உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குறுக்கு விசாரணையால் குமுறும் தி.மு.க., நிர்வாகிகள்!

குறுக்கு விசாரணையால் குமுறும் தி.மு.க., நிர்வாகிகள்!

''அதிகாரி பணியிடத்தைநிரப்பாம இழுத்தடிக்கறா ஓய்...'' என, பெஞ்சில் அமர்ந்ததும் முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''மதுரை காமராஜ் பல்கலையில், 'யூனிவர்சிட்டி இன்ஜினியர்' எனப்படும் யு.இ., பணியிடம் பல வருஷமா காலியாவே கிடக்கு... பல்கலை கட்டடங்கள் பராமரிப்பு, புதிய வகுப்பறைகள் கட்டறது, கட்டுமான பணிக்கு ஒப்புதல் தரது, பர்னிச்சர்கள் வாங்கறதுன்னு கல்வி சாராத பணிகள்ல இந்த அதிகாரி பங்கு முக்கியமானது ஓய்...''பொதுவா, இந்த பணியிடத்துல அனுபவம் வாய்ந்த பொதுப்பணித் துறை அல்லது மாநகராட்சி முதன்மை பொறியாளர்களை தான் நியமிப்பா... இப்ப, ஜூனியர் சிவில் இன்ஜினியர் ஒருத்தர், கூடுதல் பொறுப்பா இருக்கார் ஓய்...''இதனால, பல்கலையில பல முக்கிய பணிகள் முடங்கி கிடக்கு... விலை மதிப்பில்லாத பல உபகரணங்கள் திருடு போயிடறது... இதை எல்லாம், 'பஞ்சாயத்து' பேசி முடிச்சுடறா ஓய்...''இந்த பணியிடத்தை நிரப்ப எத்தனையோ துணைவேந்தர்கள் முயற்சி எடுத்தா... ஆனாலும், பல்கலையை கட்டுப்பாட்டுல வச்சுண்டுஇருக்கற சிலர், உயர்கல்வித் துறையில சிலரை கைக்குள்ள போட்டுண்டு, இந்த பணியிடத்தை நிரப்ப நந்தியா நிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எப்படா தேர்தல் நடைமுறைகள் முடியும்னு காத்துட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சேலம் மாவட்டம், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி, போலீசாருக்கு டூட்டி போடுறதுல பாரபட்சம் காட்டுறாரு... தனக்கு வேண்டியவங்களுக்கு லைட் டூட்டியும், வேண்டாதவங்களை ஹெவி டூட்டியும் போட்டு, 'டார்ச்சர்' பண்றாரு பா...''அதுவும் இல்லாம, நியாயமான விஷயங்களுக்காக ஆளுங்கட்சியினர் ஏதாவது வழக்குல சிபாரிசுக்கு வந்தாலும், அதை ஏத்துக்க மாட்டேங்கிறாரு... ''இதனால கடுப்புல இருக்கிற அவங்க, தேர்தல் நடைமுறைகள் முடிஞ்சதும், இடைப்பாடியில இருந்து அவரை துாக்கியடிக்க முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அருண்குமார், கொஞ்சம் தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''குறுக்கு விசாரணையால, நொந்து போயிருக்காவ வே...'' என்றார்.''ஏதாவது கோர்ட் விவகாரமா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''இல்ல... திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., வுல, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூணு சட்டசபை தொகுதிகள் வருது... லோக்சபா தேர்தல் செலவுக்காக இந்த தொகுதி நிர்வாகிகளிடம் குடுத்த பணம், சரியா செலவு செய்யப்படலை, குறிப்பா வாக்காளர்களுக்கு சரியா பட்டுவாடா செய்யப்படலைன்னு புகார்கள் வந்திருக்கு வே...''இதனால, மாவட்ட செயலரான அமைச்சர் மகேஷ், 'யார், யாருக்கு பணம் கொடுத்தீங்க... அவங்க மொபைல் போன் நம்பர்களை எல்லாம் தாங்க'ன்னு நிர்வாகிகளிடம் கேட்டிருக்காரு வே...''இதனால, நிர்வாகிகள் அதிருப்தியில இருக்காவ... 'வாக்காளர்களிடம் போன் பண்ணி கேட்டா, நாளைக்கு எங்களை அவங்க மதிப்பாங்களா... நாங்க ஏற்கனவே வசதியா தான் இருக்கோம்... ''சில லட்சங்களை குடுத்துட்டு, எங்களை குற்றவாளி மாதிரி குறுக்கு விசாரணைநடத்தி அசிங்கப்படுத்துறதா'ன்னு குமுறிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நாயர் கல்லாவை நோக்கி நகர, பெரியவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rangarajan
மே 24, 2024 07:53

எப்படி இப்படி செய்திகளை வெளியிடமுடிகிறது வாழ்க வாழ்க வாழ்க


D.Ambujavalli
மே 24, 2024 06:39

முகவரி, போன் நம்பர் வாங்கிக்கொண்டு கொடுத்திருந்தாலும், வாக்காளர்கள் இவர்களுக்குத்தான் ஓட் போட்டிருப்பார்களா ? மற்ற கட்சிகளும் கொடுத்திருக்காதா? எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருந்தாலும், நோட்டாவுக்கு குத்தியிருந்தாலும் எப்படிக் கண்டு பிடிப்பது? இத்தனை ஓட்டைகள் இருப்பது தெரிந்து நிர்வாகிகளும் கொடுத்ததில் கணிசமாக அமுக்கி விடுகிறார்கள் இதில் விசாரணை என்ன வேண்டிக்கிடக்கிறது ?


மேலும் செய்திகள்