| ADDED : மார் 15, 2024 09:36 PM
துாத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் பேட்டி: நடிகை
குஷ்பு, முதல்வர் வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தை மிக இழிவாக
பேசியிருக்கிறார். அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக
இழிவுபடுத்தியுள்ளார். உரிமை தொகை பெறும் 1.16 கோடி பெண்களையும்
இழிவுபடுத்தி குஷ்பு பேசியிருப்பது வருத்தம் தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை
நிலையை அறியாதவர் என்பதை நாம் இதன் வாயிலாக அறிய முடிகிறது.குஷ்பு
பேசியது தவறு தான்... ஆனா, இவங்க கட்சியிலும் இந்த மாதிரி வாய்த்துடுக்கு
பிரமுகர்களுக்கு பஞ்சமில்லை என்பதை அமைச்சர் மறுப்பாரா? ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேட்டி: ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி முழு வெற்றி பெறும். வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல பாதகமான சட்டங்களை திருத்தி, இந்தியாவை ஜனநாயக பாதையில் கொண்டு செல்ல முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.அது சரி... ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வின் முழக்கமான, 'நீட்' தேர்வை முதலில் ரத்து செய்ய முடியுமான்னு பாருங்க!தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் நடக்கிறது. பழைய முறைப்படி, மண்டல வாரியாக சென்னை போன்ற நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு, அதன்படி பணியாளர்களை நியமனம் செய்தால் மட்டும், அந்தந்த மாநிலங்களை சார்ந்தவர்கள் அந்தந்த மாநிலங்களில் பணியாற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும்.பா.ஜ.,வை விடுங்க... 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைந்தால் கூட இவரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமான்னு தெரியாது!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: போதைப் பொருள் விவகாரம் குறித்து, தி.மு.க., ஆட்சி மீது, கவர்னரிடம் புகார் கொடுக்க சென்ற பழனிசாமி, தன்னுடன் 'குட்கா' விஜயபாஸ்கரை கூட்டிச் செல்லாமல் தவிர்த்திருக்கிறார். அதுசரி; அவருக்கும் நெஞ்சு கூசும் தானே.தினமும் பழனிசாமியை குறி வைத்து பலமுனை தாக்குதல் நடத்தணும் என்பது தான் இவருக்கு ஒரே 'அசைன்மென்ட்' போல!