உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பாரம்பரிய நெல் சாகுபடி வாயிலாக நிறைவான லாபம்!

பாரம்பரிய நெல் சாகுபடி வாயிலாக நிறைவான லாபம்!

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள பதிவிரி சூரியன் கிராமத்தில், இயற்கை விவசாயம் செய்து வரும் சுடலையாண்டி:கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் நான், பாரம்பரிய நெல் சாகுபடி வாயிலாக நிறைவான லாபம் பார்த்து வருகிறேன். விவசாயம் தான் எங்களோட பூர்வீகத் தொழில். நெல், வாழை தான் இந்த பகுதியோட முதன்மையான பயிர்கள். சின்ன வயசுல எனக்கு விவசாயத்தில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.எஸ்.எஸ்.எல்.சி., வரைக்கும் படிச்சேன். அதற்கு மேல் எங்க வீட்ல என்னைப் படிக்க வைக்கல. அப்பா நடத்திக்கிட்டு வந்த மளிகைக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தேன். விவசாயமும் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருந்துச்சு. அதுலயும் கவனம் செலுத்த துவங்கினேன்.எங்க அப்பா காலத்துலயெல்லாம் அடியுரமாக மட்கின தொழுவுரத்தையும், அடுப்பு சாம்பலையும் போட்டு தான் விவசாயம் செஞ்சுகிட்டு வந்தோம். நாளடைவில், அரசாங்கமே ரசாயன உரத்தையும், பூச்சிக்கொல்லியையும் அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தியது. அதிக மகசூல் கிடைக்கும்னு சொன்னதால், எங்க ஊர்ல உள்ள எல்லா விவசாயிகளுமே ரசாயன விவசாயத்துக்கு மாறினாங்க. எல்லாரையும் போல நாங்களும் அதுக்கு மாறினோம்.பக்கத்து வயல்காரரான விவசாயி முருகன், 'இப்படி இஷ்டத்துக்கும் உரத்தை அள்ளி துாவுனா மண்ணு மலடாகிப் போகும். அப்புறம் எங்கயிருந்து மகசூல் கிடைக்கும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். ரசாயன உரங்கள் பயன்படுத்துறதை நிறுத்திவிட்டு, என்னை மாதிரி இயற்கை விவசாயம் செய்யுங்க. மண்ணும் வளமாகும், மகசூலும் பெருகும்'னு சொன்னார்.என்கிட்ட உள்ள, 2.5 ஏக்கர்லயுமே இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். 2.5 ஏக்கரில் கருத்தக்கார் சாகுபடி செய்தேன். போன ஆண்டு 2.5 ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு, 22 மூட்டை நெல் - 72 கிலோ -- வீதம் மொத்தம், 55 மூட்டை மகசூல் கிடைத்தது. 3,960 கிலோ நெல்லில், அரிசியாக மதிப்பு கூட்டியதில், 2,600 கிலோ அரிசி கிடைத்தது.கிலோ, 90 ரூபாய்னு விற்பனை செய்ததன் வாயிலாக, 2.34 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. வைக்கோல் விற்பனை வாயிலாக, 20,000 ரூபாய் கிடைத்தது. ஆக., 2.5 ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி வாயிலாக மொத்தம், 2.54 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. சாகுபடி செலவு, அரிசி மதிப்பு கூட்டல் உள்ளிட்ட செலவுகள், 92,000 ரூபாய் போக, மீதி, 1.62 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது.தொடர்புக்கு - சுடலையாண்டி: 94436 13789***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ