உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கவலைப்படாதே சகோதரா!

கவலைப்படாதே சகோதரா!

க.கணேசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஓசூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமானங்களும் வந்து போகும் அளவுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் அமைக்கப்படும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபை விதி எண் 110ன் கீழ் அறிவித்த அறிவிப்பை உண்மையென நம்பி, சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ரெ.ஆத்மநாபன் என்பவர் கடிதம் எழுதி இருந்தார்.சட்டசபை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புக்கள் அனைத்தும், உடனடியாக துவங்கி வைக்கப்பட்டு விடும் என, அவர் கருதிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.கவலைப்படாதே சகோதரா!விதி எண் 110ன் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்படும் அறிவிப்புக்கள் அனைத்தும், வெற்று விளம்பரத்திற்காகத் தானேயன்றி, திட்டமிட்டு நிதி ஒதுக்கி, செயல் படுத்துவதற்கு அல்ல.'அந்த வெற்று விளம்பர திட்டங்களை, சாதாரணமாக அறிவித்து இருக்கலாமே! எதற்காக, விதி எண் 110 ஐ துணைக்கு அழைக்க வேண்டும்?' என தோன்றலாம்.சாதாரண அறிவிப்பாக அறிவித்தால், மன்றத்தில் குழுமியுள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அந்த அறிவிப்பின் மீது கேள்வி மேல் கேள்வி கேட்டு, பதில் சொல்ல நிர்ப்பந்தப்படுத்தி, அறிவிப்பாளரை உண்டு இல்லை என்று, 'கிழிகிழி'யென நார்நாராக கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு விடுவர்.விதி எண் 110ன் கீழ் அறிவிக்கும் எந்த ஒரு அறிவிப்பின் மீதும், யாரும் எந்த உறுப்பினரும் நாக்கின் மீது பல்லை போட்டு கேள்வி கேட்டு விட முடியாது.மறைந்த ஜெயலலிதா கண்டுபிடித்த சட்டசபை சூத்திரம் இது. அதை இப்போது, ஸ்டாலினும் உபயோகிக்கத் துவங்கி உள்ளார்.சேது சமுத்திர திட்டம் என்ற ஒன்றை, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, மாபெரும் விழாவெல்லாம் கொண்டாடி துவக்கினரே! ஞாபகம் இருக்கிறதா?அந்த திட்டம், செயல் வடிவம் பெற்றதா?அறிவாலயத்துக்கு பக்கத்தில், அண்ணா சாலை சுவர்களில், 40 அடி நீள விளம்பர போஸ்டர்கள் தான் அரங்கேறியது.அறிவிக்கப்பட்ட அந்த சேது சமுத்திர திட்டத்தால் பயன் அடைந்த ஒரே ஒரு நபர், டி.ஆர்.பாலு மட்டும் தான்.'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்று, நாகூர் அனீபா குரலில் கழக விளம்பர பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது போல, இன்னும் ஓரிரு தினங்களில், 'ஓசூரில் பிளேன் விட்ட ஸ்டாலின் வாழ்க வாழ்கவே! புகழ் ஓங்குக ஓங்குகவே!' என்ற பாடல் எதிரொலிக்கும்.ஓசூரில் வசிப்பவர்களுக்கு தெரியும், ஓசூரில் விமான நிலையம் அமையாது என்று.ஆனால், மற்ற மாவட்ட மக்கள், ஓசூரில் விமான நிலையம் கட்டி விட்டனர் போலும் என்று நம்பிக் கொண்டிருப்பர்.அதுதானே அவர்களுக்கு வேண்டியது!சற்று திரும்பி பாருங்கள், அந்த அத்திக்கடவு - -அவினாசி கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளாக, கழகங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளது என்று!எனவே, ஓசூரில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், ஹெலிகாப்டர் ஓடுதளம் கூட அமையாது.

லொள்ளு சபாவாகிய லோக்சபா!

குருபங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடக்கும் பார்லி.,யில், லோக்சபா எம்.பி.,க்கள், மக்கள் நலப் பணி எனும் பெயரில், கீழ்க்கண்டவற்றை, செவ்வனே செய்யத் துவங்கியுள்ளனர்: வெளியே நின்று, அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி, கூக்குரல் எழுப்பி அரசியல் சாசன ரட்சகர்கள் வேடம் போடுவது உள்ளே சென்று, தொண்டை கிழிய, காட்டுக்கத்தல், கூச்சல் போடுவது கைகளில் அகப்பட்ட பேப்பரை சுக்குநுாறாக கிழித்து, அபிஷேகம் செய்வது ஷேம் ஷேம்; பப்பி ஷேம்' என, ஆரம்பப் பள்ளி சிறுவர்கள் போல் பரிகாசம் செய்வது சபாநாயகர் இருக்கையை நோக்கி, ஆவேசத்துடன் ஓடுவது  கல்லுாரி மாணவர்கள் போல், மேஜைகளை கை வலிக்க ஓங்கி தட்டுவது தங்களது எதிரி கட்சிகளை, வாய்க்கு வந்தபடி வசை பாடுவது அலுப்பு தட்டும் போது, லோக்சபா கேண்டீனில் ஒரு கட்டு கட்டுவது! ஆக மொத்தம், இந்த மக்கள் நலப் பணிகளை, அடுத்த ஐந்து ஆண்டுகள்,நம் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாள் தவறாது செய்வர் என்பது மட்டும் உறுதி. இத்தகைய கடமை தவறா வீரர்களுக்கு, மக்கள் வரிப்பணத்தில் இருந்து, கோடிகளில் படி அளக்கப்படும்; தொகுதி பணிகள் மறக்கப்படும்; கண்ணியம் அறவே துறக்கப்படும்; மக்கள் பிரதிநிதிகள் மானம் கப்பலேறும்!சமீபத்திய தேர்தல் மூலம், லோக்சபாவை நாமே லொள்ளுசபா ஆக்கிவிட்டோம்!

மருத்துவமனையில் நாடகம் எதற்கு?

சுருதி ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசின் நிர்வாக தோல்வியால், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 63 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே, படை எடுத்ததை பார்த்தோம்.இவர்கள் வந்ததன் உண்மையான நோக்கம், மக்கள் மீதான உண்மையான பாசமா, அரசியல் ஆதாயத்திற்காக போடும் வேஷமா அல்லது நாம் செல்லாவிட்டால் நம்மை மற்றவர்கள் குறை கூறி விடக்கூடாது என்பதற்காக கடமைக்காக வந்தனரா என்பதெல்லாம், அவர்களுக்கே வெளிச்சம்.தலைவர்கள் வந்ததன் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை பார்க்கச் செல்லும் போது குண்டர் படை, தொண்டர் படை, தலைவரை பார்க்க கூடும் கூட்டம், நிருபர்கள், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள், காவல் துறையினர் என்று ஒரு பெரிய திருவிழா கூட்டமாக சென்று பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும்.கூட்டம் கூட்டமாக செல்வது, சிகிச்சை பெறுபவர்களுக்கும், சிகிச்சையளிககும் டாக்டர்களுக்கும் இடையூறாகவே இருக்கும்.இனிமேலாவது, தலைவர்கள், அவருடன் உதவிக்கு ஓரிருவருடன் மட்டும் சென்று, யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல், மருத்துவ நாகரிகத்துடன் நோயாளிகளை பார்வையிட்டு ஆறுதல் கூற முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Parthiban
ஜூலை 08, 2024 02:52

அது 20, 200, ஏக்கர் அல்ல 2000 ஏக்கர். 2021 ல் அமைந்த திமுக அயசு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எத்தனை, அதில் எத்தனை நிறைவேற்ற பட்டுள்ளது, எத்தனை நிறைவேற்ற படவில்லை என்பதைஷதெரிவிக்கவும். மேலும் சேது சமுத்திர திட்டம் தொடங்கி யாரால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 06, 2024 13:40

\\ எனவே, ஓசூரில், 20 ஏக்கர் நிலப்பரப்பில், ஹெலிகாப்டர் ஓடுதளம் கூட அமையாது. //// ஆனா எய்ம்ஸ் மதுரைக்கு வரலைன்னு செங்கல்லைத் தூக்கிக்கிட்டு திரிவோம் ....


Parthiban
ஜூலை 08, 2024 02:57

எய்ம்ஸ் மற்ற இடத்தில் பிற்பாடு அறிவிக்கப்பட்டு , பின்பு அமைக்கப்பட்டு தற்போது செயல்படுகிறது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா, தமிழகத்துக்கு எய்ம்ஸ் இது வரை வரவில்லை. பின்னர் செங்கல் தூக்காமல் , உங்களை போல் பிஜேபி க்கு காவடி தூக்க சொல்கிறீர்களா.


K Sridhar
ஜூலை 06, 2024 12:19

திரு கணேசனின் ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் பற்றிய தகவல் பரிமாற்றம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்க தடங்கல் இல்லையெனில் தற்பொழுதே 200 ஏக்கர் நிலத்தைக் கொள்முதல் செய்து அதில் சிறிய அளவில் ஒரு உள்நாட்டு விமான நிலையம் இல்லையென்றால் ஒரு ஹெலிகாப்டர் நிலையமும் ஓடுதளமும் அமைக்கலாமே.


Parthiban
ஜூலை 08, 2024 02:53

அது 200 ஏக்கர் இல்லை 2000 ஏக்கர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை