உள்ளூர் செய்திகள்

மன்னன் அமரேந்திரன்!

அழகாபுரி என்ற நாட்டை அமரேந்திரா என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் அமரேந்திரா கொடூரமான எண்ணம் கொண்டவர். மக்கள் படுகின்ற துன்பங்களை எல்லாம் பார்த்து சிரிப்பார். குடிமக்கள் யாராவது அவரிடம் உதவி கேட்கச் சென்றால், எள்ளி நகையாடுவார். அதற்காக வேண்டி யாருமே அந்த மன்னரிடம் உதவி கேட்கச் செல்லமாட்டார்கள்.அந்நாட்டிற்கு புதிதாக இளைஞன் ஒருவன் வந்தான். அவன் பெயர் இளவழகன். அவன் நாடோடி போன்று எல்லா ஊர்களையும் சுற்றி வந்து கொண்டிருந்தான். அழகாபுரி நாட்டிற்கு வந்ததும் மன்னர் அமரேந்திராவைக் காண முடிவு செய்தான். தான் மன்னரைக் காண வெளியூரிலிருந்து வந்திருப்பதாகவும் அரண்மனைக்கு எப்படிச் செல்ல வேண்டுமென்றும் மக்களிடம் வழி கேட்டான். அந்த இளைஞன் மன்னரைக் காணவேண்டும் என்று கூறியதுமே, எல்லாரும் அவனை பரிதாபமாகப் பார்த்தனர்.'ஏனப்பா! உனக்கு வேறு வேலை இல்லையா? எதற்காக மன்னரைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாய்?'' என்று கேட்டனர்.'ஐயா! நான் பல நாடுகளுக்குச் சென்று அந்நாட்டு மன்னர்களை எல்லாம் சந்தித்து வந்திருக்கிறேன். இப்போது உங்கள் நாட்டுக்கு வந்துவிட்ட நான் உங்கள் மன்னரைப் பார்க்காமல் செல்லலாமா? அதனால் தான் உங்கள் மன்னரைப் பார்க்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்,'' என்றான் இளவழகன்.'இளைஞனே! நீ மன்னரைக் காண ஆசைப்படுவதில் எந்தத் தவறுமில்லை! ஆனால், இந்நாட்டு மன்னர் ஒரு மாதிரியானவர். அதனை நாங்கள் உனக்கு எப்படிப் புரிய வைப்பது என்றுதான் தெரியவில்லை!'' என்றனர்.'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! இந்நாட்டு மன்னர் ஒரு மாதிரியானவர் என்றால் அவர் என்னதான் செய்வார்? அதனைப் பற்றி எனக்கு விளக்கமாக எடுத்துரையுங்கள்,'' என்று பணிவோடு கேட்டான் இளவழகன். அந்தக் கூட்டத்தில் ஒருவர் இளவழகனை அன்போடு நோக்கினார்.'தம்பி! இந்நாட்டு மன்னர் இருக்கின்றாரே அவர் மிகவும் ஆணவக்காரர். அவரை யார் சந்திக்கச் சென்றாலும் அவர்களை அவமானப் படுத்திவிடுவார். இதன் காரணமாக அந்த மன்னரை யாருமே சந்திக்கச் செல்வதில்லை! நீ வேறு நாட்டிலிருந்து வந்திருக்கிற காரணத்தினால் இந்த உண்மை தெரியாமல் மன்னரை சந்திக்க வேண்டுமென்று நினைக்கிறாய்! எனவே, நீ மன்னரை சந்திக்காமல் திரும்பிச் செல்வதுதான் நல்லது என்று நினைக்கிறேன்,'' என்றார்.இளவழகன் சிறிது நேரம் யோசனை செய்தான். பின்னர் அவன் தனக்கு அறிவுரை கூறியவர்களை நோக்கினான்.'ஐயா! உங்கள் அறிவுரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில், நான் முன் வைத்தக் காலை பின் வைப்பதில்லை. இந்நாட்டு மன்னரை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். நிச்சயமாக சந்தித்துதான் செல்வேன். அதே நேரத்தில் தன்னை சந்திக்க வருகிறவர்களை அவமானம் செய்யும் மன்னரின் மனப்போக்கினையும், மாற்றுவேன். நீங்கள் அரண்மனைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்,'' என்று கூறினான்.'இதோ இந்த மரங்கள் அடர்ந்த சாலையின் வழியாக சிறிது நேரம் நடந்து சென்றால் அரண்மனை வந்துவிடும். நீ மட்டும் சொன்ன மாதிரியே மன்னரை திருத்தி விட்டால், நாங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைவோம்,'' என்றனர்.'நீங்கள் நினைப்பது போலவே நடக்கப் போகிறது!'' என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான் இளவழகன்.மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த அந்தச் சாலையை கடந்து அரண்மனையை வந்தடைந்தான் இளவழகன். அரண்மனைக் காவலர்களிடம், தான் அயல் நாட்டிலிருந்து மன்னரைக் காண வந்திருப்பதாகத் தெரியப்படுத்தினான்.அந்த வாயிற் காவலர்களோ இளவழகனை மேலும், கீழுமாகப் பார்த்தனர்.'இதோ பாரப்பா! உன்னைப் பார்த்தால் எங்களுக்கு பரிதாபமாகயிருக்கிறது. நீ அரசு தர்பாரின் உள்ளே சென்றால் மன்னர் உன்னை கண்டபடி அவமானப்படுத்தி அனுப்பி விடுவார்! உனக்கு இது தேவைதானா! நாங்களே இங்கே பற்களைக் கடித்துக் கொண்டு பொறுமையுடன் வேலை செய்கிறோம். உன்னை பார்த்தால், மிகவும் நல்லவன் போன்றுத் தெரிகிறது. எனவே, நீ இப்படியே சென்று விடுவதுதான் நல்லது எனத் தெரிகிறது. எனவே, நீ தாமதிக்காமல் இங்கிருந்து சென்று விடு!'' என்றனர்.'வாயிற்காவலர்களே! நீங்கள் என் மீது பரிதாபப்படுவதற்கு நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், நான் உங்களிடம் வேறொன்றையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது மன்னரிடம் அவமானப்படவில்லை. அதே நேரத்தில், மன்னரை அவமானப்படுத்திடவே வந்தேன். அதனால் நீங்கள் தயக்கமில்லாமல் என்னை உள்ளே அனுப்புங்கள்,'' என்றான்.அவன் அவ்வாறு கூறியதும் அந்த வாயிற் காவலர்கள் இருவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 'இங்கு மன்னரைப் பார்க்க வந்தவர்களில் நீ மிகவும் வித்தியாசமாக வந்திருக்கிறாய் போன்றுத் தெரிகிறது. மன்னரையே திருத்தும் அளவுக்கு நீ என்ன யோசனையோடு வந்திருக்கிறாயோ தெரியவில்லை! இருந்தாலும் உன்னுடைய தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். நீ தாராளமாக அரண்மனையின் உள்ளேச் செல்லலாம்,'' என்றனர்.வாயிற் காவலர்களுக்கு நன்றி கூறியபடி அரசு தர்பாரின் உள்ளே நுழைந்தான்.அரசு தர்பாரில் நுழைந்த இளவழகன் மன்னருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக அரசு தர்பாரில் அமர்ந்திருந்த அமைச்சர்களில் ஒருவருக்கு வணக்கம் தெரிவித்தான்.அந்த அமைச்சரைப் பார்த்து, ''அரசே வணக்கம்! நேற்று நீங்கள் என் கனவில் வந்து அரண்மனைக்கு வரச் சொன்னீர்களே அதனால்தான் வந்தேன்! நீங்கள் நலமாகயிருக்கிறீர்களா?'' என்று கேட்டான் இளவழகன்.அரியணையில் அமர்ந்திருந்த மன்னரோ இதனைக் கேட்டதும் திடுக்கிட்டார்.அந்த அமைச்சரோ, செய்வதறியாது திகைத்தபடி மன்னரை நோக்கினார்.'ஏய் யார் நீ? மன்னனான நான் அரியணையில் வீற்றிருக்கும் போது என் அமைச்சரை மன்னன் என்று அழைக்கிறாயே!'' என்று கோபத்துடன் கேட்டார். இளவழகனோ அமைதியோடு மன்னரை நோக்கினான்.'அடடே தளபதியாரே! நீங்களும் இங்கே தான் இருக்கிறீர்களா? தாங்கள் கூட நேற்று என் கனவில் வந்து என்னை அழைத்தீர்களே! நீங்கள் இந்த நாட்டில் தான் தளபதியாகயிருக்கின்றீர்களா? நல்லவேளையாக உங்களையும் நான் இங்கே சந்தித்து விட்டேன். எனக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது,'' என்று தைரியமாக கூறினான்.அவையில் இருந்தவர்களும், மன்னரும், இளவழகனை பைத்தியம் என்று நினைத்தனர்.உடனே மன்னர் தனது மெய்க்காப்பாளர்களை அழைத்தார்.'இதோ! இந்த பைத்தியக்காரனை யார் உள்ளே விட்டார்கள்! இவனை உடனடியாக அரண்மனையை விட்டு வெளியேற்றுங்கள்,'' என்று கூறினார்.'அரசே! நான் பைத்தியமல்ல! நீங்கள்தான் பைத்தியம். நீங்கள் தான் மன்னர் என்று எனக்குத் தெரியும். உங்களை சந்திக்க வருகின்றவர்களை எல்லாம் நீங்கள் அவமானப்படுத்துகின்றீர்கள் என்பதை நானறிந்தேன். தன்னைத் தேடி யார் வருகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்பவர்தான் மன்னர். ஆனால், நீயோ உம்மைத் தேடி யார் வந்தாலும் அவர்களை அவமானப்படுத்துகிறீர்! அதனால் நீர்தான் பைத்தியக்காரர். நான் பைத்தியக்காரனல்ல! உமது அதிகாரத்திற்குப் பயந்து இந்த அரியணையில் இருக்கின்ற அத்தனைப் பேர்களும் பைத்தியக்காரர்கள் தான்,'' என்றான்.இளவழகனின் வார்த்தைகள் மன்னரின் காதுகளுக்கு மட்டுமில்லாமல், அந்த அவையில் இருந்த அத்தனைப் பேருடைய காதுகளிலும் ஈட்டியாய் பாய்ந்தன.'அரசே! நான் தங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு வரவில்லை. நான் பல நாடுகளுக்குச் சென்று, பல நாட்டு மன்னர்களையும் சந்தித்து வருகிறேன். அவர்கள் எல்லாம் தங்களை தேடி யார் வருகிறார்களோ அவர்களை அன்போடு உபசரித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி அனுப்பி வைக்கின்றனர். அதனால், அவர்கள் அனைவரின் அன்பையும் பெற்று, புகழோடு வாழ்கின்றனர். ஆனால், தங்களையோ இந்நாட்டு மக்கள் எல்லாரும் வசைபாடுகின்றனர். உங்கள் பெயரைக் கேட்டாலே மக்கள் எல்லாரும் எரிச்சலடைகின்றனர்,'' என்றான் இளவழகன்.அதனைக் கேட்டதும் மன்னர் மனம் மாறினார். தன் அறிவுக் கண்ணை திறந்த இளவழகனைப் பாராட்டி பல பரிசுகள் கொடுத்து கவுரவித்தார்.இளவழகன் மன்னரின் குணத்தை மாற்றி விட்ட செய்தி நாடெங்கும் பரவத் தொடங்கியது.மக்கள் எல்லாரும் இளவழகனைப் பாராட்டினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !