உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

இதுவும் இன்பம் பொங்கும் தீபாவளி!க.ஸ்ரீதரன், கல்லிடைக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: லோக்சபா, சட்டசபை தேர்தலை விட, நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல், தூள் கிளப்புகிறது. கடந்த, 1996, 2001, 2006களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் எல்லாம், எந்த வித ஆரவாரமும் இல்லாத தேர்தல்களாக இருந்தன. ஆனால் இப்போது, படு ஆரவாரத்துடனும், கோஷ்டி மோதலுடனும், வேட்பாளர் தேர்வில் சிக்களுடனும், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. லோக்சபா, சட்டசபை தேர்தலுக்குத் தான் பணம்பட்டுவாடா நடந்தது என்றால், இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கும் பணப் பட்டுவாடா படுஜோராக நடக்கிறது. மதுக்கடைகளில் கள்ள சரக்குகள், அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. பிரியாணிக்கும், மட்டனுக்கும் பஞ்சமில்லை. வார்டிற்கு பல லட்சங்கள் செலவு செய்யப்படுகின்றன. மேலும், வேட்பாளர்களுடன் வருவோருக்கு நாள் ஒன்றிற்கு, 300 முதல், 500 ரூபாய் வரை தினசரி கூலி வழங்கப்படுகிறது. ஆனால், அக்கூட்டமே, இவர்களுக்கு ஓட்டளிக்குமா என்பது கேள்விக்குறி தான்! மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேயர், சேர்மன், தலைவர் பதவிகளுக்கு, கடும் போட்டி நிலவுகிறது. வார்டிற்கு குறைந்தது, 10 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த மூன்று உள்ளாட்சித் தேர்தலை விட, இந்த உள்ளாட்சித் தேர்தல் எதை சாதிக்கப்போகிறது; அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? இதிலும் கொள்ளை அடிக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதே, வேட்பாளர்களின் நோக்கமாக இருக்கலாம். யார் கண்டது? உற்று நோக்கினால், மத்தியில் எம்.பி., அல்லது அமைச்சரானால், பல கோடிகளை சுருட்ட முடியும் என்ற நம்பிக்கை. மாநிலத்தில், எம்.எல்.ஏ., அல்லது அமைச்சரானால், ஊர் சொத்தை வாங்கலாம், பல நிலங்களை அபகரிக்கலாம் என்ற முன் உதாரணம். இதுவே, உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை என்று பேசப்படுகிறது. ஆக, தேர்தல் என்றாலே தமிழக மக்களுக்கு திருவிழாத்தான். இந்த உள்ளாட்சித் தேர்தலும், அனைத்து தரப்பினருக்கும் இன்பம் பொங்கும் தீபாவளியாக அமையட்டும்.குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா?வெங்கட்ராமன், மத்திய சேமிப்புக் கழக ஓய்வுப் பெற்ற அலுவலர் நலச் சங்க துணைத் தலைவர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான, மத்திய சேமிப்புக் கழக ஊழியர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஓய்வூதியம் கிடைக்காததால், பெரும் துயருக்கு உள்ளாகி உள்ளனர்.மத்திய சேமிப்புக் கழகம் போலவே இயங்கும் இந்திய உணவுக் கழகம், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்துள்ள நிலையில், மத்திய சேமிப்புக் கழக ஊழியர்களுக்கு மட்டும் இத்திட்டம் அமல் செய்யாதது, ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில், விருப்ப ஓய்வூதியத் திட்டத்தை, 1994ல் அமல் செய்த போது, ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் எதிர்காலத்தை பேணும் வகையில், குடும்ப ஓய்வூதியச் சட்டம், 1971 திருத்தம் செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. 1995ல் குடும்ப ஓய்வூதியச் சட்டம் திருத்தம் செய்தபோது, 1993 முதல், 1995 டிசம்பர் 15ம் தேதி வரை ஓய்வுப் பெற்றவர்களும், குடும்ப ஓய்வூதியம் திட்டத்தில் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அலுவலகங்கள் வெளியிட்ட அறிக்கையில், 1993 மார்ச் முதல் நிறைவேற்றப்படும் குடும்ப ஓய்வூதியத்திட்டத்துக்கு, 1971 ஓய்வூதியத் திட்டத்தில் வராத மத்திய அரசு ஊழியர்களும் தகுதியானவர்கள் என கூறியது. இந்த உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்ட பின்னும், விருப்ப ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுப் பெற்ற, மத்திய சேமிப்புக் கழக ஊழியர்களுக்கு இதுவரை குடும்ப ஓய்வூதியத் திட்டம் அமல் செய்யப் படவில்லை. மத்திய சேமிப்புக் கழகம் போலவே செயல்படும், இந்திய உணவுக் கழக ஊழியர்கள், இன்றைய தேதி வரை குடும்ப ஓய்வூதியப் பலன்களைப் பெற்று வருகின்றனர். ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு உள்ள மருத்துவ உதவித் திட்டத்தில், சிகிச்சைக்காக முன்பணம் வழங்குவதும் கிடப்பிலேயே உள்ளது. ஓய்வுப் பெற்றவர்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் போது, முன்பணம் செலுத்திய பின்னரே, சிகிச்சையை துவங்குகின்றனர். எனவே, சிகிச்சைக்கு பின்னர் கொடுக்கும் மருத்துவ உதவித் திட்டத்தில், முன்பணம் கொடுக்க வேண்டும் என்பது, ஓய்வுப் பெற்ற ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை. நிர்வாகத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில், குடும்ப ஓய்வூதியத் திட்டம் உள்ளது என, சேமிப்புக் கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை பலன் கிடைக்கவில்லை. மத்திய அரசு ஊழியர்களாக பணியாற்றிய சேமிப்புக் கழக ஊழியர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது, அவர்களது அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.ஜனாதிபதி ஆட்சி போராட்டத்தை குறைக்கும்!மாயா கிருஷ்ணமூர்த்தி, கோவையிலிருந்து எழுதுகிறார்: ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி நடக்கும் போராட்டம், நீண்ட நாட்களாக தொடர்கிறது. இப்போராட்டத்தால், ஆந்திர மக்களின் தினசரி வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது, நெஞ்சு பதைக்கிறது. அலுவலகங்கள் செயல்படவில்லை, பஸ்கள் ஓடவில்லை, கடைகள் பந்த், மின்சாரம் கிடையாது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை, ரயில் நிறுத்தப் போராட்டம் வேறு துவங்கவுள்ளது. இந்நிலையில், மக்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது நினைத்துப் பார்க்கிறதா? 'ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா மாநிலம் தரவில்லையெனில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவே கிடைக்காது. தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதுதான் ஒரே வழி' என, அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகிறார். அதே நேரத்தில், 'ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது; அவ்வாறு பிரித்தால், ஜெகன் கட்சி ஆட்சியைப் பிடித்து விடும்' என, மத்திய இணை அமைச்சர் பனபகா லட்சுமி கூறுகிறார். உண்ணாவிரதம், கடையடைப்பு, ரயில் போராட்டம், அரசு பஸ்களை எரித்தல் என, அளவுக்கு மிஞ்சி அட்டூழியங்கள் நடக்கும் நேரத்தில், பேசி முடிவெடுப்பது, இப்போதைக்கு நடக்கும் காரியமல்ல. இப்பிரச்னைக்கு சுமுகமாக முடிய ஒரே வழி, மத்திய அரசு, கொஞ்சம் கூட யோசிக்காமல், ஆந்திராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அமைச்சர்கள், அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலைகளை, இரண்டே ஸ்பெஷல் ஆபீசர்கள், எவ்வித சிரமமும் இல்லாமல், திறம்பட செய்வர். ஆந்திராவில் சகஜநிலை திரும்ப வேண்டுமெனில், இது ஒன்று தான் சரியான தீர்வு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை