இளஸ்... மனஸ்...
அன்பு ஜெனி ஆன்டிக்கு, இனிய வணக்கம்! என் மகன் சூர்யா, 4ம் வகுப்பு படிக்கிறான். உடுமலை பேட்டையில் கடந்த, 15 ஆண்டுகளாக கவரிங் கடை நடத்தி வருகிறோம்.ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து அதன் பின் எனக்கு மகன் பிறந்தான். அதனால், மிகவும் செல்லம். தினமும் பள்ளி விட்டு வந்தவுடன் பார்க்கர் பேனா மற்றும் நண்பர்கள் என்ன பொருட்கள் வைத்திருந்தாலும் உடனே அதை, 'இன்டர்நெட்டில்' ஆர்டர் செய்து வாங்கி தருமாறு அடம் பிடிக்கிறான். நாங்க மாருதி காரில், 'பேரன்ட்ஸ் மீட்டிங்' போனால், அதை அவமானமாக நினைக்கிறான்.'என் நண்பர்களின் பெற்றோர் எல்லாரும், 'ஆடி கார்ல' வர்றாங்க. நீங்களும் இப்பவே, 'ஆடி கார்' வாங்குங்க' என்கிறான்.இவனை பணக்கார பள்ளியில் போட்டது எங்கள் தப்பாயிற்று. தினமும் ஒரு புது பொருள் வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால், ரூமிற்குள் புகுந்து, கதவை சாத்திக் கொள்கிறான். இரண்டு நாள் ஆனாலும் முகத்தை, 'உம்' என்று வைத்துக் கொள்கிறான். நாங்களும் அவன் கேட்ட பொருளை வாங்கி கொடுத்து விடுவோம். இவனை எப்படி திருத்துவது சகோதரி?சூப்பர்! தப்பு எல்லாமே உங்கள் மேல் வைத்துக்கொண்டு இவனை எப்படி திருத்துவது என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?தவமிருந்து பெத்த பிள்ளையாக இருந்தாலும், பிள்ளைகளை கண்டித்து தான் வளர்க்க வேண்டும். உங்கள் பாசத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய பிள்ளைகள் மேல வரணும் என்று நினைத்து, பெரிய பள்ளிகளில் பணத்தை கொட்டி படிக்க வைக்கிறோம். அவர்களோ அதை தங்கள் நண்பர்களுடன், 'கம்பேர்' பண்ணி நம்மை இன்னும் நோகடிக்கின்றனர். தற்காலத்து குழந்தைகளுக்கு கஷ்டம் என்பதே தெரியாத அளவில் நாம் அவர்களை வளர்க்கிறோம். இதனால் வந்த வினைதான் பார்த்த பொருட்களை எல்லாம் இவர்கள் வாங்க ஆசைப்படுவது.இந்தப் பேராசை குணத்தை முளையிலேயே கிள்ளவில்லை என்றால், இது இவர்கள் வாழ் நாள் முழுவதையும் வீணாக்கிவிடும். இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நீங்கள் என்ன வாங்கி கொடுத்தாலும் திருப்தி இருக்காது. அடுத்த அரைமணி நேரத்தில் அந்தப் பொருள் பற்றிய கவர்ச்சி போய் விடும். அடுத்த பொருளுக்கு ஆசைபடுவர். உங்களால் முடிந்தவரை வாங்கி கொடுக்கிறீர்கள். முடியாத, 'ஆடி' காரை எப்படி வாங்கி கொடுப்பீங்க? இப்படியே விட்டா, இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தனக்கு கிடைத்த எவற்றின் மீதும் இவர்களுக்கு திருப்தி இருக்காது. அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டே இவர்களும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்; மற்றவர்களையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.ஒரே வழி உங்கள் மகனிடம், 'டீல்' வைங்க. 'நீ முதல் மார்க் வாங்கினா இந்த பொருள் உன் கையில் இருக்கும்' என்று சொல்லுங்க. 'நீ மம்மி, டாடிக்கு எல்லா விஷயத்திலும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தால்தான் இந்த பொருள் உன் கையில் இருக்கும். அவனிடம் என்னென்ன கெட்ட காரியங்கள் இருக்கோ அதைச் சொல்லி சொல்லி, 'டீல்'வையுங்கள். எங்க பிள்ளை சுமாரா படிப்பது எங்களுக்கு எவ்ளோ அவமானமா இருக்கு' என்று அவனைப் போலவே சொல்லுங்க. அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாலும் அதை கண்டுக்கவே கண்டுக்காதீங்க... அப்படியே விட்டுடுங்க. தன்னுடைய பிடிவாதம் பலிக்கவில்லை என்றதும் தன்னாலே வழிக்கு வருவான்.செல்லம் என்ற பெயரில் பிள்ளையை கெடுத்து வளர்க்காமல், அவன் பிறந்த நாட்களில் ஆதரவற்றோர், குழந்தைகள் இல்லம், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களது வாழ்க்கை நிலையை காட்டி, உங்கள் மகனது வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதை விளக்கி புரிய வையுங்கள். அதை விட்டு விட்டு பிள்ளையின் மனம் வாடக்கூடாது என்பதற்காக அவனை கெடுத்து வளர்க்காதீங்க. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?-கண்டிப்புடன், ஜெனிபர் பிரேம்.