உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / யாரும் யோசிக்காத விஷயம்!

யாரும் யோசிக்காத விஷயம்!

'இது நல்ல ஐடியாவாக இருக்கே...' என, ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா பற்றி ஆச்சரியப்படுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்ற பின், யாரும் எதிர்பாராத வகையில், முதன்முறை எம்.எல்.ஏ.,வான பஜன்லால் சர்மாவை முதல்வராக அறிவித்தது, கட்சி தலைமை.இது, கட்சியில் உள்ள மூத்த தலைவர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியது. 'சட்டசபை அனுபவமே இல்லாத ஒருவருக்கு மிகப் பெரிய பொறுப்பை கொடுக்கின்றனர். நிர்வாகத்தில் சொதப்பினால் என்ன செய்வது...' என, அவர்கள் முணுமுணுத்தனர். இதையறிந்த பஜன்லால் சர்மா, ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து, அதற்கேற்ப முடிவுகளை எடுத்து வருகிறார். மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் பணித்திறனை அதிகரிப்பதற்காக புதுமையான ஒரு முயற்சியை செயல்படுத்தி வருகிறார், பஜன்லால் சர்மா.ஆன்மிகத்தில் தேர்ச்சி பெற்ற சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து, அரசு ஊழியர்களிடையே அவ்வப்போது பேச வைத்து வருகிறார். சொற்பொழிவாளர்கள் கூறும் புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றால், தங்களின் மனதில் உள்ள நெருக்கடிகள் குறைந்து, புத்துணர்ச்சி ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், மாநிலம் முழுதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார், பஜன்லால் சர்மா.'யாருமே யோசிக்காத விஷயத்தை யோசித்துள்ளார், பஜன்லால் சர்மா. இதற்கு பலன் கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி