உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வானியலாளர் சாலை மாணவர்களுக்கு போட்டு கொடுப்போம்!

வானியலாளர் சாலை மாணவர்களுக்கு போட்டு கொடுப்போம்!

அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு, வானியலை புதுமையான கற்றல் முறைகளுடன் கற்றுக்கொடுத்து வரும் அமெச்சூர் வானிய லாளரான சேலத்தைச் சேர்ந்த மேகலா: 'ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி' போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஏறக்குறைய 10,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வானியல் ஆர்வத்தையும், தகவல்களையும் வழங்கி வருகிறேன். அந்த மாணவர்கள், தங்கள் எதிர்காலமாக வானியல் துறையை நிறுவிக்கொள்ள ஆர்வமும், உத்வேகமும் கொடுப்பதே என் நோக்கம்.கணித கவுரவ பேராசிரியர் முதல், ஐ.டி., ஊழியர் வரை பல தளங்களில் பணியாற்றிய பின், இப்போது இந்த பணியில் இருக்கிறேன். சேலம் ஆஸ்ட்ரோ கிளப் வாயிலாக பல கல்லுாரிகளுக்கு சென்று வானியல் சார்ந்த பல தகவல்களை மாணவர்களுக்கு தந்து, இந்த துறையில் அவர்களது ஆர்வத்தை ஊக்குவித்தோம்.பல புகழ்பெற்ற வானியல் மையங்களில் இருந்து அறிவியலாளர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு கற்பிக்க, அவர்களுடன் உரையாட வைத்தோம்.இதன் பலனாக, இப்போது பல மாணவர்கள் எங்கள் கிளப்பில் சேர்ந்து, தாங்களாகவே தனியாக பல 'சயின்ஸ் அவுட்ரீச்' நிகழ்வுகளை நடத்துகின்றனர். தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலவகை ஆகியவை வழங்கும் வானியல் கற்றல் தகவல்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள், பல வெளிநாட்டு விஞ்ஞானிகள் தரும் வானியல் தகவல்களை மாணவர்களுக்கு கதைகள், தமிழ் அறிவியல் பாடல்கள், செயல்பாடுகள் வாயிலாக மிக எளிய முறையில் எடுத்து சொல்கிறோம்.நாங்கள் ஆரம்ப பள்ளிகளுக்கு அதிகம் செல்கிறோம். இந்த வயது குழந்தைகளின் கற்பனை வளம் ப்ரெஷ் ஆகவும், தேடுதலுடனும் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும், அது ஏன், எப்படி, அடுத்து என்ன உள்ளிட்ட கேள்விகள் அவர்களுக்கு விரிந்து கொண்டே போகும்.அதற்கு அறிவியல் பூர்வமாக தீனி போடும் ஒரு துறை தான், வானியல். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது, அதன் விரிவு உள்ளிட்டவற்றை எல்லாம், நாங்கள் கற்றுக்கொடுத்து புரிந்து கொள்வதைவிட, தங்கள் கேள்விகளாலும், சந்தேகங்களாலும் இவர்கள் அதிகம் புரிந்து கொள்வர்.எந்தளவுக்கு அவர்கள் புரிந்து கொள்கின்ற னரோ, அந்தளவுக்கு அவர்களுக்கு வானியல் பார்வை தெளிவடையும். அது தான் எங்கள் நோக்கமும்கூட. 'நீ என்னவாக போற?' என்ற கேள்விக்கு, பொதுவாக பெரும்பாலும் மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், காவலர், ஊடகவியலாளர் என்ற பதில்களையே சொல்லும் மாணவர்கள், வானியலாளர் என்று சொல்வது மிக அரிது.காரணம், அது அவர்களுக்கு காட்டப்படாத பாதை. அந்த சாலையை நம் மாணவர்களுக்கு போட்டு கொடுப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ