உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 2027க்குள் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் இலக்கு!

2027க்குள் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் இலக்கு!

ஆண்டுக்கு 35 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும், 'பெஸ்ட் மம்மி' பேக்கரியை நடத்தி வரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நரேஷ்: நாங்கள் பாரம்பரியமான விவசாய குடும்பம். ஆனால், நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் எனில், பிசினஸ் தான் சரி என்று நினைத்த என் அப்பா, சென்னைக்கு வந்து பேக்கரி தொழிலை கற்று, ராமநாதபுரத்தில் 1987ல் மம்மி பேக்கரியை துவங்கினார்.நான் பிளஸ் 1 வரை தான் படித்தேன். 2006ல் பிசினசில் நுழைந்தேன். தினமும் ஏதோ ஒரு பிரச்னையுடன் பிசினஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தான், என் போட்டியாளர்களை பார்க்க ஆரம்பித்தேன்.போட்டியாளர்கள் என்றால், உள்ளூர் பேக்கரி கடைகள் அல்ல. மெக்டொனால்ட், ஸ்டார்பக்ஸ் நிறுவனங்களை என் போட்டியாளர்கள் என நினைத்து, அவர்களின் உணவகங்களின் வாசலில் நின்று பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.பிசினசில் என் ஆதர்ச நிறுவனம் என்றால், அது ஹால்திராம் தான். மூன்று, நான்கு மாதங்கள் மும்பைக்கு சென்று, ஹால்திராம் கடைகளில் எப்படி பிசினஸ் செய்கின்றனர் என்று கவனித்தேன். சில பெரிய நிறுவனங்களில், மாதக்கணக்கில் வேலையும் பார்த்திருக்கிறேன்.அதன் நோக்கம், அவர்கள் தயாரிப்பை காப்பி அடிக்க வேண்டும் என்பதல்ல; பிராசசை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.ஒவ்வொரு முறையும் இப்படி சென்று வந்த பின், என் பிசினசில் பல விஷயங்களில் மாற்றங்களை செய்ததில், என் பேக்கரி பிசினஸ் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்தது.பேக்கரி தொழிலில் நவீன இயந்திரங்களை புகுத்தினேன். 100 பன்களை தயார் செய்ய ஒருவர் எட்டு மணி நேரம் உழைக்க வேண்டும் எனில், இயந்திரங்களில் இரண்டு மணி நேரத்தில் 1,000 பன்களை தயார் செய்ய முடியும்.ராமநாதபுரத்தில் மட்டும் செயல்பட்டு வந்த பேக்கரி பிசினசை பல நகரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, அதை ஒரு பிராண்டாக மாற்ற முடிவு செய்தேன். கடையின் பெயர், 'மம்மி' என்று இருந்ததை, 'பெஸ்ட் மம்மி' என மாற்றினேன். என் பிராண்டுக்கான வண்ணங்களை தேர்வு செய்தேன்.ராமநாதபுரத்தில், 'பிங்க்' கலர் என்றால், அது எங்கள் பெஸ்ட் மம்மி நிறுவனத்துக்கானது என்கிற அளவுக்கு, அதை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறோம்.தற்போது, 13 இடங்களில் கிளைகள் உள்ளன. 2026க்குள் இன்னும் 14 இடங்களில் கிளைகளை திறக்க வேண்டும். தற்போது, ஆண்டுக்கு 35 கோடியாக இருக்கும், 'டர்ன் ஓவரை' 2027க்குள் 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது தான் இலக்கு. படிப்படியாக இந்த பிசினசை உயர்த்தி இந்தியா முழுக்கவும், உலக அளவிலும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் தொலைநோக்கு திட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 30, 2024 16:46

உள்ளார்ந்த செய்தி நுணுக்கம் எப்படி உயர்ந்தது இந்த நிறுவனமென்று உள்ளது அருமையாக உள்ளது. சிறு தொழில் முனைவோர் இந்த நுணுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும் உயர் படியில் பயணிக்க.


Esh Ram
ஜூலை 30, 2024 10:36

நல்ல ஒரு நியூஸ் இது நிறைய பேருக்கு ஊக்கம் அளிக்கும், தினமலர் ஆசிரியர்க்கு மனமார்ந்த நன்றிகள் ...


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை