ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், சிலைகள் அரசியல் எல்லை மீறி போய் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் உள்ள 2,000 கிராமங்களிலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலைகள் வைக்க திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் நேரு தலைமையில் தி.மு.க.,வினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.இந்த சிலைகள் அமைக்கப்பட இருப்பது, அரசுப் பணத்திலா அல்லது தி.மு.க., கட்சி பணத்திலா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், பொது மக்களுக்கு பயன்படும்படியாக எத்தனையோ தொலைநோக்கு திட்டங்கள் இருக்க, இப்படி சிலைகள் வைப்பதையே சாதனையாக, தங்களது லட்சியமாக தி.மு.க.,வினர் வைத்து கொள்வதை யாரும் விரும்ப மாட்டார்கள்.இந்த சிலைகள் வைப்பதற்காக செலவு செய்யப்படும் பணத்தில் கண்மாய்கள், ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வாரலாம்; மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி, தனியாருக்கு போட்டியாக மேம்படுத்தலாம்.ஓட்டு கூரைகளில் இயங்கும் பல ஆயிரம் கிராமப்புற பள்ளிகளை சீரமைக்கலாம். விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையான பாதுகாப்பான நெல் சேமிப்பு கிட்டங்கிகள் மற்றும் காய், கனிகள், பூக்களை பல நாட்களுக்கு பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்கலாம்.இப்படி எத்தனையோ உருப்படியான, உபயோகமான நல்ல காரியங்களை, கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவாக செய்யலாம். அதை விடுத்து, 2,000 சிலைகள் வைத்தால், உ.பி., மாநில முதல்வராக இருந்த மாயாவதியின் கதிதான் ஏற்படும்.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியாக இருப்பவர் மாயாவதி. இவரது கட்சியின் சின்னம் யானை. முன்பு, முழு மெஜாரிட்டியுடன் உ.பி.,யில் இவர் ஆட்சி அமைத்தபோது, மாநிலம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் சிலைகளை வகை, தொகையின்றி அமைத்தார். அதுவும் கட்சி பணத்தில் அல்ல; மக்களின் வரிப்பணத்தில்.எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோது, 'யானை சிலைகளை அழகுக்காக அமைத்துள்ளோம்' என சால்ஜாப்பு சொன்னார். இதை விரும்பாத மக்கள், அடுத்த தேர்தலில் மாயாவாதி கட்சிக்கு மரண அடி கொடுத்தனர். அன்று வீழ்ந்த மாயாவதி கட்சி இன்று உ.பி.,யில் லென்ஸ் வைத்து தேட வேண்டிய நிலையில் தான் இருக்கிறது.இதை, தி.மு.க., ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, சிலைகளுக்கும் பொருந்தும். விதிகளும், விலக்குகளும்!
பா.முருகன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டை உருப்பட
விடாமல் செய்து கொண்டிருப்பவை, இந்த நாட்டுச் சட்டங்களில் உள்ள விதிகளும்,
விதிவிலக்குகளும் தான்.'வாகனங்களில், போலீஸ், கவர்ன்மென்ட், 'டிவி'
பிரஸ், வழக்கறிஞர் அடையாளம், டாக்டர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது.
மீறினால், அபராதம் விதிக்கப்படும்' என, சமீபத்தில் சென்னை போக்குவரத்து
போலீசார் சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.இந்த
அறிவிப்பிலிருந்து, டாக்டர்களுக்கு விலக்களிக்க கோரி, தமிழ்நாடு
மருத்துவர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலர்டாக்டர் கே.சீனிவாசன் சார்பில்,
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை
விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, 'மருத்துவ அவசரத்துக்காக செல்லும்
டாக்டர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்கலாமே? வழக்கறிஞர்களுக்கு
பார்கவுன்சில் ஸ்டிக்கர் போல, டாக்டர்களுக்கும் வழங்குவது குறித்து, தேசிய
மருத்துவ கமிஷனிடம் கருத்து கேட்கலாமே!' என்றார்.அதற்கு, 'தேசிய
மருத்துவ கமிஷனையும் வழக்கில் இணைக்க வேண்டும்' என, அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் தமிழ்நாடு
மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட
நீதிபதி, வழக்கை ஜூன் 14க்கு ஒத்தி வைத்தார். மேலும், 'அதுவரை
வாகனங்களில் டாக்டர் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் நடவடிக்கை எடுக்கக்
கூடாது. இது இடைக்கால உத்தரவு. தேசிய மருத்துவ கமிஷன் வாதத்தை கேட்ட பின்,
இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். வாகனத்தின் முன்பக்கம் அல்லது
பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். நம்பர் பிளேட்
உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்' என்றும் நீதிபதி
உத்தரவிட்டிருக்கிறார்.நாம் துவக்கத்தில் குறிப்பிட்ட விதி விலக்கு, டாக்டர் ஸ்டிக்கர் விஷயத்தில் அனுசரிக்கப்பட்டு விட்டதல்லவா?அது ஒரு மாதமோ, ஒன்பது மாதமோ... அதுவல்ல பிரச்னை.இந்த
நாட்டில் அமலில்உள்ள இந்திய தண்டனை சட்டங்கள், வருமான வரி சட்டங்கள்,
போலீஸ் சட்டங்கள் உட்பட ஒவ்வொரு சட்டத்திலும், முதலில் விதி என்று
குறிப்பிட்டு, தொடர்ந்து அதன் கீழேயே விலக்கு என்ற ஒன்றையும் குறிப்பிட்டு
இருப்பர்.இதை பொருத்தமாக விளக்க வேண்டும் என்றால், விதி என்பது
சாமானியர்களுக்கு; விதி விலக்கு என்பது அரசியல்வாதிகளுக்கும்,
செல்வந்தர்களுக்கும்.சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த்
கெஜ்ரிவாலுக்கும், மஹாராஷ்டிராவில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய
பிரபலஸ்தனின் மகனுக்கும் வழங்கிய சலுகைகளையும் சுட்டிக் காட்டலாம்.அடுத்தது தான், மிக மிக முக்கியமான விஷயம்.வாகனங்களில்
டாக்டர் என்றோ, வழக்கறிஞர் என்றோ ஸ்டிக்கர் ஒட்டி யிருப்பதற்காக, அந்த
வாகனங்களுக்கு, ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுமதிப்பது போல, போக்குவரத்து
சிக்னல்களில் நிறுத்தாமல் கடந்து செல்ல அனுமதிக்கும் வழக்கம் இல்லை.மற்ற வாகனங்களைப் போல, அவைகளும் சிக்னல்களை மதித்து, நிறுத்தி, பச்சை சிக்னல் விழுந்த பிறகு தான் கடக்க இயலும்.மாநகர
போக்குவரத்துத் துறை வாகனங்களும், சில அடாவடி அரசியல்வாதிகளின்
வாகனங்களும் சிக்னல்களை ஒரு பொருட்டாக மதிக்காமல், மனம் போனபடி,
தாந்தோன்றித்தனமாக கடந்து செல்லும் என்பது வேறு விஷயம். இவர்களுக்கு யார்
விதிவிலக்கு கொடுத்தது?நம் நாட்டை உருப்பட விடாமல் செய்து
கொண்டிருப்பவை, இந்த சட்டங்களில் உள்ள விதிகளும், விதி விலக்குகளும் தான்
என்பது இப்போது தெள்ளத் தெளிவாக, வெட்ட வெளிச்சமாக புரிந்து இருக்குமே!