உள்ளூர் செய்திகள்

கர்மவீரரின் கனிவு!

பழனி அருகே, சத்திரப்பட்டி துவக்கப் பள்ளியில், 1961ல், 4ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அடுத்த ஆண்டே, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர வழி வகை செய்தார். அதன்மூலம், மிகவும் பின் தங்கிய கிராமப்புறத்தில் வசித்த என் போன்றோர் பள்ளிக் கல்வியை தொடர வாய்ப்பு கிடைத்தது. அதே பள்ளியில் 1968ல், 11ம் வகுப்பு முடித்தேன். பின், டி.கல்லுப்பட்டி ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்.அங்கு, பருத்தியில் இருந்து பஞ்சு பிரிப்பது, அதை நுாலாக்கி, துணி நெசவு செய்வது பற்றி சிறப்பாக பயிற்சி பெற்றேன். விதம் விதமாக சமைப்பது, தோட்ட வேலை, பள்ளி மைதானம், வகுப்பறை, கழிப்பறைகளை துாய்மையாக பராமரிப்பதற்கான வழிமுறையை அறிந்தேன். இசையிலும் நல்ல பயிற்சி பெற்று படிப்பை நிறைவு செய்தேன்.பயிற்சி காலத்தில், மாதம், 18 ரூபாய் உதவித் தொகையாக அரசு வழங்கியது. இந்த பணம் தொய்வின்றி பயிற்சியை முடிக்க உதவியது. தொடர்ந்து, அரசு பள்ளியில் ஆசிரியராகி மாத ஊதியமாக, 200 ரூபாய் பெற்றேன்.என் வயது, 72; இன்று, கை நிறைய ஓய்வூதியத்துடன், மகிழ்ச்சியாக வாழ்கிறேன். இதற்கு முழுமுதற் காரணம் கர்மவீரர் காமராஜரின் செயல்பாடு தான். ஒவ்வொரு நாளும் அவர் திருவடிகளை போற்றி வணங்கி வருகிறேன்.- ஏ.கருப்பண்ணன், திருப்பூர். தொடர்புக்கு: 95665 60320


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !