உள்ளூர் செய்திகள்

அளப்புறாங்கப்பா! (1)

முன்னொரு காலத்தில் செம்பருத்தி என்ற நாட்டை சிவந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். சுவையான கதைகளைக் கேட்பதில், மிகுந்த விருப்பம் கொண்டிருந்தான் அவன்.'நிறைய கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்; யாருக்கும் பரிசு தரக் கூடாது. பரிசு தராததற்காக யாரும் தன்னைக் குறை சொல்லக் கூடாது. அதற்கு என்ன செய்வது?' என சிந்தித்தான்.சூழ்ச்சி நிறைந்த அவனுக்கு நல்ல வழி ஒன்று தோன்றியது.முரசு அடிப்பவனை அழைத்து, ''அரசர் அளப்புக் கதைகளைக் கேட்க விரும்புகிறார். யார் வேண்டுமானாலும் அரசவைக்கு வந்து அளப்புக்கதை சொல்லலாம். அவர் சொல்லும் கதை யாரும் நம்ப முடியாத அளப்புக்கதையாக இருக்க வேண்டும். அந்தக்கதையை அரசர் அளப்புக்கதை, பொய் கதை என்று நம்ப வேண்டும். அப்படி அவர் நம்பினால், ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவி,'' என்றான்.முரசு அடிப்பவனும் இந்தச் செய்தியை நாடெங்கும் தெரிவித்தான். இதைக் கேட்ட அண்ட புளுகர்கள், ஆகாசப் புளுகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களுக்கே ஆயிரம் பொற்காசு பரிசு கிடைக்கப் போவதாக நம்பினர்.அவர்கள் எல்லாரும், கதை சொல்வதற்காக அரசவைக்கு வந்தனர்.அவர்களைப் பார்த்த அரசன், 'என்னிடம் ஏமாற இத்தனை ஏமாளிகளா? இந்த நாட்டில் முட்டாள்களுக்குப் பஞ்சமே இல்லை...' என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான்.முதலாமவரை அழைத்து, ''உங்கள் அளப்புக் கதையைச் சொல்லுங்கள். அதை நான் நம்பாவிட்டால் உங்களுக்கு பொற்காசு பரிசு,'' என்று இனிமையாகப் பேசினான்.''அரசே! என் வாழ்க்கையில் உண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் அதை நம்பப் போவது இல்லை. என் தாயார் நாள்தோறும் கடலுக்குச் சென்று நீராடுவது வழக்கம். அன்றும் அவர் கடலை நோக்கிச் சென்றார். நான் அப்போது அவர் வயிற்றில் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தேன்.கடலில் இறங்கிய என் தாய், தன்னை மறந்து நீந்தத் தொடங்கினார். நீந்திக் கொண்டே கடலின் ஆழமான பகுதிக்குச் சென்றார்.கண்ணுக்கு எட்டிய வரையில், அவரைத் தவிர யாரும் இல்லை. கரையும் வெகு தொலைவில் இருந்தது.திடீரென்று கடலே கலங்கியது. பனை மர உயரத்திற்குப் பேரலைகள் எழுந்தன. மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த என் தாய் எதையும் கவனிக்கவில்லை. வாலை அசைத்த படி பெரிய திமிங்கிலம் ஒன்று என் தாயாரை நோக்கி வந்தது.அந்தத் திமிங்கிலம் வருவதை என் தாயார் பார்க்கவில்லை. என் தாயாரை விழுங்கு வதற்காக திமிங்கிலம் நெருங்கியது. தன் பெரிய வாயைத் திறந்தது. அவ்வளவு பெரிய வாயை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை. இருண்ட குகை போல அதன் வாய் இருந்தது. பத்து யானைகள் ஒன்றாக நுழையும் அளவு பெரிதாக இருந்தது.என் தாயார்க்கு வந்த ஆபத்து எனக்கு தெரிந்தது. சிறிது தாமதித்தாலும் அது என் தாயாரை விழுங்கி விடும். என்ன செய்வது என்று சிந்திக்க எனக்கு நேரம் இல்லை. விரைந்து செயல்பட்டேன். மின்னலைப் போல என் தாயாரின் வயிற்றில் இருந்து வெளியே வந்தேன். சிங்கம் போலப் பெரிதாக கர்ஜனை செய்தேன். என் கர்ஜனை கடலெங்கும் எதிரொலித்தது.எங்கிருந்து குரல் வருகிறது என்று அந்தத் திமிங்கிலம், நாலா பக்கமும் பார்த்தது. என்னைப் பார்த்துவிட்ட அது தன் கண்கள் சிவந்து, கோபத்துடன் என்னை நோக்கி வந்தது.என் தாயார்க்கு இனி ஆபத்து இல்லை. இந்தத் திமிங்கிலத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். என் அருகே வந்த அது என்னை விழுங்கு வதற்காக வாயைத் திறந்தது. நான் அதற்குள் முந்திக் கொண்டேன். அதன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டேன். என் கை அதன் முகத்தைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்றது.வேதனை தாங்க முடியாமல், துடித்தது. கடலே கலங்குமாறு மேலும், கீழும் புரண்டது. சிறிது நேரத்தில் அதன் துடிப்பு அடங்கியது.அது இறந்து விட்டது என்பதை அறிந்தேன்.அங்கே நடந்தது எதுவும் அறியாமல் என் தாயார் நீந்திக் கொண்டிருந்தார். மீண்டும் அவர் வயிற்றுக்குள் சென்றேன்.உரிய காலம் வந்ததும் அவர் என்னைப் பெற்று எடுத்தார். நான் அவரைக் காப்பாற்றியது இன்றுவரை அவருக்குத் தெரியாது,'' என்றார்.அவையில் இருந்தவர்கள், ''வயிற்றுக்குள் ஐந்து மாதக் குழந்தை முழுமையாக வளர்ந்து இருக்காதே, அந்த குழந்தை வெளியே வந்து திமிங்கிலத்தைச் கொன்றதாகச் சொல்கிறாரே. இப்படிப்பட்ட அளப்புக் கதையை யாரும் கேட்டது இல்லை. இதைக் கண்டிப்பாக அரசர் நம்ப மாட்டார். இவருக்குத்தான் பரிசு கிடைக்கப் போகிறது,'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.தன் மீசையைத் தடவிய அரசன், ''உங்கள் கதையை நான் முழுமையாக நம்புகிறேன். நீங்கள் தாயின் வயிற்றில் குழந்தையாக இருந்த போது திமிங்கிலத்தைக் கொன்று இருப்பீர்கள். சில குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே வீரத்தை வெளிப்படுத்தி உள்ளன. அதே போல நீங்களும் வீரத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். இந்தக் கதையில் ஐயப்படுவதற்கு என்ன உள்ளது?'' என்று கேட்டான்.கதை சொன்னவர் முகம் சுருங்கியது. ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றார்.அடுத்ததாக இன்னொருவர் வந்தார். யாருமே நம்ப இயலாத அளப்புக் கதை சொன்னார்.''இந்தக் கதையும் நடந்து இருக்கும்... நான் நம்புகிறேன்,'' என்றான் அரசன்.இப்படியே ஒவ்வொரு வராக வந்து அளப்புக் கதையை சொன்னார்கள்.''உங்கள் கதையை நான் நம்புகிறேன். இப்படி நடந்து இருக்க வாய்ப்பு உண்டு,'' என்ற வழக்கமான பதிலையே சொன்னார் அரசன்.வரிசையில் கடைசியாக இருந்தவர் அங்கே நடந்ததை எல்லாம் கவனித்தார். அரசனின் சூழ்ச்சி அவருக்குப் புரிந்தது.நான் எப்படிப்பட்ட கதை சொன்னாலும், 'இந்தக் கதை நடந்து இருக்கும். நான் நம்புகிறேன்,'' என்றே பதில் சொல்லப் போகிறான் அரசன்.தனக்குப் பரிசு கிடைக்கப் போவது இல்லை. என்ன செய்வது என்று சிந்தித்தார்.அறிவு நிறைந்த அவருக்கு அருமையான கதை ஒன்று தோன்றியது.சிரித்தபடியே அவரை அழைத்தான் அரசன்.''இந்தப் போட்டியில் எல்லாருமே தோற்று விட்டார்கள். நீங்களாவது என்னால் நம்ப முடியாத அளப்புக் கதையைச் சொல்லுங்கள். பரிசைப் பெற்று செல்லுங்கள்,'' என்றான்.அரசன் குரலில் கேலி தெரிந்தது.'உனக்கு நல்ல பாடம் கற்றுத் தருகிறேன்' என்று நினைத்தார் கதை சொல்ல வந்தவர்.-1 தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !