உள்ளூர் செய்திகள்

அர்ப்பணிப்பு!

திருவள்ளூர் மாவட்டம், கத்திவாக்கம், தனியார் பள்ளியில், 2010ல், 7ம் வகுப்பு சேர்ந்த போது, படிப்பில் சரியாக ஆர்வம் காட்ட மாட்டேன். ஆசிரியர்களின் கண்டிப்பு மற்றும் தண்டனையால் ஆர்வம் மேலும் குறைந்தது.திணறி தவித்த வேளையில், 'படிப்பு அறவே வராது' என, முத்திரை குத்தி என்னை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோரிடம் வலியுறுத்தியது பள்ளி நிர்வாகம். அதன்படி, கத்திவாக்கம் அரசு பள்ளியில் சேர்ந்தேன்.ஒரு நாள் பிற்பகல் அறிவியல் வகுப்பில் அன்றைய பாடத்தை வாசிக்க சொன்னார், ஆசிரியை தேவச்செல்வி. பயந்தபடி, திக்கி திணறி அரைகுறையாக வாசித்தேன்.திட்டி கண்டிப்பார் என எண்ணியிருந்த என்னிடம், 'அடுத்தமுறை இன்னும் நல்லா வாசிக்கணும்...' என பாராட்டியது மிகவும் உற்சாகம் தந்தது.மாலை வீடு திரும்பியவுடன், அறிவியல் பாடத்தை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். எப்படியாவது, நற்பெயரை தக்க வைக்க உறுதி எடுத்தேன். ஆரம்பத்தில் அதை நிறைவேற்ற இயலாமல் சிரமப்பட்டேன். திரும்ப திரும்ப படித்து பாராட்டுதலைப் பெற்றேன். நாளடைவில், எல்லா பாடங்களிலும் ஆர்வமுடன் சாதித்தேன். இப்போது எனக்கு, 25 வயதாகிறது; படிப்பை சிறப்பாக முடித்து, நல்ல பணியில் இருக்கிறேன். இதற்கு உந்திய அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பை என்றும் மறவேன்!- ரகுபதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !