கல்யாணமாம் கல்யாணம்!
பொதிகை மலை காடே அல்லோகலப்பட்டது; ஒரே ஆரவாரம். காரணம், சிலேந்திரனின் இளைய மகன் சிம்மராஜனுக்கு கல்யாணம் நிச்சயமானது தான். விந்திய மலைச்சாரல் காட்டு அரசன் நரசிம்மனின் மகளை, பொதிகைமலை இளையதளபதி சிம்மராஜனுக்கு திருமணம் செய்வதாய், வெற்றிலை, பாக்கு, மாற்றிக் கொண்டனர்.மகனுக்கு நல்ல இடத்தில், நிச்சயமானதால், சிலேந்திரன் பெரு மகிழ்ச்சியோடு வெகுசிறப்பாக திருமணம் நடக்க, தடபுடலாக ஏற்பாடு நடந்தது.மந்திரி புலியாரை அழைத்து, இதுவரை, பார்த்திராத, 'மெகா' திருமண ஏற்பாட்டைச் செய்யும்படி உத்தரவிட்டது. நாயார் சீசரைக் கூப்பிட்டு, பாதுகாப்புப் பணிகளைக் கவனிக்க சொன்னது. மாலை வரவேற்பிற்கு, குயில் கோகிலம் இன்னிசை. நடன அழகி மயிலின் ஆட்டம். பட்டத்து யானையின் மீது, புதுமணத்தம்பதியர் ஊர்வலம். கிளி குழுவினரின் நாதஸ்வரம், சுவையான விருந்திற்கு நளபாக அரசு கரடியார். ஒட்டகச் சிவிங்கியர் ஒளி விளக்கைத் துாக்கிச் சென்றனர். காவலுக்கு குரங்கு படை; இப்படி எல்லா மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும் பொறுப்பை பகிர்ந்து அளித்தது சிலேந்திரன்.நயவஞ்சக நரியாருக்கு, ஒரு பொறுப்பும் கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குள்ளநரி, கல்யாணத்தில், ஏதாவது, பங்கம் ஏற்படுத்தி சிலேந்திரனை தலைகுனிய வைக்க வேண்டும் என, முடிவு செய்தது. அதன்படி, ஊர்வலம் செல்லும் பாதையில், பெரிய பள்ளம் தோண்டி, அதை, செடி, கொடிகளால் மறைத்து விட்டால், ஊர்வலம் வரும் பட்டத்து யானை அதில் விழுந்து, மணமக்கள் மரணம் அடைய ஏற்பாடு செய்து விட்டால், திருமணம் நின்று விடும். விந்திய சாரல் நரசிம்மன் கோபமடைந்து, தக்க ஏற்பாடு செய்யாததால், சிலேந்திரனை பழி வாங்குவது நிச்சயம் என, மனக்கோட்டை கட்டியது; யாரும் அறியாமல் நாச வேலையைச் செய்து முடித்தது.இருபக்கங்களிலும், குரங்குப் படை சூழ, நடுவில், பட்டத்து யானை மணமக்களோடு வீறுநடை போட்டு வந்தது.நாயார் சீசர் முன்னெச்சரிக்கையாக மோப்பம் பிடித்து சென்ற போது, பாதையில், செடிகளும், கொடிகளும் பரப்பப்பட்டுள்ளதை கண்டதும், ஊர்வலத்தை நிறுத்தி, அவ்விடத்தை சோதனையிடச் செய்தது; சோதனையில், சதித் திட்டம் வெளியாகி விபத்து தவிர்க்கப்பட்டது.மணமக்களை, பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய பெருமை, சீசர் நாயாரைச் சேர்ந்தது. 'யார் இச்சதித்திட்டதின் துரோகி கண்டுபிடியுங்கள்...' என குரைத்தது நாயார். புதரில் மறைந்து, தன் சதி வெற்றி பெறாததைக் கண்ட, நய வஞ்சக நரியார், தப்பியோட முயற்சித்த போது, தளபதி அல்சேஷன் ஒரே பாய்ச்சலில் குள்ள நரியைக் கவ்விப் பிடித்து, சிலேந்திரன் முன் நிறுத்தியது. தக்க சமயத்தில் காப்பாற்றிய சீசரையும், அல்சேஷனையும் பாராட்டியது. நய வஞ்சக நரியை, அது தோண்டிய பள்ளத்திலேய போட்டு மூடி வழியை செப்பனிடச் செய்து, ஊர்வலத்தை வெற்றிகரமாக முடித்தனர்.திருமணம், வெகு ஜோராக நடந்து, நளபாக கரடியாரின் அறுசுவை உணவை உண்டு, பொதிகை மலை மற்றும் விந்திய மலை மிருகங்கள் புளகாங்கிதமடைந்தன. அப்போது குயிலாரின், 'கல்யாணமாம் கல்யாணம்... காட்டுராஜாவுக்கு கல்யாணம்' என்ற பாட்டு, காட்டை அதிரச் செய்தது.