| ADDED : ஜூன் 06, 2024 09:23 PM
'ஆனாலும், இவருக்கு குசும்பு அதிகம் தான்...' என, மேற்கு வங்க பா.ஜ., மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுகதா ராய், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் டம் டம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன், மேற்கு வங்கத்தில் வீசிய ரேமல் புயலால், இவரது தொகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து களத்தில் இறங்கிய சவுகதா ராய், தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளுக்கு படகில் சென்று, வெள்ளத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார்.மறக்காமல், தன்னுடன் புகைப்படக்காரர்களையும் அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.இதைப் பார்த்த, பா.ஜ., பிரமுகர் சுவேந்து அதிகாரி, 'சவுகதா ராய் நன்றாக நடிக்கிறார். ஆனால், திரைக்கதை அமைப்பதில் கோட்டை விட்டு விட்டார். அடுத்த முறையாவது திரைப்படத் துறையினரின் உதவியை அவர் நாட வேண்டும்...' என, கிண்டல் அடித்தார். ஆனாலும், இந்த தேர்தலில் சவுகதா ராய் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார். 'சவுகதா ராயின் நடிப்பு, சுவேந்து அதிகாரிக்கு பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால், வாக்காளர்களுக்கு பிடித்து விட்டதே...' என்கின்றனர், மேற்கு வங்கஅரசியல்வாதிகள்.