மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
கோவை;அங்கன்வாடி மையம் என்றால்... சிமென்ட் ஷீட் கூரை அல்லது ஓட்டு கட்டடம்... காற்றோட்டம் இல்லாத அறை... சமையல் செய்த கரும்புகை படிந்த சுவர்... சில குழந்தைகள் அழுது கொண்டிருக்கும்; சில குழந்தைகள் மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும்... இப்படித்தான் பெரும்பாலான இடங்களில் பார்த்திருப்போம்.இதெல்லாம் அந்தக்காலம் என்று சொல்லும் அளவுக்கு, நவீன முறையில், சமுதாய பொறுப்பு பங்களிப்பு நிதியில், அங்கன்வாடி மையம் கட்டிக் கொடுத்திருக்கிறது, 'எல் அண்டு டி' நிறுவனம். மாநகராட்சி, 46வது வார்டு, ரத்தினபுரியில் அமைந்துள்ள இம்மையத்தில், 6 வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறை, விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வகுப்பறையில் மின் விசிறி மற்றும் மின் விளக்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது.காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை இம்மையம் செயல்படுகிறது. குழந்தைகள் வந்ததும் சத்து மாவில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை வழங்கப்படுகிறது. மதியம் சத்தான உணவு பரிமாறுகின்றனர். மாலையில் கிளம்பும்போது, மீண்டும் கொழுக்கட்டை கொடுக்கின்றனர். இடைப்பட்ட நேரத்தில் கொஞ்ச நேரம் படிப்பு; கொஞ்ச நேரம் விளையாட்டு என பல விதமாக கற்றுத்தரப்படுகிறது. கொஞ்ச நேரம் உறங்க வைக்கப்படுகின்றனர்.இச்சூழல் ஈர்க்கப்படுவதால், இம்மையத்துக்கு மட்டும், 135 குழந்தைகள் வருகின்றனர். இந்த எண்ணிக்கை, கோடை விடுமுறை காலம் என்பதால் குறைவு என்கின்றனர் இங்குள்ள பணியாளர்கள்; கல்வியாண்டு துவங்கியதும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர், இவர்கள்.இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறுகையில், ''கோவை மாவட்ட அளவில், 1,640 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. 32 ஆயிரத்து, 173 குழந்தைகள் பயனடைகின்றனர். சொந்த கட்டடம் இல்லாத மையங்களுக்கு புதிய கட்டடம் கேட்டிருக்கிறோம். 200 மையங்களுக்கு கட்டடம் தேவை. எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் 66 மையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு சேர்த்து, நடப்பாண்டு மட்டும், 100 மையங்களுக்கு புது கட்டடம் கிடைத்து விடும்,'' என்றார்.கோவையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், கார்ப்பரேட் கம்பெனிகள், தங்களது சமுதாய பொறுப்பு நிதியை செலவழிக்க, இதுபோல் அங்கன்வாடி மையங்கள் கட்டிக் கொடுக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது. கட்டிக் கொடுக்க விரும்புவோர், கலெக்டர் அலுவலகத்தில் பழைய கட்டடத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகலாம்.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1