இளஸ்... மனஸ்... (120)
அன்பு மகள் ஜெனிபருக்கு, 65 வயது பாட்டி எழுதுவது. உன்னுடைய பகுதியை விரும்பி படிப்பேன். ரொம்ப நல்லா, 'அட்வைஸ்' கொடுக்குற... என்னோட மனக்குறையையும், உன் கிட்ட கொட்டலாம்ன்னு இருக்கேன். கொஞ்சம் ஆறுதல் சொல்லுடிம்மா...என் மகனும், மருமகளும் மெத்த படித்தவர்கள். இருவரும் இங்கிலீஷ்லதான் சண்டை போட்டுக்குவாங்க... நமக்கென்ன புரியும்... அது போகட்டும் விடு... ஒரே பேத்தி தான். 'பர்ஸ்ட் ஸ்டான்டர்ட்' படிக்கிறா... நல்லா படிப்பா. அவள, இவங்க ரெண்டு பேரும் படுத்துற பாடு இருக்கே... கொஞ்சம் நஞ்சம் அல்ல... படிப்பு, விளையாட்டு இப்படி எல்லாத்திலேயும், 'பர்ஸ்ட்' வர முடியுமா சொல்லு! 'ஸ்போர்ட்ஸ் டே'க்கு ஸ்கூலுக்கு போனேன். 'ரன்னிங் ரேஸ்ல பர்ஸ்ட்' வரலன்னு எம் மருமக கொழந்தய, அங்கேயே திட்றா... அந்த கொழந்தைக்கு விளையாட்டோட விதிகள் கூட புரியல... அது பாட்டுக்கு, 'பிரண்ட்ஸ்' கூட பேசி சிரிக்குது... அந்த கொழந்தய இழுத்துட்டு வந்து, அடுத்த போட்டியில ஜெயிக்கணும்னு சொல்லி, தொடையில கிள்றா... இதெல்லாம் பார்த்து சகிச்சுக்க முடியலடி... நா ஏதாவது சொல்லிட்டா, அவ்ளோதான், 'தாட் பூட் தஞ்சாவூர்'ன்னு கத்துவா... நீ கொஞ்சம் புத்தி சொல்லு. சிறுவர்மலர் கட்டாயம் படிச்சு, பேத்திக்கு தமிழ் சொல்லித் தருவா... அவ மனசுல உறைக்கும்படி, ஒரு நாலு வார்த்தை சொல்லும்மா... உனக்கு புண்ணியமா போகும்...வணக்கம் அம்மா! உங்களோட ஆதங்கம் புரியுது. இன்றைய, பல, தாத்தா, பாட்டிகளின் நிலை இது தான். இந்த காலத்து, 'மதர்ஸ்' எல்லாமே, தங்கள் பெருமைக்காக, தன் பிள்ளைகள் எல்லாத்திலும் முதலில் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 'பர்ஸ்ட் ரேங்கரோட, மதர்' என்று சொல்லிக் கொள்வதில், அவ்வளவு பெருமை அவர்களுக்கு. தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற பெயரில், அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்று, இவர்கள் கொடுக்கும் அட்வைசை கேட்க, ஒரு கூட்டம், இவர்கள் பின்னால் அலையும்.பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி முதலிடத்தை வாங்க சொல்லித் தரும் பெற்றோர், வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணங்களை கற்றுத் தருவதில், அக்கறை காட்டுவதே இல்லை. தோல்வி என்றால், என்னவென்றே தெரியாமல் வளரும் குழந்தைகள், திடீர் என்று, தோல்வி ஏற்படும் போது, அதை எதிர்கொள்ளும் சக்தியில்லாததால், தற்கொலை செய்து கொள்கின்றனர். இது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதை பெற்றோர் உணர்வதில்லை.'எப்படியும் டாக்டராகி விடுவோம்' என்று நினைத்த மாணவியால், 'நீட்' தேர்வில், தோல்வி ஏற்பட்ட போது, அதை ஏற்க மனதில்லாமல், தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, நாம் அதிர்ந்து போனோம். இதனால் என்ன பயன்...அந்த காலத்தில் தான், டாக்டர், இஞ்சினியர், கலெக்டர் படிப்பு படித்தால் தான் மதிப்பு; நல்ல சம்பளம். ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. திறமை இருந்தால், இவர்களை விட, அதிகமாக சம்பாதிக்க, ஏராளமான வாய்ப்புகள், இந்த உலகில் கொட்டி கிடக்கின்றன.குழந்தைகளை, துன்புறுத்தி, அவர்களது குழந்தை, இளமை பருவங்களை அனுபவிக்க முடியாமல் செய்து விடாதீர். அதன் பின், வாழ்க்கை முழுவதும் டென்ஷனைத்தான் சந்திக்கப் போறாங்க. 'என் பிள்ளை, இப்படி ஆக வேண்டும்!' என்ற வெறியை, அவர்கள் மீது திணிக்கும் போது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில், அந்த பிஞ்சு மனங்கள் எடுக்கும் முடிவு தான் தற்கொலை.உங்கள் பிள்ளைகள், தோல்வியை சந்திக்கும் போது, அதை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை சொல்லிக் கொடுங்கள்; பெண் பிள்ளை என்றால், அவள் வாழப் போகிற வீட்டில், எல்லாரிடமும் எப்படி அன்பாக, 'அட்ஜஸ்ட்' பண்ணி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லித் தாருங்கள். ஆண் பிள்ளைகளுக்கு, பெண் பிள்ளைகள் பற்றிய அருமையை சொல்லி தாருங்கள். மொத்தத்தில் அவர்களது எதிர் காலத்திற்கு தேவையான வாழ்க்கை கல்வியை சொல்லித் தாருங்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து, அந்த துறையில் ஊக்குவியுங்கள்.நீங்கள் எதிர் பார்ப்பதை விட, அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்!உங்க மருமகளுக்கு நீங்க சொல்ல நினைத்ததை, நானே சொல்லிட்டேன் இப்போ திருப்தி தானே!இந்தப் பகுதியை படிச்ச பிறகு, மருமக உங்களை இங்கிலீஷில் திட்டினா நான் பொறுப்பில்லப்பா...- எஸ்கேப், ஜெனிபர் பிரேம்!