உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்ஷியாம் கிருஷ்ணசாமி: மதுக் ஆலைகளில் இருந்து நேரடியாக மது கூடங்களுக்கும், லைசென்ஸ் இல்லாத மது கூடங்களுக்கும் விற்கப்படுவதால், கடந்த ஆண்டு மே முதல் 'டாஸ்மாக்'கில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. தமிழக அரசு சாராயம் விற்கும் மாபியாவாக செயல்படுகிறது. கள்ளச்சாராயம் ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னை. இதற்கு நிரந்தர தீர்வு மதுவிலக்கு தான். டவுட் தனபாலு: நீங்களே சொல்லிட்டீங்க... 'டாஸ்மாக்' வாயிலா, அரசு கஜானாவுக்கு நேரடியா 50,000 கோடி ரூபாய் வருதுன்னா, மறைமுகமா 1 லட்சம் கோடி ரூபாய் ஆளுங்கட்சியினருக்கு போகுது... அதை இழக்க யாருக்காவது மனசு வருமா... அதனால, தமிழகத்தில் மதுவிலக்கு என்பது கானல் நீர்தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!***பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது' என்று, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பீஹார், கர்நாடகா, ஒடிசா, ஆந்திராவில் மாநில அரசுகளால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றை அறியாமல், யாரோ கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது.டவுட் தனபாலு: முதல்வருக்கு அதில் விருப்பமில்லை என்பது உங்களுக்கு தெரியுதுல்ல... தேசிய ஜனநாயக கூட்டணியில இருக்கிற நீங்க, பிரதமரிடம் ஒரு வார்த்தை பேசி, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி கேட்பதில் என்ன தயக்கம் என்ற, 'டவுட்' எழுதே!***லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: இந்த சபையை சுமுகமாக நடத்துவதற்கு சபாநாயகருக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். நம்பிக்கையின் அடிப்படையில், இந்த ஒத்துழைப்பை அளிப்போம். எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளை பேசவிடாமல், அமைதிப்படுத்தி, சபையை சுமுகமாக நடத்துவது, நல்ல ஜனநாயக நெறியாக இருக்க முடியாது.டவுட் தனபாலு: பார்லிமென்டில், ஆளுங்கட்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதும் எதிர்க்கட்சிகளின் கடமை தானே... 'எதிர்க்கட்சி என்றால், எல்லாத்தையும் எதிர்ப்போம்' என்ற எண்ணத்துடன் லோக்சபாவுக்குள் வருவதும் நல்ல ஜனநாயக நெறியாக இருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி