என்.மல்லிகை மன்னன், மதுரையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் கட்சி தனித்து
நின்றாலும் வெற்றி பெறும் வலிமை அதற்கு உண்டு' என்று, 'உதார்'
விட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை.வல்லமை இருக்கிறதென்றால், ராகுல் ஏன், 28 கட்சிகள் இணைந்து உருவான 'இண்டியா' கூட்டணியில் சேர வேண்டும்? கடந்த
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணமே கூட்டணி தானே? தனித்து
நின்றிருந்தால், தற்போதைய 99 எங்கே... 30ஐக் கூட காங்., தாண்டி இருக்காது.அரசியலில்
ஜெயலலிதா மட்டுமே, சபதம் போட்டு தனித்து நின்று வெற்றி பெற்று,
சட்டசபைக்குச் சென்றார். இன்று வரை அந்த சாதனையை யாரும் முறியடித்ததில்லை.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களால் கூட, கூட்டணி இன்றி
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லையே!தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதைப் பெருமையாக செல்வப்பெருந்தகை நினைத்தாலும், அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. உலக
அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த இந்திரா, ராஜிவ் போன்ற காங்கிரஸ்
தலைவர்கள், தேர்தலில் வெற்றி பெற, மாநிலக் கட்சிகளின் தயவை நாடும் நிலையில்
தான் இருந்தனர்.எனவே, இது போன்ற வெட்டிப் பேச்சு பேசுவதை செல்வப்பெருந்தகை கைவிட வேண்டும்.ஊழல், மதவெறியை அனுமதிக்க கூடாது!
பேராசிரியர், மருத்துவர் எஸ்.அர்த்தநாரி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொய், மின்னல் வேகத்தில் உலகைச் சுற்றும். இதைத் தான், 50 ஆண்டுகளாக, தமிழக அரசியல் கட்சிகள் செய்து வந்தன.இப்போது சமூக வலைதளங்கள் அப்பொறுப்பை ஏற்று, சிரமேற்கொண்டு செய்து வருகின்றன. சக்தி வாய்ந்த அரசியல் கட்சி ஒன்று, மற்ற ஊடகங்களை வளர விடாமல், தன் காட்சி ஊடகத்தை வளர்க்கும் பொருட்டு, மத்திய அமைச்சரவையிலும் பங்கு பெற்று, பல ஊழல்கள் செய்து, தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.அரசியல் ரீதியாக, சிறு ஜாதிய கட்சிகளை வளர விட்டு, குளிப்பாட்டி தன் செல்லப் பிராணிகளாக்கிக் கொண்டது. மக்களுக்கு காசை விட்டெறிந்து ஓட்டு வாங்கியது. பின், தன் ஆக்டோபஸ் கரத்தால், மற்ற ஊடகங்களுக்கும் பணம் கொடுத்து, தன் போக்குக்கு இழுத்து விட்டது.பேர் சொல்லும் வகையில் ஒன்றிரண்டு ஊடகங்கள் தவிர, மற்ற அனைத்தும் தற்போது அந்தக் கட்சியின் அடிமைகளாகவே தென்படுகின்றன.சமூக வலைதளங்களைத் திறந்து பார்த்தால், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என, அதன் பொய் பிரசாரம் பரவிக் கிடக்கிறது. எதிர்த்து பேசும் யு டியூபர்களை கைது செய்து மிரட்டுகிறது.பயங்கரவாதிகள், மத எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினரும் அவரவர் அறிவுக்கு எட்டிய வகையில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.காஷ்மீரில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து, பொதுவெளியில் கல்லெறியத் துாண்டுகின்றனர் பயங்கரவாதிகள்.அரசியல் மாபியாக்கள், இளம் சமுதாயத்தினருக்கு 200, 300, 500 ரூபாய் கொடுத்து, தங்களுக்குச் சாதகமாகவும், ஹிந்து மதத்தினருக்கு எதிராகவும் அவதுாறு பரப்பும் வகையில் குறுஞ்செய்தி தயாரித்து வெளியிட வைக்கின்றனர். மொபைல் போனே கதி எனக் கிடக்கும் இளைய சமுதாயமும், இவர்கள் சொல்வது தான் வேதவாக்கு என, சிந்தனை பிறழ்ந்து தடம் மாறிப் போகின்றனர்.இதையெல்லாம் மீறி, பொதுமக்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் ஊடகங்களே, எதற்கும் அஞ்சாமல் தன் பணியைச் செய்து வருகின்றன.போலி செய்திகளைப் பெரும்பாலும் பரப்பும் சமூக ஊடகங்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்தால் மட்டுமே, மக்கள் தங்களை ஆள்வதற்கு நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்; இல்லையேல் ஊழலும், கொலையும், கொள்ளையும், மத வெறியும் அதிகரிப்பதை நாமே அனுமதிப்பது போலாகி விடும்.எல்லாமே வெறும் நடிப்பு தானா கமல்?
வா.தியாகராஜன், கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் திரை உலகில் நடிகர் திலகம் சிவாஜிக்கு பின்னர், உலக நாயகனாக, தன் தனி திறமையான நடிப்பில் உச்சம் தொட்ட கமல்ஹாசன், இந்தியன் முதல் பாகத்தில், அரசு துறைகளில் லஞ்சம் வாங்குபவர்களோடு சேர்த்து, தன் மகனையே ஒழித்துக்கட்டும் தேசபக்தராக நடித்து பெயர் பெற்றவர். சமீபத்தில் வெளிவந்த, இந்தியன் படத்தின் 2வது பாகத்தில், ஏதோ தமிழகத்தில் ஊழலே நடைபெறாததுபோலவும், குஜராத் மாநிலத்தில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக போராடுவது போலவும் நடித்து தள்ளியிருக்கிறார் கமல்.தமிழகத்தில் ஊழல் நடப்பதாக காட்சிகள் அமைத்தால், திராவிட மாடல் அரசின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமே. பிறகு, தனக்கான ராஜ்யசபா சீட் முன்பதிவு ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதே என்பதால், கமல் சாமர்த்தியமாக, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் பக்கமாக கதையை நகர்த்தி சென்று விட்டார். கமல் படங்களில் இயக்குனர் என்பவர், கமல் தலையாட்டும் பொம்மையாக மட்டுமே செயல்படுவார் என்பதற்கு, இந்தியன் - 2 இயக்குனர் சங்கரும் விதிவிலக்கல்ல.அப்படி என்றால், தமிழகத்தில் வழங்கப்படும் இலவச திட்டங்களுக்கு எதிராக, 'அதான் டிவி, டார்ச் லைட்டால் உடைந்து போயிடுச்சுல்ல' என்று அன்றைக்கு ம.நீ.ம., விளம்பரத்தில நீங்க நடித்தது நடிப்புதானா கோப்பால்?கட்சி ஆரம்பித்து, 'சூப்பரான' கூட்டணி அமைத்து, காணாமல் போய்க் கொண்டிருக்கும் கமல் அவர்களே... இப்படி நீங்கள் நடிக்கும் படங்களிலும், அரசியல் பேதம் பார்த்து நடித்தால், திரையிலும் விரைவில் காணாமல் போவீர்கள் என்பதற்கு இந்தியன் - 2வுக்கு சமூக வலைதள விமர்சனங்களே சாட்சி!