'ஆளைவிடுங்க சாமி...!'கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு, பா.ம.க., வேட்பாளராக மாநில துணைச் செயலர் சண்முகம் அறிவிக்கப்பட்டார். மனு தாக்கல் கடைசி நாளன்று, மதியம் 2 மணி வரை, பா.ம.க., சார்பில் யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. அதன் பின், திடீரென சண்முகத்திற்கு பதிலாக வழக்கறிஞர் தமிழரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திடீரென அறிவித்ததால், மனு தாக்கலுக்கான விண்ணப்பம் பெற்று, அவரால், 'அபிடவிட்' (உறுதி மொழி பத்திரம்) உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய முடியவில்லை. மனு தாக்கலுக்கான நேரம் முடிந்ததால், மனு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். அப்போது வெளியே நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் நிருபர்கள், 'வருத்தப்படாதீங்க...' என ஆறுதல் கூறியதும், 'அட நீங்கவேற... எனக்கு இப்பத்தான் சந்தோஷமா இருக்கு, ஆளை விடுங்க சாமி...' என்று, 'கும்பிடு' போட்டுவிட்டுச் சென்றார்.திருப்பூர் சென்டிமென்ட்!திருப்பூர் மாநகராட்சி மேயர், கவுன்சிலர் பதவிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன், வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசும் போது, 'தமிழக முதல்வரின் ராசி எண் ஏழு... திருப்பூர் மாநகராட்சியில் மேயர் வேட்பாளர் ஒருவர்; 60 கவுன்சிலர்கள் என கூட்டுத்தொகை ஏழாக வருகிறது... 'அம்மா' ராசிப்படி, திருப்பூர் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது...' என்றார். இதைக்கேட்ட தொண்டர் ஒருவர், 'திருப்பூர் ஒன்றிய கவுன்சிலுக்கான வார்டுகள் எட்டு; ஊராட்சிகளின் கூட்டுத்தொகை நான்கு என வருகிறதே... அங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு குறைந்து போகுமா...?' என, சக நண்பர்களிடம், கிண்டல் அடித்தார். அருகில் இருந்தவரோ, 'இதெல்லாம் உற்சாகப்படுத்த பேசுறதுதான்... சரியா வேலை செஞ்சா ஜெயிக்கலாம்... ஜெயிக்கிறது உறுதின்னு தூங்குனா, அப்புறம் ஐந்து வருசத்துக்கும் தூங்க வேண்டியதுதான்' என்று, 'சென்டிமென்ட்' பதில் கூறி, கிண்டலடித்தவரின் வாயை அடைத்தார்.