காஞ்சி குட்டை மாடுகளை வளர்த்து வரும், செங்கல்பட்டு மாவட்டம், பனையூர் கிராமத்தைச் சேர்ந்த, முத்துகிருஷ்ணன்:எங்கள் கிராமத்தில் மட்டுமே, 2,000 - 3,000 மாடுகள் இருக்கு. ரொம்ப சாதுவான மாடுங்க. கைக்கு அடக்கமானவை. காளைகள் மட்டுமே கொஞ்சம் மூர்க்கமாக இருக்கும். நாங்க பட்டி முறையில் தான் மாடுகளை வளர்த்துட்டு வருகிறோம். ஒரு மாடு ஒரு நாளைக்கு 1 - 2 லிட்டர் பால் கொடுக்கும். பாலை எங்க வீட்டு தேவைக்கு பயன்படுத்திக்குறோம். இந்த மாடுகள் மூலம் கிடைக்குற காளை கன்றுகளை விற்பனை செய்து வருமானமும் பார்க்கிறோம்.ஒரு டிராக்டர் எரு, 1,500 ரூபாய்க்கு விலை போகுது. எப்படியும் ஆண்டிற்கு, 30 டிராக்டர் எரு கிடைச்சிடும். அதை விற்பனை செய்தால், 45,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஆண்டிற்கு, 10 கன்றுகள் விற்பனைக்கு தேறும். ஒரு ஆண்டிலேயே விற்றால், 7,000 - 8,000 ரூபாய். அதையே இரண்டு, மூன்று ஆண்டுகள் வளர்த்து விற்றால், 15,000 ரூபாய்க்கு விலைபோகும். காளை கன்றுகளை மட்டும் தான் விற்போம். பசு மாடுகளை விற்க மாட்டோம். எப்படியும் ஆண்டிற்கு 1.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். காஞ்சி குட்டை மாடுகளுக்காக பிரத்யேக கோசாலை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன்: ஆடிட்டராக இருந்த நான், நாட்டு மாடுகள் அழியக்கூடாது. அதை காப்பாத்தணும்னு இந்த கோசாலையைத் துவங்கினேன். விவசாயிகளால் பராமரிக்க முடியாமல் இருந்த மாடுகளை ஓட்டிக்கிட்டு வந்து, அதுகளுக்கு உணவு கொடுத்து காப்பாற்றினோம். அதில் கிடைக்கிற சாணத்தை வைத்து நெல், காய்கறிகள் சாகுபடி செய்கிறோம். விபூதி மற்றும் மாடுகளின் சிறுநீரை ஆவியாக்கி குளிர வைத்து மருத்துவ குணம் மிக்க, 'அர்க்' தயாரிக்கிறேன். என் பண்ணையில் விவசாய பணியாளர்கள் 13 பேர் இருக்காங்க. உணவு தயாரிக்க மாட்டுச் சாணத்தில் இருந்து எடுக்கிற கோபர் காஸ்தான் பயன்படுத்துகிறேன். நமக்கு தேவைப்படும் அளவுக்கு தொட்டியை உருவாக்கி, அதன் மேற்புறத்திலிருந்து சாணத்தை கரைத்து ஊற்றினால், உள்ளே செல்லும் சாணக்கரைசல் மட்கி வாயுவாக வெளியேறும்.இதுக்கான அமைப்பை உருவாக்கிட்டா போதும். அதில் இருந்து காஸ் கிடைச்சிட்டு இருக்கும். தொட்டியின் அடியில் தங்கும் சிலரியை இயற்கை உரமாக பயன்படுத்திக்கலாம்.இந்தக் காஸை அர்க் தயாரிப்பில், மாட்டு சிறுநீரை சூடு செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்பிராணி, அகல் விளக்குகள், சோப்பு என்று நிறைய பொருட்களை தயாரிக்கலாம். விபூதி, அர்க் சம்பந்தமான பயிற்சி தேவைப்படுபவர்களுக்கும் வழிகாட்டுகிறோம்.தொடர்புக்கு:ராதாகிருஷ்ணன் - 98400 41151.