'எப்போது வேண்டுமானாலும் என் நாற்காலிக்கு ஆபத்து வரலாம்...' என, தன் அமைச்சரவையில் உள்ள விக்ரமாதித்யா சிங்கை பற்றிய கவலையில் உள்ளார், ஹிமாச்சல் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்வீந்தர் சுகு.இங்கு, கடந்த சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் வெற்றி பெற்றதும், தனக்கு அல்லது தன் தாய்க்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார், விக்ரமாதித்யா.இவர், ஹிமாச்சல் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த வீர்பத்ர சிங்கின் மகன். ஆனால், இவர் நினைத்ததற்கு மாறாக, சுக்வீந்தர் முதல்வராகி விட்டார். இதனால் கடுப்பில் இருந்த விக்ரமாதித்யாவிற்கு சமீபத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ராஜ்யசபா தேர்தலில், காங்கிரசின் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்திய விக்ரமாதித்யா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், சுக்வீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யா விட்டால் கட்சியை விட்டு வெளியேற போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.காங்., மேலிட தலைவர்கள் சமரசம் செய்ததை அடுத்து, தன் முடிவை 'வாபஸ்' பெற்றார். ஆனாலும், எப்போது வேண்டுமானாலும் சுக்வீந்தரின் நாற்காலியை கவிழ்க்க, விக்ரமாதித்யா முயற்சிக்கலாம் என பேசப்படுகிறது. இதனால், 'காலையில் கண் விழித்ததுமே, முதல்வர் பதவியில் இருக்கிறோமோ, இல்லைேயா என்ற சந்தேகத்துடனே எழ வேண்டியுள்ளது...' என புலம்புகிறார், சுக்வீந்தர் சுகு.