உள்ளூர் செய்திகள்

தலை எழுத்து!

விருதுநகர் மாவட்டம், நடுவப்பட்டி, ஸ்ரீராமமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1969ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பு ஆசிரியராக இருந்தார், அ.ஜெகந்நாதன்; ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்கள் எடுப்பார். என் கை எழுத்து முத்தாக இருக்கும் என்பதால், கரும்பலகையில் பாடங்கள் எழுத சொல்வார். பள்ளியில் ஆய்வு நடக்கும் போது, சுவரில் மாட்டும் சார்ட்களும் எழுதி கொடுப்பேன். அதை, புகழ்ந்து பாராட்டுவார். அவர் தந்த உற்சாகத்தால் சிறப்பாக பள்ளிக்கல்வியை முடித்தேன். உயர்கல்வி பயின்று, ராஜபாளையம், தர்மராஜா நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தேன்.பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது. இதை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் அன்று திடீர் சோதனைக்கு வந்தனர். மாணவர் எண்ணிக்கையை சரி பார்த்தனர். மாணவியரிடம் கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார், கல்வி அதிகாரி. அவர் எனக்கு, 10ம் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் என்பதை அறிந்து வணங்கினேன். ஆச்சரியமுடன் விழிகள் விரிய நலம் விசாரித்தார். மாணவியரிடம், 'உங்க மேடம், என்னிடம் படித்தவர்... கையெழுத்து அச்சடித்தது போல் முத்து முத்தாக இருக்கும். மிகவும் ஒழுக்கமானவர்...' என புகழாரம் சூட்டினார். பள்ளி பார்வை நோட்டில், 'அழகாக எழுதினால், தலையெழுத்தே மாறி விடும்!' என பொன் எழுத்தை பதித்து சென்றார்.தற்போது எனக்கு, 70 வயதாகிறது; வகுப்பில் ஆசிரியராகவும், பள்ளியில் அதிகாரியாகவும் மேன்மையாக நடந்து கொண்டவரை நினைவில் கொண்டுள்ளேன். - கே.ராமதிலகம் சேதுராஜ், விருதுநகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !