பழசை மறக்காதீர்கள்!
பூவரசு மரத்தில் ஏராளமான குருவிகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்த பூவரசு மரத்தில் காகம் ஒன்றும் வசித்து வந்தது.ஒருநாள் அந்த காகமானது குருவிகளை பார்த்து, ''குருவிகளே! நீங்கள் எல்லாரும் எந்த நேரமும் இரைத் தேடிவிட்டு இந்த மரத்தில் அமர்ந்தே பொழுதைக் கழிக்கிறீர்களே! நானும் உங்களைப் போன்று இரைத் தேடிக் கொண்டு எங்கெல்லாமோ சுற்றி வருகிறேன். என்னோடு நீங்களும் வந்தால் நான் உங்களுக்கு இயற்கை காட்சிகளை எல்லாம் காட்டுவேன். எனவே, நீங்கள் தாராளமாக என்னோடு வாருங்கள்,'' என்றது காகம்.குருவிகள் எல்லாம் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. பின்னர் அவைகள் எல்லாம் காகத்தை நோக்கின.''காகமே! நாங்கள் எல்லாரும் கலந்து பேசி உன்னோடு வரலாமா அல்லது வேண்டாமா என்பதை தெரிவிக்கிறோம்,'' என்றன குருவிகள்.''சரி குருவிகளே! நீங்கள் உங்கள் விருப்பப் படியே செய்யுங்கள்! நான் கிளம்புகிறேன். நாம் மாலையில் சந்திக்கலாம்!'' என்று கூறியபடியே பறந்து சென்றது காகம்.காகம் அந்த பூவரசு மரத்தை விட்டுப் பறந்து சென்றதும், குருவிகள் எல்லாம் தங்களுக்குள் உரையாடலைத் தொடர்ந்தன.ஒரு குருவியானது மற்றொரு குருவியை பார்த்து, ''நண்பனே! அந்தக் காகமானது நம்மை அழைக்கிறதே! நாம் அதன் அழைப்புக்கு இணங்கி அதனோடு இயற்கைக் காட்சிகளை பார்க்கச் செல்வதில் எந்தத் தவறும் இல்லையே...!'' என்றது.''நண்பர்களே! நாம் எத்தனை நாட்கள்தான் இரைத் தேடிவிட்டு இந்த பூவரசு மரத்திலேயே அடைந்து கிடைப்பது! எப்படியாவது நாம் இந்தக் காகத்தோடு செல்வோம். அவ்வாறு சென்றால் நம் மனமானது மகிழ்ச்சியடையும் என்று எனக்குத் தோன்றுகிறது,'' என்றது வேறொரு குருவி.''எனக்கும், இயற்கைக் காட்சிகளை எல்லாம் காண வேண்டுமென்று ஆவலாகயிருக்கிறது. எனவே, நாம் எல்லாரும் கூட்டமாக காகத்தோடு செல்வதால் நமக்கு எந்த ஆபத்துமே ஏற்படாது என்று தோன்றுகிறது,'' என்றது மற்றொரு குருவி.குருவிகள் எல்லாம் இவ்வாறு கலந்து பேசி, முடிவெடுத்து காகத்திடம் செல்வதற்கு தயாராகின.மாலையில் பூவரசு மரத்தை வந்தடைந்தது காகம்.''குருவி நண்பர்களே! நீங்கள் மட்டும் என்னோடு இன்று வந்திருந்தால் விதவிதமான இயற்கை காட்சிகளை எல்லாம் பார்த்து ரசித்திருக்கலாம். அப்படியொரு இயற்கை காட்சியினை நீங்கள் உங்கள் வாழ்நாளில் எங்குமே பார்த்திருக்க முடியாது,'' என்றது.''காகமே! நாங்கள் எல்லாரும் கலந்து பேசி இன்று ஓர் முடிவுக்கு வந்துவிட்டோம்! அது என்னவென்றால், நாளை நாங்கள் எல்லாரும் உன்னோடு வருகிறோம். நாம் எல்லாருமாக சேர்ந்து இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்,'' என்றன குருவிகள்.''அப்பாடா! இப்போதுதான் எனக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது. நீங்கள் இப்படியொரு வார்த்தையினை சொல்ல மாட்டீர்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நாளை நான் உங்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். அந்த இடங்களை எல்லாம் நீங்கள் பார்த்தால் பரவசமடைவீர்கள்,'' என்றது காகம்.மறுநாள் பொழுது விடிந்ததும், குருவிகளை அழைத்துக் கொண்டு அந்தப் பூவரசு மரத்தை விட்டுப் பறந்து சென்றது காகம்.காகமும், குருவிகளும் ஓர் கடற்கரையை வந்தடைந்தன. அந்தக் கடற்கரையினைக் கண்டதும் குருவிகள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தன.''காகமே! காகமே! இத்தனை அழகான இயற்கை காட்சிகளை எல்லாம் நாங்கள் இத்தனை நாட்களும் பார்க்காமல் இருந்து விட்டோமே என்பதற்காக வெட்கப்படுகிறோம்!'' என்றன குருவிகள்.''நண்பர்களே நீங்கள் இதற்கே வெட்கப் பட்டால் எப்படி? இன்னும் ஏராளமான காட்சிகளைப் பார்த்திடவேண்டுமே!'' என்றது காகம்.அதன் பின்னர் அந்த காகமானது குருவிகளை அழைத்துக் கொண்டு கடற்கரையை விட்டுப் பறந்தது.சிறிது நேரத்தில் காகமும், குருவிகளும் மலையடிவாரத்தை வந்தடைந்தன.அங்கிருக்கும் உயர்ந்த மலையினைப் பார்த்த காகமானது, குருவிகளையும் உயரத்தில் பார்க்கச் சொன்னது.அந்த மலை உச்சியைப் பார்த்த குருவிகளோ, 'ஆ'வென வாயைப் பிளந்தன.நீண்ட நேரமாக அந்தக் குருவிகள் மகிழ்ச்சியுடன் மலையடிவாரத்தையே சுற்றிக் கொண்டிருந்தன.பின்னர் அவைகள் காகத்தை 'ஆஹா... ஓஹோ' என்று புகழத் தொடங்கின.சிறிது நேரத்தில் காகமானது குருவிகளை அழைத்துக் கொண்டு ஓர் மலையருவிற்குச் சென்றது.மலையிலிருந்து அருவி நீர் விழுகின்ற காட்சியைப் பார்த்ததும் காகமானது குருவிகளை நோக்கியது.''குருவிகளே! நீங்கள் இந்தக் கண் கொள்ளாக்காட்சியினைப் பாருங்கள்! நீங்கள் மட்டும் அந்த பூவரசு மரத்திலேயே அடைபட்டுக் கொண்டிருந்தால் இந்தக் காட்சியினை காணமுடியுமா?'' என்று கேட்டது.''ஆமாம்! காகமே! உண்மைதான்! நாங்கள் பூவரசு மரத்திலேயே அடைப்பட்டிருந்தால், இத்தகைய இயற்கைக் காட்சிகளை எல்லாம் பார்த்திருக்கமுடியாது. உன்னோடு வந்ததால் தான் இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்க முடிந்தது. இனிமேல் தொடர்ந்து இந்தக் காட்சிகளை நாங்கள் பார்த்து மகிழவேண்டும்! அதற்கு நீ தினமும் எங்களை அழைத்து செல்ல வேண்டும்,'' என்றன குருவிகள்.''அதனாலென்ன தினம், தினம் உங்களை நான் தாராளமாக இவ்விடத்திற்கு அழைத்து வருகிறேன்,'' என்றது காகம்.அதன் பின்னர் காகமும், குருவிகளும் மீண்டும் பூவரசு மரத்தை நோக்கிப் பறந்து சென்றன. சிறிது நேரத்தில் அவை தங்கள் கூடுகளில் அடைந்து கொண்டன.மறுநாள் காகமானது காலையில் எழுந்ததும், குருவிகளை அழைத்துச் செல்ல புறப்பட்டது.ஆனால், கூட்டில் குருவிகள் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டது.உடனே அது சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பின்னர், அந்த மரத்தை விட்டு வேகமாக பறந்து சென்றது. அங்கிருந்து பறந்து சென்ற காகமானது கடற்கரையை வந்தடைந்தது.கடற்கரையில் குருவிகள் எல்லாம் கூட்டமாக நின்றபடி தங்களுக்குள் ஏதோ சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டதும் அவைகளின் அருகே சென்றது. ஆனால், காகம் வந்து நிற்பதை அந்தக் குருவிகள் கண்டு கொள்ளவில்லை.அவைகள் காகத்தைப் பார்த்தும், பார்க்காதது போன்று தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கின.குருவிகள் எல்லாம் எதற்காக இப்படி சண்டையிடுகின்றன என்பதை அறிந்து கொள்ள காகத்திற்கு ஆவலாகயிருந்தது.உடனே அவைகளின் அருகே நின்றபடி அவைகள் போடுகின்ற சண்டையைக் கவனித்தது.குருவிகளில் ஒன்று, ''நாம் வசிப்பதற்கு ஏற்ற இடம் இந்தக் கடற்கரைதான்,'' என்றது.மற்றொரு குருவியோ, ''இல்லை... இல்லை... நாம் வசிப்பதற்கு ஏற்ற இடம் மலையடிவாரம்தான்!'' என்றது.''அட முட்டாள்களே! நாம் வசிப்பதற்கு ஏற்ற இடம் மலைநீர் அருவி பாய்கிறதே! அந்த இடம்தான்!'' என்றது இன்னொரு குருவி.இப்படி குருவிகள் எல்லாம் எந்த இடத்தில் வசிக்கலாம் என்று ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன.அந்த நேரத்தில் காகம் குருவிகளில் நடுவே போய் நின்றது.''குருவிகளே! உங்கள் சண்டையை நிறுத்துங்கள்! நான் ஒரேயொரு நாள்தான் உங்களை எல்லாம் வெளியே அழைத்து வந்தேன். ஆனால், அதற்குள் நீங்களோ இப்போது வசித்துக் கொண்டிருக்கும் இடத்தையே மறந்துவிட்டு அந்த இடத்தில் வசிக்கலாம்! அந்த இடத்தில் வசிக்கலாம் என்று ஒருவரோடு ஒருவர் சண்டையிட ஆரம்பித்துவிட்டீர்கள். நான் அருகில் நின்று கொண்டிருப்பதையே மறந்து ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றீர்கள்! நான் இது வரையிலும் எத்தனையோ இடங்களுக்குச் சுற்றியிருக்கிறேன். எங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். நான் இதுவரையிலும் இருக்கின்ற இடத்தை மறந்ததில்லை. ஆனால், நீங்கள் வெளியே சுற்றிப் பார்க்க வந்த ஒரு நாளிலேயே இருந்த இடத்தையே. நாம் எந்த சூழ்நிலையிலும் இருக்கின்ற இடத்தை மறந்து விடக்கூடாது,'' என்றது.காகத்தின் அறிவுரையைக் கேட்ட குருவிகள் எல்லாம் தங்களின் தவறை உணர்ந்தன.''காகமே! நாங்கள் பெரும் தவறு செய்து விட்டோம்! ஏதோ நீ எங்களை நான்கு இடங்களுக்கு கூட்டிச் சென்று காண்பித்தாய்! நாங்களும் அதுதான் உலகம் என்று நம்பி விட்டோம்! அதனால் அப்படியொரு தவறினைச் செய்யத் துணிந்துவிட்டோம்! இனிமேல் எங்களது இருப்பிடமான அந்த பூவரசு மரத்தை ஒருபோதும் மறந்திட மாட்டோம்!'' என்றன.குருவிகள் திருந்தி விட்டதைக் கண்டு காகம் மகிழ்ச்சியடைந்தது.***