முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: இரண்டே
கால் கோடி உறுப்பினர்களை வைத்திருக்கும், உலகத்தின் ஏழாவது பெரிய கட்சி என
உருட்டி விட்டு, வெறும் 80 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்று, மக்கள்
செல்வாக்கு மட்டுமல்ல, தனக்கு தன் கட்சி உறுப்பினர்களின் ஆதரவும், மூன்றில்
ஒரு பங்குதான் இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக்கிய தொடர் தோல்வி நாயகன்
பழனிசாமி. 12 நாட்களுக்குள், பலாப்பழ சின்னத்திற்கு 3.50 லட்சம் ஓட்டுகளை
பெற்று, தோற்றாலும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிலைநாட்டியிருப்பவர்
பன்னீர்செல்வம்.பன்னீர்செல்வம் வாங்கிய 3.50 லட்சம் ஓட்டுகள்ல பா.ஜ.,வுக்காக விழுந்த ஓட்டுகள் 3 லட்சம் இருக்கும்!மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க., அணிக்கு தலைமை வகித்த முதல்வர் ஸ்டாலின் இரவு, பகலாக பணியாற்றினார். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என, மமதையோடு பேசிய பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சி நீடிக்காது.இதே, 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், 'வானவில் போன்ற இந்த கூட்டணி ஆட்சி, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்'னு அடிச்சு விட்டிருப்பாரே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மின் வாரியத்தின் இழப்பை குறைக்க மின் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல. 2022ல், 31,500 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியும் நஷ்டம் அதிகரித்துள்ளது. மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களை தான் தடுக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.அது சரி... 40க்கு 40 தொகுதிகளை அள்ளி தந்த மக்களுக்கு, 'வெகுமதி' தர முடிவு பண்ணிட்டது நல்லாவே தெரியுது!தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிக்கை: லோக்சபா தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற்று, மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, கொள்கிறேன். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.மறந்தும் கூட முதல்வர் ஸ்டாலினையும், தி.மு.க.,வையும் பாராட்டிவிட கூடாதுன்னு உறுதியா இருப்பார் போலும்!