சென்னையில், தனியார் மருத்துவமனையில் பொதுநல மருத்துவராக பணியாற்றி வரும் ஜெய்சித்ரா சுரேஷ்:என் கணவர் சுரேஷ், வேலுார் வி.ஐ.டி., பல்கலையில் பேராசிரியர். 'நீங்க டாக்டர்... உங்க பையனும் டாக்டரா'ன்னு கேட்பவர்களிடம், 'என் பையன் ஒரு ஸ்பெஷல் சைல்டு'னு மறைக்காமல் சொல்லிடுவேன். நானே என் பையனை ஏத்துக்கலைன்னா வேற யாரு ஏத்துப்பாங்க. 27 வயதாகும் எங்களின் ஒரே மகன் சூரஜ் சுரேஷ், பிறவியிலேயே, 'ஆட்டிசம்' குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.என் மகனை 5 வயதில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்தோம். அங்கே உட்கார, சாப்பிட, பொது போக்குவரத்தில் பயணிக்கன்னு பல விஷயங்கள் சொல்லி கொடுத்தாங்க. படிக்க வைக்க முயற்சி பண்ணினோம்; அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.இதனால், 18 வயசுக்கு மேல பள்ளிக்கு அனுப்புறதை நிறுத்திட்டோம். தி.நகரில் தக்கர் பாபா வித்யாலயாவில் சிறப்பு குழந்தைகளுக்கு தறி நெய்ய கத்துக் கொடுத்தாங்க. கிட்டத்தட்ட நான்கு ஆண்டு அங்க போய் கத்துக்கிட்டான்.வீட்டில் ஒரு தறி செட்டப் பண்ணினோம். வீட்டில் தறி போட்டதும் மூணு, நாலு மாசத்திலேயே, 100 யோகா மேட்களை நெய்துட்டான். வாரத்தில் ஆறு நாட்கள் பிசியா நெய்துகிட்டே இருப்பான்.சூரஜ் நெய்யுற மெட்டீரியலை ஒரு டெய்லர்கிட்ட கொடுத்து, ஹேண்ட் பேக், லேப்டாப் பேக், ஸ்கார்ப், பைல், பர்ஸ், மொபைல் பவுச் மாதிரி, 20 பயன்பாட்டு பொருட்களாக உருவாக்கியிருக்கோம். சில இடங்களில் ஸ்டால் போட்டு விற்பனை செய்தோம்.இப்போது desiwea vesbysuraj.com- என்ற இணையதளத்தை துவங்கியிருக்கோம். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக்கம் செய்து, சூரஜ் மாதிரியான சிறப்பு குழந்தைகளை ஈடுபடுத்தி, அவங்களுக்கும் ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கணும்னு ஆசை. 'நீ எதுக்கு வேலைக்கு போற? வீட்ல இருந்து பையனை பார்க்க வேண்டியது தான'ன்னு நிறைய பேர் சொல்வாங்க. இவன் பொறந்ததுக்கு அப்புறம் தான் நான் பி.ஜி., படிச்சேன். என்னோட கரியரையும் அமைச்சுக்கிட்டேன். நான் வேலைக்கு போகணும்ங்கிறதுக்காக அவனை ஸ்கூலுக்கு அனுப்பாமலோ, அவனுக்கான விஷயங்களை செய்யாமலோ இருந்ததில்லை. ஆட்டிசம் குறைபாட்டுக்கு சிகிச்சை கிடையாது. அவங்களுக்கு என்ன திறன்கள் இருக்குன்னு கண்டுபிடிச்சு, அதை மேம்படுத்துறதுக்கான விஷயங்களை செய்து கொடுத்தாலே அவங்க வாழ்க்கைத்தரம் மேம்பட்டு விடும்.என் பையனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்குன்னு சொல்றதுக்கு நான் வெட்கப்படவே மாட்டேன். எல்லாரின் ஆதரவோடும், அவனை இந்த அளவுக்கு ஆளாக்கியிருக்கேன்னு பெருமையா இருக்கு. அவனாலயும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முடியும்னு நிரூபிச்சிருக்கான்.