உள்ளூர் செய்திகள்

எலிகளின் உதவி!

பாழடைந்த கோயிலில் எலிகள் கூட்டமாக வாழ்ந்தன. இதனால் எலிகளின் வம்சம் அங்கு பெருகியிருந்தது. மற்றும் அவை எந்த ஆபத்திலும், இடையூறிலும் சிக்கிக் கொள்ளாமல் ஆனந்தமாக வாழ்ந்து வந்தன.அப்பாழடைந்த கோயிலுக்கு பக்கத்தில் ஏரி ஒன்று இருந்தது. ஒருநாள், நீர் அருந்தும் பொருட்டு ஆயிரம் யானைகள் கும்பலாக அங்கு வந்தன. அவை ஒரே கூட்டமாக வந்ததால், ஆயிரக்கணக்கான எலிகள் யானைக்காலில் மிதிப்பட்டு, நசுங்கி இறந்து போயின. யானைகள் ஏரிக்கரைக்குச் சென்ற பிறகு, உயிர் தப்பிய எலிகள் ஒன்று கூடின.''இந்த வழியாக யானை வருவது நம் அழிவுக்குக் காரணமாகிறது. அவை தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் இந்த வழியாகவே வருவதாயிருந்தால், எஞ்சிய நாமும் அழிந்து போவோம். அதனால் அந்த யானை மீண்டும் இந்த வழியே வராமல் தடுக்க ஏதேனும் உபாயம் செய்தலே சரி,'' என்று பேசிக்கொண்டன.இறுதியாக, அவ்வெலிகள் ஒரு முடிவு எடுத்து யானைகளைச் சந்திக்க கும்பலமாக ஏரிக்கரைக்குச் சென்றன.அங்கே யானையின் கூட்டத்தின் தலைவனாயிருந்த யானையைச் சந்தித்து, ''அரசே! இந்த ஏரிக்கரைக்கு அருகிலுள்ள அதோ அந்த இடிபாடுகளில் நாங்கள் வெகுகாலம் தலைமுறை, தலைமுறையாக சந்தோஷமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இப்போது பெரிய அவதி ஏற்பட்டுள்ளது. அதுவும் உங்களால்,'' என்று சொல்லியது.''எங்களாலா?'' என்று கேட்டது யானை.''ஆமாம்! உங்களால்தான்! நாங்கள் இருக்கும் பகுதியில் வருவதால், பெரும்பாலான எலிகள் உங்கள் காலடியில் சிக்குண்டு நசுங்கிப் போய்விட்டன. மீண்டும் நீங்கள் அந்தப் பக்கமாகவே திரும்புவதா யிருந்தால் எஞ்சிய நாங்களும் அழிந்து போவோம். ஆகவே, நீங்கள் வேறு வழியாகத் திரும்ப வேண்டும். இந்த உதவியை மறக்காமல் செய்தால், சமயம் வாய்க்கும்போதும் நாங்களும் உங்களுக்கு உதவி செய்வோம்,'' என்று கேட்டுக் கொண்டன.எலிகளின் பரிதாப நிலையைக் கண்ட யானை மிகவும் வருந்தியது. ''சரி, அப்படியே செய்கிறோம்!'' என்று ஒப்புக் கொண்டது.உடனே, வேறு வழியாகப் போகும்படி மற்ற யானைகளுக்கு உத்தரவும் போட்டுவிட்டது.''ஆகா! இந்த யானைகள் பார்ப்பதற்குப் பெரிதாய் பயங்கரமாக இருந்தாலும் எத்தனை இளகிய மனம்!'' என்று எலிகள் அவற்றைப் போற்றிப் புகழ்ந்தன.இது நடந்து அநேக நாட்கள் சென்றன. அரசன் அக்காட்டிலிருந்த யானைகளையெல்லாம் பிடிக்கும்படி உத்தரவிட்டான். உடனே யானைப்பாகன்கள் அக்காட்டின் ஓரிடத்தில், ஒரு பொய் நீர் நிலையை ஏற்படுத்தினான். பக்கத்தில் கண்ணியும் வைத்தனர்.எதிர்பார்த்ததுபோல் யானைகள் அங்கு வந்தன. அந்த யானையின் அரசனும் மற்ற யானைகளும் அதில் சிக்கிக் கொண்டன. அவற்றை அப்படியே மூன்று தினங்கள் வரை பட்டினி போட்டு, பிறகு வந்து அவற்றைப் பிடித்து மரங்களில் கட்டிப் போட்டனர்.''ஆகா! இந்த சமயத்தில் அந்த எலிகள் உதவி கிடைத்தால் நன்றாயிருக்குமே!'' என்று எண்ணியது யானையின் அரசன்.உடனே கண்ணில் அகப்படாத ஒரு யானையை அழைத்து, எலிகள் இருக்கும் இடத்தைச் சொல்லி அவற்றை அழைத்துவரச் சொல்லி அனுப்பி வைத்தது.விவரம் தெரியவந்ததும் எல்லா, எலிகளும் கும்பலாகப் சென்று, தம் கூறிய பற்களால் யானைகளைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்து, யானைகளை காப்பாற்றியது.நீதி: சிறு துரும்பும் பல் குத்த உதவும்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !