உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: தமிழகத்தில் பா.ஜ., பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் ஆதரவு பெருகி வருகிறது. தமிழக மக்கள் வளர்ச்சி பாதையை விரும்புகின்றனர். பிரதமருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஒட்டுமொத்த பா.ஜ.,வினரும் இதைத்தான் சொல்றீங்க... தேர்தல் முடிவில் தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி அப்பட்டமா தெரிஞ்சிடும்!அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழக முதல்வர், 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். அதே நேரத்தில், அரசு மருத்துவர்களுக்கு உறுதியளித்தபடி, முதல்வர் தன் தந்தை ஆட்சியில் வெளியிட்ட அரசாணையை நிறைவேற்றாமல் இருக்கும் போது, நாங்கள் எப்படி நலமாக இருக்க முடியும் என்ற கேள்வி தான், ஒவ்வொரு மருத்துவர் மனதிலும் எழுகிறது.இப்படி விரக்தியோட டாக்டர்கள் சிகிச்சை அளித்தால், அரசு மருத்துவமனை செல்லும் நோயாளிகள் நலம் பெறுவரா என்பது சந்தேகம் தான்!தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேட்டி: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மறைமுக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பெங்களூரு நகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பாக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதை காரணம் காட்டி, மேகதாது அணை கட்ட அனுதாபம் தேட முயற்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.பெங்களூரில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லைன்னாலும் அவங்க அணை கட்ட தான் முயற்சிப்பாங்க... ஆனா, உண்மையில் இப்ப தட்டுப்பாடு இருக்குன்னு தான் கேள்வி!எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க நிறுவன தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில், தேர்தல் வாக்குறுதி களில், 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சில சான்றுகள் என்னவென்றால், ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பஸ்களில் மகளிர் கட்டணமில்லா பயணம், அரசு கல்லுாரிகளில் படிப்பை தொடரும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய், குடும்ப தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் என, அடுக்கிக் கொண்டே போகலாம். இது லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியை பலப் படுத்தும்.மாதாந்திர மின் கட்டணம், சிலிண்டர் விலை குறைக்காதது, அரசு ஊழியர்களை ஏமாற்றியதுன்னு நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலும் பெருசா இருக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ