சிவராத்திரியை கொண்டாடுவது ஏன்?
கதை 1: ஒருமுறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டதால், எங்கும் இருள் சூழ்ந்தது. உலகத்தார் கலங்கினர். உடனே சிவன், நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து கிளம்பிய ஜூவாலை ஒளியை வணங்கினாலும், அதன் வெப்பம் தாளாமல் அனைவரும் பயந்தனர். பார்வதிதேவி, சிவனை அன்று இரவு முழுக்க விழித்திருந்து அபிஷேகம் செய்து வணங்கி, அவரை குளிரச்செய்து, மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டினாள். அவள் விழித்திருந்து வணங்கிய இரவே, சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. சிவனை வழிபட்ட பார்வதி, ''இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு, வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்கு பின் சொர்க்கமும் தரவேண்டும்,'' என்றாள். சிவனும் அந்த வரத்தை அருளினார்.கதை 2: சாகாவரம் தரும் அமிர்தத்தை எடுக்க, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருமால் சயனம் செய்யும் பாற்கடலை கடைந்தனர். வாசுகி பாம்பை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு கடைந்த போது, பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. சிவன் அதை உருண்டையாக்கி வாயில் போட்டதும், மயங்கியது போல கிடந்து திருவிளையாடல் புரிந்தார். இது ஒரு திரயோதசி திதி நாளில் நடந்தது. அதனை தொடர்ந்து வந்த சதுர்த்தசி திதியன்று இரவில், நான்கு ஜாமங்களிலும், தேவர்கள் அவருக்கு அபிஷேகம் செய்து வணங்கினர். அந்த நாளே சிவராத்திரி.