பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: அ.தி.மு.க., ஆதரவு என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தி.மு.க., கூட்டணி சுக்குநுாறாக உடைந்துவிட்டது. எங்கள் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது, கம்யூனிஸ்ட்களின் இரட்டை நிலைப்பாடு; த.வெ.க.,வுக்கு ஆதரவு, இடைத்தேர்தலி ல் தனித்து போட்டி என குழப்புகின்றனர். அவர்கள் தெளிவான மனநிலையில் இல்லை. மாநிலத்துக்கு ஒரு கொள்கை, தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடுன்னு செயல்படுறதால தான், நாடு முழுக்கவே கம்யூ., கட்சிகள் தேய்பிறையாகிட்டே போகின்றன!இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின், தமிழக தலைவர் கண்ணகி அறிக்கை: கள்ளக்குறிச்சி அருகே, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில், 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியருக்கு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய கல்வி நிலையத்திலேயே, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. மாணவியின் மரண ம் குறித்து, பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் கைதான ஆசிரியருக்கு, வழக்கு முடியும் வரை ஜாமின் கொடுக்காம, வழக்கை விரைந்து நடத்தி, அவரை ஆயுள் முழுக்க சிறையில் அடைக்கணும்! பா.ஜ., தமிழக பொதுச்செயலர் வி னோஜ் செல்வம் அறிக்கை: முதல்வர் விஜயை கண்டித்து, பல்வேறு இடங்களில் தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அமைச்சர் நிர்மல்குமாருடைய பிறப்பு குறித்து சந்தேகம் எழுப்பினார். முதல்வர் விஜய் குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஆபாசமாக விமர்சித்துள்ளார். பேச வேண்டிய, தீர்வு காண வேண்டிய மக்கள் பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு, யார் பெரிய ஆபாச பேச்சாளர் என்ற போட்டி, இந்த இரு கட்சிகள் இடையே நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளியே கிடையாதா? தமிழகத்தில் உங்க கட்சியின் ஆட்சி அமைந்தால், இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்... ஆனா, அதுக்கான சூழல் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தெரியலையே! முன்னாள் எம்.எல்.ஏ.,வும், சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான மயிலை வேலு பேச்சு: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அரசியல் என்பது திரைப்பட வசன போட்டியல்ல. அது, மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பொறுப்பு. கண்ணியம், உண்மை, கொள்கை, ஜனநாயக நம்பிக்கை இல்லாமல் நடத்தப்படும் சத்த அரசியல், சில நாட்கள் கவனத்தை பெறலாம்; ஆனால், மக்கள் நம்பிக்கையை பெறாது. த.வெ.க.,வை கண்டித்து, உங்க கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும், கண்ணியத்தை காத்துல பறக்க விட்டது ஏன்?