| ADDED : ஜூன் 03, 2024 09:12 PM
'வருங்கால முதல்வரின் கனவை இப்படி சிதைக்கலாமா...' என, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவை கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவருக்கு முன் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி சிறைக்கு போய் விட்டார். இதனால், பதவியை ராஜினாமா செய்த அவர், கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரனை முதல்வராக நியமித்தார்.அடுத்தவர்களை நம்பி பதவியை ஒப்படைத்தால், அவர்கள் முதுகில் குத்திவிட்டு, நிரந்தரமாக பதவி நாற்காலியில் அமர்ந்து, துரோகம் செய்த நிகழ்வுகள் பல மாநிலங்களில் நடந்துள்ளதால், தன் மனைவி கல்பனாவை முதல்வராக்க திட்டமிட்டார்.சமீபத்தில், ஜார்க்கண்டில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஒரு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது. இதில், ஆளும் கட்சி சார்பில் கல்பனா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரது பிரசாரத்துக்கும் கூட்டம் கூடியது. ஆனால், கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக வெளியாகின. ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள, 14 லோக்சபா தொகுதிகளில், 11ல் பா.ஜ.,வே வெற்றி பெறும் என கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.இதனால் கடும் ஏமாற்றத்தில் உள்ள கல்பனா, 'சட்டசபை தேர்தலிலும் தோல்வி அடைந்தால், என்னையும் சிறைக்கு அனுப்பி விடுவரோ...' என புலம்புகிறார்.