மாறியது நெஞ்சம்!
பார்த்திபன் உழைக்காமலே உடலை வளர்த்தவன். இந்த லட்சணத்தில் அவனுக்கு திருமணம் வேறு நடந்து விட்டது. குடும்பத்தை எப்படி நடத்துவது? திருட்டுத் தொழில்தான் அவனுக்குக் கை கொடுத்தது. எங்கேயும் அகப்பட்டுக் கொள்ளாமல் சாமர்த்தியமாகத் திருடுவான். ராஜா மாதிரி தோற்றம் உள்ள அவனை யாரும் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்.ஒரு நாள் பார்த்திபன் தன் மனைவி கனகாவுடன் வெளியூருக்குப் போய் விட்டு, ஒரு காட்டு வழியாக ஊருக்குத் திரும்பினாள். வெயில் கடுமையாக இருந்தது. அதனால் அவனும், கனகாவும் ஒரு காட்டுக் கோயிலில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் கையில் பளபளக்கும் வைர மாலையுடன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் பார்த்திபன்.அந்த வைர மாலை இலட்சக் கணக்கில் போகும். 'அதை அந்தத் திருடனிடமிருந்து அபகரித்து விட்டால், ஆயுள் முழுவதுக்கும் கவலை இல்லை' என்று தீர்மானித்தான்.''கனகா! அதோ ஓடுகிற திருடனைப் பார்த்தாயா? யாரிடம் இருந்தோ விலை உயர்ந்த வைர மாலையைத் திருடிச் கொண்டு ஓடுகிறான். அவனை விடக் கூடாது,'' என்று கூறி விட்டு, திருடனைத் துரத்தி கொண்டு ஓடினான். சிறிது நேரத்தில், அந்தத் திருடனைப் பிடித்து நன்றாக உதைத்து வைர மாலையைப் பறித்துக் கொண்டான்.அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த ஏழெட்டுப் பேர்கள் திருடனை நையப் புடைத்தனர்.பிறகு அவனை ஓடவிடாமல் பிடித்துக் கொண்டனர்.அவர்கள் யார் என்று புரியாமல் விழித்தான் பார்த்திபன்.அச்சமயம் கூட்டத்தில் இருந்த ஒருவன், பார்த்திபனைப் பார்த்து, ''ஐயா! எங்கள் ஜமீன்தார் இந்தக் காட்டுக்கு வேட்டையாட வந்தார். அவர் களைப்போடு உறங்கிக் கொண்டிருந்த பொழுது, இந்தத் திருடன் ஜமீந்தாரின் கழுத்திலிருந்து வைர மாலையை அறுத்துக் கொண்டு வந்து விட்டான். நல்ல வேளையாக நீங்கள் திருடனைப் பிடித்துக் கொண்டீர்கள்!'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஜமீந்தாரும் அங்கு வந்து விட்டார்.கனகாவும் அங்கு வந்து சேர்ந்தாள்.ஜமீந்தார் பார்த்திபனை நோக்கி, ''நீ நல்ல சமயத்தில் திருடனைப் பிடித்து வைர மாலையை காப்பாற்றினாய். உன்னைப் போன்ற நல்லவர்கள் இந்த உலகத்தில் இருப்பதால்தான் மழை பெய்கிறது. உன்னைப் பாராட்டுகிறேன். உனக்குத் தகுந்த பரிசு அளிக்க விரும்புகிறேன்,'' என்றார்.பார்த்திபன் சிந்தித்தான். 'திருடப் போன எனக்கு, உண்மை தெரியாமல் இவ்வளவு பாராட்டு கிடைக்கிறது. திருடனாக வாழ்க்கையை நடத்தினால் இவனைப் போலப் பிடிபட்டு, உதைபட்டு அவமானப் பட வேண்டும். அதனால் இனித் திருடக் கூடாது' என்று முடிவு செய்தான்.''பிரபு! நான் மானமாக வாழ எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுங்கள், அதுதான் நீங்கள் எனக்கு அளிக்கும் பரிசு,'' என்றான் பார்த்திபன்.அப்படியே செய்தார் ஜமீன்தார்.***