கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, எந்தவொரு போதைப் பழக்கமும் நம் உடலுக்கு தீங்கு தான். அதிலும் மது குடிப்பது, குடிப்பவர்களை மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.உதாரணமாக, ஒரு குடும்பத்தில் அதன் தலைமகன் மது பிரியராக மாறுவதால், அவரது உடல்நிலை முதலில் பாதிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அவரது குடும்ப வருவாயில் பெரும் பகுதியை மதுவிற்கு செலவு செய்வதால், அவருடைய குடும்பம் வறுமைக்கு தள்ளப்படுகிறது.மது குடிப்பவர்கள், மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்களாக இருந்தால், அவர்களால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிர் இழப்பதும், உடல் உறுப்புகளை இழப்பதும் மட்டும் அல்லாமல், அவர்களால் பலர் உடல் உறுப்புகளை இழப்பதையும் அன்றாட செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம்.குடும்ப வன்முறைகள் மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 99 சதவீதம் மது பிரியர்களால் தான் செய்யப்படுகின்றன. இப்படி ஒரு சதவீதம் கூட மனித வாழ்க்கைக்கு பயன்படாத இந்த பாழாய் போன மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று விளம்பரம் செய்து கொண்டே, அதை விற்பனை செய்து அரசு கருவூலத்தை நிரப்பும் இந்த திராவிடக் கட்சிகளை நாம் என்னவென்று சொல்வது?நம் நாட்டில், 2016ல் பூரண மதுவிலக்கை பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமல்படுத்தியது. இதனால், பல குற்ற சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது.அதே 2016 தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., வெற்றி பெற்றால் எங்களது முதல் கையொப்பமே பூரண மதுவிலக்கு' என்று கூறியவர் இதே ஸ்டாலின் தான். அதுவும் இல்லாமல், கொரோனா காலத்தில் தமிழகத்தில் மது கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவரும் இதே ஸ்டாலின் தான். இன்று, மதுவிலக்கு வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினாலும், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி உயிர் இழந்த சசிபெருமாளுக்கு ஆதரவாக அன்று குரல் கொடுத்த வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் தற்போது மவுனமாக இருப்பது ஏன்?இன்று தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே, பள்ளி மாணவர்கள் வரை இந்த மது பழக்கம் தொற்றிக் கொண்ட சூழலில், இனி பிறக்கும் குழந்தைகள் மட்டும் தான் குடிக்கவில்லை என்று சொல்லும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விடும். நிதீஷ் குமாரால் முடியும் போது ஏன் தங்களால் முடியாது முதல்வர் ஸ்டாலின் அவர்களே! வாய்க்கொழுப்புக்கு கடிவாளம் தேவை!
ஜி.ரங்கராஜன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர்மோடிக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக பா.ஜ., அலுவலகத்தை முற்றுகை இடப்
போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்திருந்தது.அப்படி முற்றுகையிட வரும்
10 பேருக்கு, உணவு வழங்குவதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதற்கு
பதிலடியாக, மாட்டு இறைச்சி உணவு தயார் செய்யுமாறும், அதை தாங்கள் விரும்பி
சாப்பிட தயாராக இருப்பதாகவும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன்
கூறியிருப்பது, அதிர்ச்சி தருவதாக உள்ளது.சிறுபான்மை இன மக்களை
தாஜா செய்யும் வகையில், நாக்கில் நரம்பில்லாமல் பேசி, பெரும்பான்மையினரை
இழிவுபடுத்துவது, இளங்கோவனுக்கு ஒன்றும் புதிதல்ல! 'கடவுளை வணங்குபவன்
காட்டுமிராண்டி' என்றவரின், வழித்தோன்றல்தானே இந்த இளங்கோவன்!காமராஜர்,
கக்கன் போன்ற, அப்பழுக்கற்ற தலைவர்கள் கோலோச்சிய தமிழக காங்கிரஸ், இன்று
இளங்கோவன் போன்றவர்களை தலைவர்களாக கொண்டிருப்பது, அந்த கட்சியின் இன்றைய
தரத்தை பறைசாற்றுகிறது.இளங்கோவன் போன்றவர்களுக்கு துணிவும்,
வீரமும் இருந்தால், மாட்டுக்கறி சாப்பிடுவோம் என்று சொன்ன வாய், பன்றிக்கறி
என்று சொல்லிப் பார்க்கட்டுமே! அதன்பின் அவர் நாட்டில் நடமாட முடியுமா? அல்லது வாய் திறந்து தான் பேச முடியுமா?தேர்தலில்
எலும்பு துண்டுகளாக வீசப்படும் ஒன்று இரண்டு சீட்டுகளுக்காக, திராவிட
மாடல்களுக்கு பல்லக்கு துாக்கும் தமிழக காங்கிரஸ், தன் கட்சியின்
வாய்க்கொழுப்பு பேச்சாளர்களுக்கு, கடிவாளம் போட வேண்டும்.தன் சகவாச
தோஷத்தால், ஹிந்துக்களை இழிவு படுத்தும் போக்கை அது கைவிடாவிட்டால்,
திராவிடக் கட்சிகளுக்கு காவடி துாக்கி, யாசகம் பெறும் ஒன்றிரண்டு சீட்டு
களுக்கும், அது பேராபத்தாய் முடியும்! சாதாரண ரயில்களை கூடுதலாக விடுங்கள்!
ஆர்.
ஹரிகோபி, புதுடில்லி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில் வெளியான, 'தினமலர்' நாளிதழில், 'ஏசி' பெட்டியை ஆக்கிரமித்த
கூட்டம் என்ற செய்தியை படித்தேன்.டில்லி - டிப்ருகர் - டில்லி
பிரம்மபுத்திரா மெயிலில், இதேபோன்ற வேதனையை நானும் பல முறை
அனுபவித்துள்ளேன். இந்த வண்டியில் மட்டுமல்ல, பீஹார் வழியாக செல்லும்
அனைத்து ரயில் வண்டிகளிலும் - ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் நீங்கலாக இதே
கதிதான்.ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது அல்லது சாதாரண
டிக்கெட் எடுத்து, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்பது அவர்களின்
தார்மீக உரிமை என்பதை போல் நடந்து கொள்வது அவர்களது வழக்கம். இது, இன்று
நேற்றல்ல, பல வருடங்களாக அந்த வழித்தடத்தில் பயணிப்போர் அனுபவித்து வரும்
ஒரு கொடுமை.வண்டி, பீஹாரை கடக்கும் வரை டிக்கெட் பரிசோதகர்களும்
எட்டிப் பார்ப்பதில்லை. பீஹாரை கடந்து விட்டால், இந்த கூட்டம் மொத்தமாக
இறங்கி விடும். தமிழ் சினிமாவில் போலீஸ் இறுதி காட்சியில், 'என்ட்ரி'
கொடுப்பது போல, அந்த நேரத்தில்தான் பரிசோதகரும் தன் முகத்தைக்
காண்பிப்பார்.அவருக்கு உயிர் பயம் இருப்பதால் தான் அவர் காணாமல்
போகிறார் என்ற உண்மை பிறகுதான் தெரியவந்தது. பல வண்டிகளில் டிக்கெட்
பரிசோதகர்களை குண்டு கட்டாக துாக்கி ரயிலிலிருந்து கடாசி விடுவது பலமுறை
நடந்திருப்பதால், அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாக
கூறுகின்றனர்.எனவே, பீஹார் தடம் முடியும் வரை டிக்கெட்
பரிசோதகர்கள் மவுன சாமிகளாக தங்களது இடத்தில் பசை போட்டு அமர்ந்து
கொள்கின்றனர். இப்பிரச்னையில், ஒரு அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.இதை கட்டுப்படுத்த, பீஹார் வழித்தடத்தில் சாதாரண
கட்டணத்தில் இயங்கும் ரயில்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
முன்பதிவு செய்யப்பட்ட வண்டிகளில் வலிய நுழையும் கூட்டத்தை கட்டுப்படுத்த,
கூடுதலான ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை நியமிக்கவும், ரயில்வே துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும்.