பொட்டு... கொட்டு...!சென்னையில், தே.மு.தி.க.,வினர் மேயர் வேட்பாளர் மற்றும் 115வது வார்டு வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தனர். அப்போது, வீடு, வீடாக பெண்களுக்கு விசிட்டிங் கார்டு அளவில் வேட்பாளரின் பெயர், கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அட்டை வழங்கப்பட்டது. அதில், 12 ஸ்டிக்கர் பொட்டுகள் அடங்கிய அட்டை ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. அந்த வார்டைச் சேர்ந்த பெண் ஒருவர், 'உங்க பெயர், சின்னம், தேர்தல் தேதி அடங்கிய கார்டு கொடுத்திருக்கீங்க... ஸ்டிக்கர் பொட்டு எதுக்கு...?' எனக் கேட்டார். அதற்கு தே.மு.தி.க., தொண்டர் ஒருவர், 'எங்க சின்னம் கொட்டு முரசு, உங்களுக்கு பொட்டு கொடுத்திருக்கோம்... நீங்க பொட்டு வைக்கும்போது, கொட்டு ஞாபகத்துக்கு வரும்... அதுக்காகத் தான்... ஹி... ஹி...' என்றார். அந்தப் பெண், 'ஓட்டு கேட்க நல்ல, 'டெக்னிக்' தான்...' என, 'கமென்ட்' அடித்துவிட்டு நகர்ந்தார்.ஆதரவை கெடுத்த மாஜி...!சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன், மீனம்பாக்கத்தில் ஜீப் பிரசாரம் செய்தார். அப்போது, தாம்பரம் முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியலிங்கம், தி.மு.க., பகுதி செயலர் இளம்பரிதி ஆகியோர் உடன் வந்தனர். வ.உ.சி., தெருவில் வந்தபோது, மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்காக மீனம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிடும் சுமதி மூர்த்தி என்பவர், அவரது ஆதரவாளர்களுடன் சுப்ரமணியனுக்கு ஆதரவு தெரிவிக்க சால்வைகளுடன் நின்றுக் கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் சுப்ரமணியன் ஜீப்பில் இருந்து இறங்கிச் சென்று, சால்வைகளை வாங்க முயன்றார். அப்போது, வைத்தியலிங்கம், 'அவர்கள் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். சால்வைகளை வாங்காதீங்க...' என தடுத்தார். மேயர் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர், 'சுயேச்சை ஒருத்தர் தேடி வந்து ஆதரவு தர்றதை, மாஜி இப்படி கெடுத்து விட்டுட்டாரே...' என புலம்பியபடி நகர்ந்தார்.