் இவர்.பாண்டுரங்க பக்தையான ஜனாபாய் ஒரு பாடலில் ''ஞானேஸ்வரர் எழுதிய நுாலான ஞானேஸ்வரியை படிப்பவர்கள் பண்டரிபுரத்தை காண்பார்கள். இதை படிக்கும் மூடனும் ஞானியாவான்'' என்கிறார். ஞானேஸ்வரர் அந்த நுாலில், ''வீட்டு வாசலில் நாற்று நட்டேன். அந்தக் கொடியில் நிறைய பூக்கள் பூத்தன. அதைப் பறித்து கொண்டே இருந்தாலும் இன்னும் அதிக பூக்கள் பூத்தன. அவற்றை மாலையாக்கி விட்டலனுக்கு அர்ப்பணித்தேன் என்கிறார்'' என முடித்தார் பத்மநாபன். அந்த பாடலில் ஞானேஸ்வரர் சொல்லும் தத்துவத்தையும் விளக்கினார். ''மலர்கள் எனக் குறிப்பிடுவது நம் மனதில் எழும் ஆசைகளை. அவற்றை அடக்கினாலும் புதிய ஆசைகள் அரும்புகின்றன. அவற்றை கடவுளுக்கு அர்ப்பணிப்பதே உண்மையான இன்பம்'' ஞானேஸ்வரரை மனதிற்குள் தியானித்த பத்மாசினி, '' விடோபாவும், ஞானேஸ்வரரும் ஒருவரா'' எனக் கேட்டாள். ''இல்லை. ஞானேஸ்வரரின் தந்தை விடோபா. அவரும் விட்டலனின் பக்தர்'' என்றார் பத்மநாபன். பின் கதையைத் தொடர்ந்தார்....பெற்றோர் இறந்த பின் காசி யாத்திரை செல்ல தீர்மானித்தார் விடோபா. தன் மனைவியிடம், 'ருக்மாபாய், நீ உன் பெற்றோர் வீட்டுக்குச் செல்'' என அனுப்பினார். தந்தை வீட்டுக்குச் சென்றாள். ''துறவு மனம் கொண்ட தன் கணவர் காசிக்குச் சென்றால் தன்னை ஏற்க மாட்டார்'' என்ற முடிவுக்கு வந்தாள். கவுரிதேவியை வழிபட்டு விரதம் இருந்தாள்.காசிக்குச் சென்ற விடோபா அங்கு ஸ்ரீபாத சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்தார். சுவாமிகள் பாதயாத்திரை செல்ல தீர்மானித்தார். ஆனால் விடோபா அவருடன் செல்லவில்லை. யாத்திரையில் ஒருநாள் ருக்மாபாயை சந்திக்கவே அவள் சுவாமிக்கு பாதபூஜை செய்தாள். ''பெண்ணே நீ ஞானக் குழந்தைகளுக்குத் தாயாவாய்' என வாழ்த்தினார். ருக்மாபாய் கண்ணீருடன் தன் கணவர் காசிக்கு சென்றதை விவரித்தாள்.இதைக் கேட்டு சுவாமிகள் அதிர்ச்சியடைந்தார். தன்னிடம் துறவற தீட்சை பெற்ற விடோபாதான் இவளின் கணவன் என்பதை உணர்ந்தார். தான் செய்த தவறை சரிசெய்ய யாத்திரையை விட்டு காசிக்குச் சென்றார். அவருடன் ருக்மாபாய், அவளது தந்தை சீதோபந்துவும் சென்றனர். துறவியை இல்லறத்தில் ஈடுபட உத்தரவிட்டார் சுவாமிகள். அதை ஏற்ற விடோபாவுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. தெய்வாம்சம் பொருந்திய அந்தக் குழந்தைகள் நிவர்த்தி தேவன், ஞானதேவன், சோபான தேவன், முக்தாபாய் ஆகியோர். அவர்களில் ஞானதேவன்தான் பிற்காலத்தில் ஞானேஸ்வரராக மாறினார். துறவியான ஒருவர் இல்லறத்தில் ஈடுபட்டதை பலர் ஏற்கவில்லை. மன்னரிடம் இருந்து ஓலை வந்தது. அதில் ''ராஜகுருவை உடனடியாக சந்திக்க வேண்டும். அவர் உங்களுக்கு ஆதரவாக நின்றால் எதிர்ப்பாளர்களை மாற்றி விடலாம்' என்றது ஓலை.ஆனால் விடோபாவுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார் குருநாதர். குருவின் கேள்விகளுக்கு விடோபாவின் மகனான ஞானேஸ்வரன் பதிலளித்தான். எல்லாம் முத்தான பதில்கள்.வாதம் முடிந்ததும் குருநாதரிடம், ''என் தந்தையார் போற்றுதலுக்கு உரியவர். அவர் பக்தியைப் பரப்புவது தடை செய்யத்தக்கதல்ல. இதை அறிவிக்கும் வகையி​ல் அரசருக்கு ஓலை அனுப்புங்கள்' என்றான் சிறுவன்.குருவால் தன் தோல்வியை ஏற்க முடியவில்லை. அவர் மவுனமாக இருந்தார். சிறுவன் ஞானேஸ்வரருக்கு கோபம் வந்தது. சற்று தொலைவில் எருமை ஒன்று நின்றது. ''உங்களிடம் வாதம் செய்ததை விட்டு, இந்த எருமையிடம் வாதம் செய்திருக்கலாம்'' என்றார் கோபமாக.''எருமையும் நானும் ஒன்றா?'' எனக் கத்தினார் குருநாதர். 'எல்லா உயிர்களிலும் கடவுளே நிறைந்திருக்கிறார்' என்றார் ஞானேஸ்வரர்.'அப்படியா? உனக்கு வேதம் தெரியுமே. இந்த எருமைக்கு வேதம் தெரியுமா?' எனக் கேட்டார்.ஞானேஸ்வரர் அந்த எருமையின் தலையில் கையை வைத்தார். 'எருமையே, ஒரு மனிதன் எதனால் அந்தணன் ஆகிறான்? பிறப்பாலா? ஞானத்தாலா? செய்யும் செயலாலா?' எனக் கேட்டார். அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அப்போது அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. எருமை பேசத் தொடங்கியது! ''செய்யும் செயல்களால்தான் ஒரு மனிதன் அந்தணன் ஆகிறான்' என்றது. கூடவே வேதங்களை ஒப்பித்தது. பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.எருமை வேத பாராயணம் செய்த இடம் இன்றும் 'பைட்டண்' என்ற பெயரில் உள்ளது.-அடுத்த வாரம் முற்றும்ஜி.எஸ்.எஸ்.,98841 75874