தேவை நமக்கு பொறுமை
தன்னை வணங்கியவரை உற்றுப் பார்த்தார் மகாபெரியவர். அடிக்கடி மடத்திற்கு வரக் கூடியவர் தான். நெடுநாள் கழித்து அன்று வந்திருந்தார். ஆனால் அவர் முகத்தில் உற்சாகமில்லை. தளர்ச்சியும் விரக்தியும் தென்பட்டது. சுவாமிகள் அவரிடம், ''என்ன, பூஜை, சகஸ்ரநாம பாராயணம் எல்லாத்தையும் நிறுத்தியாச்சாக்கும்? சஷ்டி கவசம் படிக்கறதையும் விட்டாச்சு இல்லையா?''நமஸ்கரித்தவருக்கு, தான் இப்போது எப்படி நடந்து கொள்கிறோம் என்று பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்ற திகைப்பு.''நீ வாய்விட்டு வேற சொல்லணுமா? உன் முகத்தைப் பார்த்தாலே தெரியறதே! உன்னோட சோகமும் விரக்தியும்?' வந்தவர் பெருமூச்சுடன் பதில் சொன்னார்.''கம்பெனியை இழுத்து மூடிட்டா. குடும்பம் கஷ்டப்படறது. எங்கெங்கேயோ போய் வேலை கேட்டும் ஒண்ணும் கிடைக்கலே! என்னை பகவான் ஏன் சோதனை பண்றார்ன்னு புரியலே. பூஜை, பிரார்த்தனை மேலயெல்லாம் சலிப்பு வந்துடுத்து. அதனால தான் ரொம்ப நாளா மடத்துப்பக்கமே வரலே.''''பல இடங்கள்ல போய்க் கேட்டும் வேலை கிடைக்கலைன்னா, இன்னும் பல இடங்கள்ல முயற்சி பண்ணணும்னு அர்த்தம். அது சரி. உன்னோட கஷ்டங்களை பகவான் கிட்ட சொல்றது மட்டும் தான் உன் வேலை. மத்தபடி எப்போ அதைத் தீர்க்கணும்னு பகவான் தான் முடிவு பண்ணுவார். ஒரு மருத்துவமனைக்கு நிறைய நோயாளிகள் வரா. சிலருக்கு காய்ச்சல், சிலருக்குத் தலைவலி... ஆனா ஒருத்தரைப் பாம்பு கடிச்சிருக்கு. ஒருத்தரோடது ஆக்சிடென்ட் கேஸ். டாக்டர் அவசர அவசரமா பாம்பு கடிச்சவருக்கும் ஆக்சிடெண்ட்ல அடிபட்டவருக்கும் தான் சிகிச்சை செய்வார். காய்ச்சல், தலைவலி வந்தவர்களெல்லாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டியது தான். ஆனா கட்டாயமா, தலைவலி காய்ச்சல்காராளுக்கும் மருந்து கொடுப்பார்.அதுமாதிரி பகவானும் ஒரு மருத்துவர்! சாதாரணப் பிணியையா அவர் போக்கறார்? பிறவிப் பிணியையே போக்கறவராச்சே! அவர் நம்மை இப்போ கவனிக்கலைன்னா என்ன நெனக்கணும்? நம்மை விட அவசரமா அவரோட அருள் தேவைப்படறவா இருக்கான்னு புரிஞ்சுக்கணும். பிரார்த்தனை பண்ணினபடியே கொஞ்சம் காத்திருக்கணும். ஆன்மிகத்துல பொறுமை தேவை. தொடர்ந்து பிரார்த்தனை பண்ணு. பகவானோட அருள் கட்டாயம் உனக்கு உண்டு!''பகவான் அருள் தனக்கு உண்டு என்று சர்வ நிச்சயமாக சுவாமிகள் கூறியதும் வந்தவர் மனத்தில் நம்பிக்கை பிறந்தது. மனத்தளர்ச்சி நீங்கியது. ''தொடர்ந்து பிரார்த்தனை பண்ணுவேன், என் முயற்சியையும் தொடர்ந்து செய்வேன்,'' என்ற அவர், உற்சாகத்தோடு விடைபெற்றார்.