உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (155)

அன்புள்ள ஆன்டி...நான், 6ம் வகுப்பு படிக்கும் மாணவி; தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.எங்கள் வகுப்பில், 21 மாணவியர், 20 மாணவர்கள் உள்ளோம். ஆறு பாடங்கள் நடத்த, ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். வகுப்பு ஆசிரியையாக உள்ளவர், கணித பாடம் நடத்துகிறார். வகுப்பு மாணவ தலைவர் பதவிக்காக, நான் போட்டியிட்டேன்; மற்றொருவனும் போட்டியிட்டான். எனக்கு, எட்டு ஓட்டுகளும், அவனுக்கு, 33 ஓட்டுகளும் விழுந்தன. அவன் தலைவனானான்; தோற்றதால், அவமானம் பிடுங்கி தின்கிறது.படிப்பிலும், விளையாட்டிலும் நான் மகா கெட்டிக்காரி; ஆனால், கறுப்பாக இருக்கிறேன் என்ற காரணத்துக்காக மாணவியர், எனக்கு ஓட்டு போடவில்லையோ என எண்ண தோன்றுகிறது. என்னென்ன திறன்களை வளர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில், தலைமை பதவி அடையலாம். எனக்கு நல்ல அறிவுரை சொல்லுங்கள்! இப்படிக்கு, மா.ஜானகி.அன்பு மகளுக்கு...தலைமை பொறுப்பை ஏற்க, வயது, நிறம், உயரம், பொருளாதாரம், ஜாதி, மதம், இனம், மொழி என, எதுவும் குறுக்கே நிற்காது. அதனால், நீ நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மையை முதலில் அறவே விட்டொழி!சிலர் தலைவர்களாக பிறக்கின்றனர். வாழ்விலிருந்து கற்று கொண்டு பலர் தலைவர் ஆகின்றனர். கற்றுக்கொண்டு, தலைவர் ஆகிறவரே சிறப்பானவர்.கீழ் குறிப்பிடும் பண்புகளை வளர்த்து, தலைமை பொறுப்புக்கு தயாராகு...* தன்னம்பிக்கையை முழுமையாக வளர்க்கவும்* முடிவுகளை குழப்பமில்லாமல், விரைவாக எடுக்க கற்றுக் கொள்ளவும்* முயன்றால் சாத்தியமாகும் இலக்கை நிர்ணயிக்கவும்* சிக்கலான பிரச்னைகளை தீர்க்க கற்றுக் கொள்ளவும்* தகவல் தொடர்பை மேம்படுத்தவும்* கற்றுக் கொள்ளும் நோக்கில், கண், காதுகளை திறந்து வைக்கவும்* பிறரின் துன்பங்களை கவனிக்கவும்* கற்பனை திறனுடன் கூடிய படைப்பாற்றலை பெருக்கவும்* பொறுப்புணர்ந்து விழிப்புணர்வை பெறவும்* சமூக முன்னேற்றத்தை கை கொள்ளவும்* தனித்தன்மையுடன், புதிய அனுபவங்களுக்கு தயாராகவும்* மனித நேயத்துடன், உலகில் நல்ல நியதிகளை உயர்த்தி பிடிக்கவும்.வகுப்பில் மாணவர்களுக்கு தலைவியாவது சிறிய கனவு; இந்த கனவுடன் திருப்தி அடைந்து விடாதே... மிகப் பெரிய கனவுகளை, அவற்றை சாதிக்கும் உத்வேகத்துடன் காணவும்.உலகின் தலை சிறந்த தலைமை பண்புகளை நகலெடுக்கவும்; தலைமை பண்பை நீ வளர்த்தெடுக்க உதவும் வண்ணம் பெற்றோரை உன் பக்கம் திருப்பவும்!வருங்கால தலைவியே... உனக்கு வீர வணக்கம்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !