உள்ளூர் செய்திகள்

யானை... யானை!

அடர்ந்த மலைப் பகுதியில் வரம்மாச்சாரம் என்ற வனம் இருந்தது; அங்கு, தனசுரன் என்ற யானை, குட்டிகளுடன் வசித்து வந்தது.ஒரு நாள் -குட்டிகளுடன் நீர் தேக்கத்திற்கு வந்த தனசுரன், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது, ஏராளமான வேடர்கள், அங்கு வந்தனர். நீர் தேக்கத்தில், தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த, யானைக்குட்டிகளின் அழகில் மெய் மறந்தனர்.எப்படியாவது, குட்டி யானைகளைப் பிடித்து விட, வேடர்கள் முடிவு செய்தனர். தனசுரன், வேடர்களைக் கவனித்து விட்டது.'இந்த வேடர்கள், நம் குட்டிகளை கவனிக்கின்றனர்; இவர்களால், குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம்; எனவே, எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று நினைத்தது.உடனே, குட்டிகளை நோக்கி, ''அன்பான குட்டிகளே... அதோ வேடர்கள்... நம்மையே கவனிக்கின்றனர். அவர்களால், ஏதாவது ஆபத்து ஏற்படலாம். எனவே, எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்...'' என்றது. தாயின் அறிவுரையை, குட்டிகள் ஏற்றன.அந்நேரத்தில், வாழைத் தார்களுடன், யானைகளை நோக்கி வந்தனர் வேடர்கள்.ஏதாவது சூழ்ச்சி இருக்கலாம் என்பதை உணர்ந்த தனசுரன், குட்டிகளை நீர் தேக்கத்தை அடுத்துள்ள, மலைக்குகையில் ஒளிந்து கொள்ளக் கூறியது. குட்டிகளும் வேகமாக, அந்த மலைக்குகை நோக்கி ஓடின.தனசுரன் மட்டும் நீர்தேக்கத்தின் அருகே நின்று கொண்டிருந்தது. 'குட்டிகளுக்கு, வாழைத் தார்களைக் கொடுத்து, மடக்கிப் பிடித்து விடலாம்' என்று நினைத்த வேடர்கள், ஏமாற்றம் அடைந்தனர். ''வேடர்களே... என் குட்டிகளுக்குத்தானே வாழைத் தார்களைக் கொண்டு வந்தீர்கள்; மிக்க நன்றி! என் முன்னே வைத்து செல்லுங்கள்; குட்டிகளுக்குக் கொடுத்து விடுகிறேன்...'' என்றது. அன்றைய இரவு -வேடர்கள், ஆலோசனை கூட்டம் நடத்தினர்.''இந்த யானை குட்டிகளை எப்படிப் பிடிப்பது; இந்த தனசுரன் உயிரோடு இருக்கும் வரை, குட்டிகளைப் பிடிக்க முடியாது. புத்திசாலித்தனமாக நடந்து, குட்டிகளைப் பாதுகாத்து விடுகிறது. எனவே, முதலில் தனசுரனை அழிக்க வேண்டும்; அதன் பின், குட்டிகளை எளிதில் பிடித்துவிடலாம்...'' என்றான், ஒரு வேடன்.''தனசுரனை மடக்கிப் பிடித்து, சர்க்கஸ் கம்பெனியில் விற்று விட்டால், ஏராளமான பணம் கிடைக்கும். எனவே, இப்போதே தனசுரன் வழக்கமாக வரும் பகுதியில், பெரிய பள்ளம் தோண்டி, மூடி வைப்போம். ''தனசுரனும், குட்டிகளும் பள்ளத்தில் விழுந்து விடும். அதன்பின், சர்க்கஸ்காரர்கள் உதவியுடன் பிடித்து, குட்டிகளை நாம் எடுத்துக் கொண்டு, தனசுரனை மட்டும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம்...'' என்றான், மற்றொரு வேடன்.அந்த யோசனையை, அனைவரும் ஏற்றனர்.அன்று இரவு - அவர்கள் எல்லாரும் தனசுரன் வழக்கமாக வரும் பாதையில், பெரும் பள்ளத்தை தோண்டத் துவங்கினர்.குட்டிகளை துாங்க வைத்து விட்டு, அந்த பகுதியில் உலாவிக் கொண்டிருந்த தனசுரன், இதைப் பார்த்து விட்டது.'குட்டிகளோடு வழக்கமாக நடந்து செல்லும் பாதையில், பள்ளத்தை தோண்டி, நம்மை பிடிக்க நினைக்கின்றனர்; இவர்களுக்கு சரியான பதிலடிக் கொடுக்க வேண்டும்' என்று எண்ணியது.உடனே, வேகமாக இருப்பிடத்திற்கு சென்றது; குட்டிகளை அவசரமாக எழுப்பியது.''குட்டிகளே... முக்கிய வேலை ஒன்று இருக்கிறது; அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்...'' என்றது.குட்டிகளும், சுறுசுறுப்போடு எழுந்தன.தனசுரன், குட்டிகளுடன், வேறு பாதையில் வேடர்கள் இருப்பிடம் பக்கம் வந்தது.வேடர்கள், வீட்டிற்கு செல்லும் பாதை நடுவே, குட்டிகள் உதவியோடு, பெரிய பள்ளம் தோண்டியது. பின், பள்ளத்தின் குறுக்கு, நெடுக்காக மரக்கிளைகளை போட்டு, இலைகளையும், சருகுகளையும் எடுத்து வந்து மூடியது.பின், சத்தமில்லாமல் இருப்பிடம் சென்று, படுத்துக் கொண்டது.வேடர்களோ, இரவெல்லாம் கடுமையாகப் போராடி, பெரிய பள்ளத்தைத் தோண்டினர். பின், இலைகளையும், சருகுகளையும் போட்டு மூடி, வேலையை முடிக்க அதிகாலையாகிவிட்டது.மிகவும் களைப்புற்ற வேடர்கள், தள்ளாடியபடி வீட்டை நோக்கி சென்றனர்.வீடுகளை நெருங்கும் வழியில், பள்ளத்தில் விழுந்தனர்.இந்த எதிர்பாராத சம்பவம், வேடர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். 'யானைகளைப் பிடிப்பதற்காக பள்ளத்தை தோண்டி, அதே போன்ற பள்ளத்தில் மாட்டிக் கொண்டோமே! வெளியே செல்லும் போது, இந்த பள்ளம் இல்லையே! நாம் பள்ளம் தோண்டிய நேரம் தான், இந்தப் பள்ளத்தை, யாரோ தோண்டியிருக்க வேண்டும். யார் தோண்டியிருப்பர்' என்று, கேட்டுக் கொண்டனர்.அப்போது, அந்தப் பக்கம் வந்த தனசுரன், ''வேடர்களே... நானும், என் குட்டிகளும் தான் இந்தப் பள்ளத்தைத் தோண்டினோம்; நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுப்பீர்கள்... புரிகிறதா...'' என்றது.அவமானத்தால் தலை குனிந்த வேடர்கள், தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டனர்.குட்டீஸ்... நல்லதை செய்து நல்லதை பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !