மாபெரும் சக்தி
மெதீனாவில் இஸ்லாம் வேரூன்றி விடுமோ எனக் குரைஷிகள் பயந்தனர். அதிலும் நபிகள் நாயகம் அங்கு சென்று விடுவாரோ என நினைத்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அங்கு வந்த ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் ஒரு யோசனை கூறினர். நாயகத்தை சிறைப்படுத்த வேண்டும், கொன்று விடலாம், நாடு கடத்த வேண்டும் என தெரிவித்தனர். இறுதியாக கொலை செய்வது எனத் தீர்மானித்தனர். ''யாராவது தனிப்பட்டவர் கொலை செய்தால், அந்தப் பழி அவரைச் சேரும். எனவே குடும்பத்திற்கு ஒருவராக வாள் ஏந்திச் சென்று அவரைக் கொன்றால், பழி அனைவரையும் சேரும். யாரும் பழிக்குப் பழி வாங்கவும் மாட்டார்கள்'' என யோசனை தெரிவித்தான் அபூஜஹில். இதை அனைவரும் ஏற்றனர். இதை அறிந்த நாயகம் அருகில் இருந்த அலியிடம், ''மெக்காவை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி எனக்கு உத்தரவு கிடைத்திருக்கிறது. என்னுடைய கட்டிலில் போர்வையைப் போர்த்திக் கொண்டு நீர் படுத்துக் கொள்ளும். காலையில் எழுந்ததும் என்னிடம் நம்பிக்கையாகக் கொடுக்கப்பட்டிருந்த பொருள்களை, அவற்றிற்கு உரியவர்களிடம் ஒப்படைத்தபின் மெதீனாவுக்கு வந்து சேரும்'' என்று கூறினார். பின் வெளியே வந்த அவர் கஃபாவைப் பார்த்து, 'மெக்காவே... உலகிலுள்ள அனைத்திலும் நீ எனக்கு மேன்மையாக இருக்கிறாய். ஆனால் உன்னுடைய மக்களோ என்னை இங்கே இருக்கவிடவில்லை'' என்று சொல்லி விட்டு அபூபக்கர் வீட்டிற்கு சென்றார். அவரை அழைத்துக் கொண்டு மூன்று மைல் தொலைவில் உள்ள தவுர் என்னும் குகைக்குச் சென்றார்.பின் நான்காம் நாளன்று குகையை விட்டு பயணத்தை தொடர்ந்தனர். பகலில் வெப்பம் அதிகமாக இருந்ததால் அபூபக்கர் சிறிது நேரம் நிழலில் அவரை இளைப்பாறச் செய்தார். அங்கு உணவும் கிடைக்கவில்லை. எனவே ஆடு மேய்ப்பவரிடம் இருந்து பால் கொண்டு வந்து பருகச் செய்தார். மீண்டும் பயணம் சென்ற போது மெக்காவிலிருந்து தேடி வந்த ஸூராக்கா என்பவர் துாரத்தில் இருந்தே இவர்களை பார்த்துவிட்டார். உடனே தன் குதிரையை வேகமாக விரட்டியதால், அது கால் இடறிக் கீழே விழுந்தது.பின் அவர்களைத் தாக்க நினைத்து அவர்களின் நாட்டு வழக்கப்படி அம்புக்குறியிட்டுப் பார்த்தார். 'வேண்டாம்' என எதிர்க்குறி வந்தது. ஆனால் எதிரிகளைப் பிடித்துக் கொடுத்தால் நுாறு ஒட்டகங்கள் கிடைக்குமே என்ற ஆசையில், மீண்டும் விரட்டிச் சென்றார். எதிர்பாராத விதமாக குதிரையின் கால்கள் பூமிக்குள் பதிந்து விட்டன. மறுபடியும் அம்புக் குறியிட்டுப் பார்த்ததில், 'வேண்டாம்' என்றே பதில் கிடைத்தது. கலக்கம் அடைந்தவர் மாபெரும் சக்தி ஒன்று தனக்கு எதிராக வேலை செய்வதை உணர்ந்தார்.