உள்ளூர் செய்திகள்

முதல் மனிதனின் சந்தேகம்

ஆதிமனிதரான ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்பவரிடம் இறைவன், 'உம் மக்களில் ஒருவராக என்னுடைய இறுதி நபிகள் பூமிக்கு வருவார். உம்மால் ஏதேனும் பிழை ஏற்பட்டாலும் அவர் மூலமே உம்மை மன்னிப்பேன்' என்றான். இதைக் கேட்டவர் 'நான்தான் பூமியில் முதல் மனிதன். இனி வரப்போகும் அத்தனை மனிதர்களும் என் மக்களே. அவ்வாறு இருக்க என் மக்களில் வரும் ஒருவர் மூலம் என் பிழைகள் மன்னிக்கப்படுவது பொருத்தமான செயல் இல்லையே' என எண்ணினார். இது இறைவனுக்கு பிடிக்கவில்லை. உடனே வானவரான ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) அழைத்து, ஆதிமனிதனின் ஐயத்தை அகற்றுமாறு கூறினான். இல்லாவிட்டால் அது அவருக்கு பெரும் தீமையாக முடியும் என்றும் எச்சரித்தான். ஜிப்ரீல் உடனே ஹஜ்ரத் ஆதமின் நெஞ்சைப் பிளந்து அந்த எண்ணத்தை வெளியில் எடுத்து, அதில் ஒரு பாதியைச் சுவர்க்கத்தில் புதைத்தார். மறுபாதி மன இச்சையாக (நப்ஸெ அம்மாரா) மாறியது. இந்த எண்ணத்தில் இருந்தே அவரை சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றக் காரணமாயிருந்த மரம் முளைத்தது.