உள்ளூர் செய்திகள்

தலை நிமிரட்டும் தமிழ்!

துாத்துக்குடி மாவட்டம், கீழ அலங்காரத்தட்டு, ஆர்.சி.தொடக்கப் பள்ளியில், 1996ல், 1ம் வகுப்பில் சேர்த்தனர். அது, தமிழ் வழி பயிற்றுப் பள்ளி. அதே ஆண்டு, என் அத்தை மகன் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்தான். வசதிப் படைத்தவன். மிடுக்காக ஆடை அணிந்து, இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் செல்வான். அதைக் கண்டு ஆங்கிலப்பள்ளி மோகம் என்னை பற்றி, பிடித்தாட்டியது. அம்மாவிடம், 'ஆங்கில பள்ளியில் தான் படிப்பேன்...' என்று அடம் பிடித்தேன். இயலாமையை எண்ணி அழுதனர் பெற்றோர். வேறு வழியின்றி தமிழ் வழியிலே படித்தேன். தொடர்ந்து, 12 ஆண்டுகள், வகுப்பில் முதன்மை மாணவனாக திகழ்ந்தேன். பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பரிசுகளைக் குவித்தேன். சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, மேல்நிலை தேர்வில் வென்றேன். அரசு பொறியியல் கல்லுாரியில் படித்து, ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பொறுப்பு வகிக்கிறேன். தற்போது, என் வயது, 29; ஆங்கிலம் அறிவல்ல; அது தொடர்பு மொழி என புரிந்து படித்து உயர்ந்தேன். தாய் மொழியிலே பயிலுங்கள்; தலை நிமிரட்டும் தமிழ்!- அ.அந்தோணி ஸ்டீபன்ராஜ், கோவை.தொடர்புக்கு: 97914 24326


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !