உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சங்கிகள் என்றவர்களுக்கு மோடியின் பதிலடி!

சங்கிகள் என்றவர்களுக்கு மோடியின் பதிலடி!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: அரசாங்க ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,ல் உறுப்பின ராக இருக்கக்கூடாது என்கிற உத்தரவு, 1966ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்த தடையை தற்போது துணிந்து நீக்கியுள்ளது இந்த மோடி அரசு. நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பலரின் உரிமைகளுக்காக, பாதுகாப்புக்காக, நலனுக்காக பல அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால், ஹிந்துக்களுக்கு, இந்தியர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் முதலில் எழுந்து நிற்பது, ஆர்.எஸ்.எஸ்., இயக்கமே.ஹிந்து தர்மத்தை, தேசத்தைப் போற்றி பாதுகாக்க, ஒழுக்கம், கட்டுப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு, அவர்களின்சேவைகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமே,அரசின் இந்த உத்தரவு என்று கூறினால் அது மிகையாகாது. இன, மொழி, மத, பிரிவினைவாதம் பேசும் கட்சிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ்., சேவகர்களை, 'சங்கிகள்' என்று கூறுபவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்.,ஐ வளர விடாமல் முட்டுக் கட்டை போட்டு தடுத்தவர்களுக்கு, அரசின் இந்த உத்தரவு பிடிக்காமல் இருக்கலாம். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?மோடி அரசு தேச நலன் கருதி பல அதிரடி, துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது. உதாரணத்திற்கு ஜம்மு - கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, கடவுள் ராமர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் அவருக்கு கோவில் கட்டியது போன்றவைகளைக் கூறலாம். அந்த வரிசையில், இந்த உத்தரவையும் சேர்த்துக் கொள்ளலாம். தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்தாலும், நாட்டுக்கு நல்லது எதுவோ அதை துணிந்து செயல்படுத்துவோம் என்று இந்த மத்திய அரசு இதன் வாயிலாக கூறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 

மனித நேயம் அழிந்து போகும்!

சுந்தரன் சந்தானம், சென்னையில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகாவில், ஐ.டி., நிறுவனங்களின் வேலை நேரத்தை பத்திலிருந்து பதினான்கு மணி நேரமாக மாற்ற கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதாக, ஒரு செய்தி இரு நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்தது. ஐ.டி., நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதனால் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 'மனித நேயம் மிக்க' ஒரு ஐ.டி., நிறுவனம் இந்த விஷயத்தை துவக்கி வைத்ததாக தெரிகிறது.இந்த சட்ட திருத்தத்தை அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் முதலில் செயல் படுத்தலாமே?️ மனித உடலமைப்பு எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர ஓய்வு, களிப்பு மீத எட்டு மணி நேர உறக்கம் என வகுக்கப்பட்டு நடந்து வருகிறது. பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் சிறு மாற்றம் செய்து ஐ.டி., நிறுவனம் இதை பத்து மணி நேரமாக உயர்த்தி உள்ளனர். இதை யாரும் பெரிது படுத்தவில்லை. தொடர்ந்து எட்டு மணி நேரம் உழைத்த பின், உடல் சோர்வு அடைவதால் கவனம் சிதறும், அதனால் வேலை திறன் குறையும். நேரம் அதிகமாகும் போது,முன்னர் இருந்ததை விடவும் வேலை திறன் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. நேர அதிகரிப்பால், பெரிய பலன்கள் ஒன்றும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது வேலையில் உள்ளவர்களது ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும், மற்றும் புதியவர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்து போகும். லாபம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றநோக்கிலேயே நிறுவனங்கள் செயல்படும் போது மனிதநேயம் அழிந்து போகும். ஒரு மனிதன் வேலை முடிந்து வீடு திரும்பி குடும்பத்தை கவனிக்க வேண்டும். பதினான்கு மணி நேர உழைப்புக்கு பின்னர், ஒரு மனிதன் வெறும் நடைபிணம் தான். ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்ஏ.ஐ., வெகுவாக தடம் பதித்து வருவதால், வேலை வாய்ப்புக்கள் வரும் நாட்களில் வெகுவாக குறையும்என, ஒரு கணிப்பு உள்ளது. இந்த பணி நேர அதிகரிப்பு செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது. இந்த நேர மாற்றத்தை தொழிற் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. சமூகத்தை பாதிக்கும்எந்த மாற்றமும் வேண்டாம் என்பதில் மக்களும், அரசியல்வாதிகளும் உறுதியுடன் இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த மாதிரி ஓவ்வாத மாற்றங்கள் எந்த காலத்திலும் வரலாம். ஓட்டு போட்டதோடு கடமை முடிந்தது என எண்ணாமல், அனைவரும் போராடித்தான் ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!

ராகுலின் ராஜ தந்திரம்!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கலிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 18, மார்க்சிஸ்ட் கம்யூ., 1, பா.ஜ., 1 தொகுதிகளையும் கைப்பற்றின. வயநாடு லோக்சபா தொகுதியில் 3 லட்சத்து 64,422 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எதிர்கட்சி தலைவரானார், ராகுல். பூர்வீக பாரம்பரிய ரேபரேலி தொகுதியிலும் ஜெயித்து விட்டார். சொந்த மண்ணின் வாக்காளர்களின் கோரிக்கை மற்றும் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட வேண்டிய கட்டாயம் காரணமாக, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களம் இறங்குவது நிச்சயம். அப்போது தான் ராகுலுக்கு கிடைத்த ஓட்டுகள் அப்படியே சிந்தாமல் சிதறாமல் காங்கிரசுக்கு கிடைக்கும். அதேசமயம் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில், காங்கிரசுடன் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாவேண்டாமா என்று சி.பி.ஐ., தேசிய குழு டில்லியில் மூன்று நாட்களாக இதுபற்றி அலசி ஆராய்ந்தது. வயநாட்டில் மீண்டும் காங்கிரசை எதிர்த்து நின்று தோற்றுப் போனால், இண்டியா கூட்டணியின் நோக்கமே நீர்த்துப்போகும் என்று வட மாநில சி.பி.ஐ., கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். ராகுல், இண்டியா கூட்டணியின் பொது எதிரிபா.ஜ.,வை எதிர்த்து போட்டியிட வேண்டும். இண்டியா கூட்டணியின்அங்கமான சி.பி.ஐ., கட்சியைஎதிர்த்து போட்டியிடக்கூடாது. இடதுசாரிகள் தேர்தலில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. சி.பி.ஐ., போட்டியிட்டே ஆக வேண்டும் என்று கேரள மாநில சி.பி.ஐ., நிர்வாகிகள் வாதித்துள்ளனர். சி.பி.ஐ., களம் இறங்காவிட்டால், அந்த ஓட்டுகளை எந்த வழியிலாவது கவர பா.ஜ., வழி தேடும். கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டு களும் தான் பிரதான கட்சிகள். பிரியங்காவை கேரளா எம்.பி., ஆக்கி, அங்கு காங்கிரஸ் கட்சியை இன்னும் வலுவாக்க அம்மாநில நிர்வாகிகள் திட்டமிடுகின்றனர். எனவே காங்கிரஸ் ஜெயித்த தொகுதியை விட்டுக்கொடுக்காது. காங்கிரஸ், சி.பி.எம்., சேர்ந்து, ராஜ்யசபா இடம் ஒன்றை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கேரளாவில் இருந்து விட்டு கொடுக்கலாம். அரசியல் கவுரவ பிரச்னை தற்காலிகமாக தீரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 31, 2024 22:02

RSS எப்போதுமே நீங்கள் சொன்ன பிரிவினரிடம் பாகுபாடு காட்டுவதில்லை, நீங்கள் நம்பும் திருட்டு திராவிட கட்சிகளும், கான் ஸ்கேம் காங்கிரஸும் சொல்லும் பொய்யை நம்பி மூளைச்சலவை செய்யப்படுவதைக்கூட புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். பிஜேபி யில் எத்தனை பட்டியலினத்தவர்கள் அமைசர்கள் தலைவர்கள் என்பதை உங்கள் கண்களால் பாருங்கள். பிஜேபி வளர்ச்சி குறித்து பேசினால் உங்களை போன்றோர், இன்னமும் ஜாதி மதம் என்று பிரிவினை பேசுகிறீர்கள். இந்து மாதத்தில் ஜாதி என்று சொல்லி, மூளைச்சலவை செய்யப்பட்டு இறந்த பின் புதைக்க கூட இடம் பிட்சை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். வெட்கமா இல்லை?


seshadri
ஜூலை 30, 2024 15:25

இது இன்போசிஸ் நாராயணமூர்த்தி முன்னெடுத்த ஒரு திட்டம். இவர் சொல்லும் பதினாலு மணி நேர திட்டம் கொண்டு வருவோம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால் கூட காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு பத்து மணிக்கு முடியும். இதில் அலுவலகத்திற்கு பயண நேரம் ஒரு இரண்டு மணி நேரம் என்றால் குடும்பத்தை எப்படி கவனிப்பது வேலை பார்ப்பதே குடும்பத்தை கவனிக்க. மிகவு முட்டாள்தனமான திட்டம். யாரும் இதை ஆதரிக்க கூடாது.


Arassn Arasan
ஜூலை 29, 2024 23:23

ரஸ்எந்த காலத்தின் தாழ்த்த பட்ட சமுதாயத்திற்க்கு குரல் கொடுத்தது.அது ஆதிக்க சமுதாயத்தின் பினாமி அமைப்பு.


D.Ambujavalli
ஜூலை 28, 2024 17:24

பேசாமல், மூன்று வேலையும் வயிற்றுக்குப் போட்டுவிட்டு அலுவலகத்திலேயே குடியிருக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டு விடலாமே தங்கள் தகப்பன், தாய் யாரென்றும், மகன், மகள் , மருமகள் யார் என்றுகூட மறந்து விட்டாலும் வியப்பில்லை


Raj
ஜூலை 28, 2024 10:12

தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள்.. இவர்களும் இந்துக்கள்தான் என்பதை ஆர்எஸ்எஸ் மனதில் கொள்ள வேண்டும். பாஜக இந்துக்களுக்காக எதுவும் செய்யவில்லை மாறாக அரசியல் மட்டுமே செய்கிறது ஓட்டுக்காக. அதன் எதிரொலி தான் அயோத்தில் கூட பாஜக தோற்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை