உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி டாக்டர்கள் புது சாதனை

நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி டாக்டர்கள் புது சாதனை

புதுடில்லி: இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த வளர்ப்பு பிராணியான நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து, டில்லியைச் சேர்ந்த கால்நடை டாக்டர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.தலைநகர் டில்லியின் கைலாஷ் பகுதியில் உள்ள, 'மேக்ஸ் பெட்ஸ்' என்ற தனியார் மருத்துவமனையில், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய்க்கு அறுவை கிசிச்சை செய்யப்பட்டுள்ளது.

7 வயது நாய்

இதுகுறித்து, அந்த மருத்துவமனையின் கால்நடை இதய சிறப்பு நிபுணரான டாக்டர் பானுதேவ் சர்மா கூறியுள்ளதாவது:ஜூலியட் என்று பெயரிடப்பட்டுள்ள 'பீகல்' வகையைச் சேர்ந்த 7 வயதான நாய்க்கு, இதயத்தில் சிறிய பிரச்னை இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கு மருந்துகள் கொடுத்து வந்தனர். 'மிட்ரல் வால்வு' நோயால் இந்த நாய் பாதிக்கப்பட்டிருந்தது. இதயத்தின் ஒரு பகுதியில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்ய முடியாததே இந்த நோயாகும். இதனால், இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.மிட்ரல் வால்வு நோய் என்பது, இந்தியா உட்பட உலகெங்கும் நாய்களுக்கு உள்ள முக்கியமான பிரச்னையாகும். அவற்றுக்கு ஏற்படும் இதய நோய்களில், 80 சதவீதம் இந்த பாதிப்பாக உள்ளது. நாய்களின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணமாக இது உள்ளது.தற்போது இதற்கு மருந்துகள் தரப்படுகின்றன. இதன் வாயிலாக பாதிப்பு தீவிரமாவதை தடுக்க முடியும். அறுவை சிகிச்சை என்பது மிகவும் ஆபத்தான ஒன்று.

முதல் முறை

மனிதர்களுக்கு 'ஓபன் ஹார்ட்' அறுவை சிகிச்சை செய்வது போல், நாய்களுக்கு செய்ய முடியாது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதியும் நம் நாட்டில் பெரிய அளவில் இல்லை.உண்மையில், தனியார் மருத்துவமனையில் நாய்க்கு இதய அறுவை சிகிச்சை, முதல் முறையாக தற்போது செய்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சையில், அந்த நாயின் இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கினோம். சிகிச்சைக்குப் பின் தற்போது ஜூலியட் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை