உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / காலடி வைத்தாலே, கப்பம் வசூலிக்கும் போலீஸ் ஸ்டேஷன்!

காலடி வைத்தாலே, கப்பம் வசூலிக்கும் போலீஸ் ஸ்டேஷன்!

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''சீக்கிரமே இடமாறுதல் அறிவிப்பு வருது பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த துறையில, யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகள்ல, வார்டன்களா இருக்கிறவங்க மற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவங்க, 10 வருஷத்துக்கும் மேலா அந்த பணியில நீடிக்கிறாங்க... இவங்கள்ல பலரும் விடுதிக்கு வாரத்துல ஒண்ணு, ரெண்டு நாள் மட்டும் வந்து எட்டி பார்த்துட்டு, சொந்த வேலைகளை பார்க்க போயிடுறாங்க பா...''இதனால, அவங்களை எல்லாம் மறுபடியும் ஆசிரியர் பணிக்கு அனுப்ப, துறையின் அதிகாரிகள் முடிவு செஞ்சிருக்காங்க... இப்ப, 10 வருஷத்துக்கு மேலாக இருக்கிற வார்டன்கள் பட்டியலை எடுத்துட்டு இருக்காங்க... சீக்கிரமே, இவங்களுக்கு இடமாறுதல் உத்தரவு வெளியாகும் பா...'' என்றார், அன்வர்பாய்.''வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகள் முடங்கி கிடக்கறது ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார் குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''போன வருஷம் டிசம்பர்ல சென்னையில் பெய்த பெருமழையில, நகரமே வெள்ளக்காடா மாறிடுத்தோல்லியோ... வழக்கமா, வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மத்தியில துவங்கும் ஓய்...''அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு... இந்த வருஷமும் சென்னையில் வெள்ள அபாயம் வந்துடாம தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தா ஓய்...''இதன்படி, பகிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் ஆறுகள் வழியா மழை நீர் கடலில் ஈசியா கலக்கும் வகையில, துார் வாரும் பணிகளை நடத்தி முடிக்க நகராட்சி நிர்வாக துறை சார்புல, 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கா... ஆனா, நீர்நிலைகளை பராமரிக்கற பொறுப்பு, நீர்வளத்துறையிடம் தான் இருக்கு ஓய்...''நிதி ஒதுக்கிய தகவல் தெரிஞ்சதும், நீர்வளத்துறை அதிகாரிகள் அவசர அவசரமா, 'டெண்டர்' விட்டு, கான்ட்ராக்டர்களையும் தேர்வு பண்ணிட்டா... ஆனா, இன்னும் வேலைகளை துவங்கல ஓய்...''மேற்கண்ட ரெண்டு துறை அதிகாரிகளுக்கு மத்தியில ஒருங்கிணைப்பு இல்லாம பணிகளை கிடப்புல போட்டிருக்கா... சீக்கிரமே பணிகளை துவங்கி, மக்களை வெள்ள அபாயத்துல இருந்து காப்பாத்தணும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''காலடி எடுத்து வச்சாலே, 'கப்பம்' கட்டணும் வே...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அண்ணாச்சி.''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''சேலம் மாவட்டம், தேவூர் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு அதிகாரி இருக்காரு... இவர் இங்க வந்த நாள்ல இருந்து, கட்டப்பஞ்சாயத்துகள் ஸ்டேஷனுக்கு வெளியில நடக்கிறது இல்ல வே... எல்லாமே ஸ்டேஷனுக்கு உள்ளதான் நடக்கு...''புகார் தர வந்தவங்க வழக்கு போட சொன்னாலும், அதுக்கு உரிய ரேட்டை அதிகாரிக்கு அழுத்தணும்... 'வழக்கு வேண்டாம்; நாங்க சமாதானமா போயிடுதோம் சார்'னு சொன்னாலும், அதிகாரி விட மாட்டாரு வே...''அதாவது, ஸ்டேஷனுக்குள்ள வந்துட்டாலே, கப்பம் கட்டாம போக முடியாதுங்கிற மாதிரி, பணத்தை கறந்துட்டு தான் அனுப்புதாரு... இதனால, இந்த ஸ்டேஷன் பக்கம் போகவே பொதுமக்கள் பயப்படுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை