புரட்சி சிறுவன்! (8)
முன்கதை: தந்தையரின் குடிப்பழக்கத்தால், பாதிக்கப்பட்டு பள்ளி செல்ல முடியாத ஏழை சிறுவர்கள், பெண்களுடன் சேர்ந்து குடிக்கு எதிராக போராட முடிவு செய்தனர். இனி -அன்று குடிசைப்பகுதி சிறுவர், சிறுமியர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினான் மாணிக்கம். குடிகார அப்பாக்களை திருத்தும் வழிமுறை பற்றி ஆலோசித்தனர். ஆசிரியர் ரங்கமணி அறிவுரைப்படி மகாத்மா காந்தியின் அமைதி வழியை கடைப்பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, போதையில் குடிசைப் பகுதிக்கும் நுழைவோரை தடுக்க முடிவானது. 'போதையில் உழலும் அப்பாக்களே... வீட்டில் உங்களுக்கு இடமில்லை...''அம்மாக்களை அடித்து துன்புறுத்தும் அப்பாக்களே திருந்துங்கள்...'இதுபோன்ற கோஷங்களை உருவாக்கினர்.இந்த, குரல் முழக்க போராட்டம் வெல்லாவிட்டால், குடிசை வாசல்களில் அமர்ந்து, குடும்பத்தினர் உண்ணாவிரதம் நடத்தவும் முடிவாகியிருந்தது.அந்த பகுதி ஆண்களில், பெரும்பான்மை குடிகாரர்கள் தான்.இரவு, 8:30 மணிக்கு மேல் தடுமாறியபடி திரும்புவர். முடிவு செய்தபடி, போராட்டம் துவங்கியது.சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள், குடிசைப்பகுதியின் முகப்பில் கூடியிருந்தனர். குடி போதையில் நுழைய முயன்றவர்ளை தடுத்து, குளிர்நீரை தலையிலும், முகத்திலும் கொட்டினர். கடும் ரகளை நடந்தது. பொழுது விடிந்தபின், பெண்களுக்கு திட்டும், அடியும் விழுந்தன. அதை துணிவுடன் எதிர்த்தனர். இது, குடிகாரர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை -காலையிலே போதையில் வந்தவர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர். பின், குழந்தைகளுடன் வெளியில் புறப்பட்டு விட்டனர் பெண்கள். யாரும் சமைக்கவில்லை. இது மாணிக்கத்தின் யோசனை. மாலையும் பெண்கள் வீடு திரும்பவில்லை; தெரு முகப்பில் தங்கினர். முருகனின் அம்மாவும் இதில் கலந்து கொண்டார். அவன் அப்பா, கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்த பொருட்களை அள்ளி வெளியில் வீசினார்; யாரும் கண்டு கொள்ளவில்லை.முந்தைய நாள் போலவே கூடியிருந்தனர் பெண்கள். அவர்களுடன் அமர்ந்தான் மாணிக்கம்.சற்று நேரத்தில், காவலர்களுடன் வந்தார் முருகனின் அப்பா. அந்த பகுதியில் வசிக்கும் போதை ஆண்கள் சிலர் உடனிருந்தனர்.'போலீஸ் வருகிறதே...'பெண்கள் பதைத்தனர்.போராட்டத்துக்கு தலைமை தாங்கிய மாணிக்கத்தின் அம்மா, துணிச்சலுடன் அதை எதிர் கொண்டாள்.'என்னம்மா இங்கே கலாட்டா...' காவலர்கள் கேட்டனர்.'குடிபோதையில் வந்து தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். ரகளை செய்கின்றனர்; பெண்களின் சம்பாத்தியத்தை பிடுங்கி குடிக்கின்றனர்; அதனால் தான், போராட்டம் செய்கிறோம்...''என்னப்பா... இப்படி சொல்றாங்க...'ஆண்களிடம் கேட்டனர் காவலர்கள். அவர்கள் எதுவும் சொல்லத் தெரியாமல் திணறினர்.'குடிப்பதை நிறுத்த வேண்டும்; பெண்களை அடிக்க கூடாது. சம்பாத்தியத்தை தரா விட்டாலும் பரவாயில்லை... குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வோம்...'அழுத்தந்திருத்தமாக விளக்கினர் பெண்கள்.'என்னப்பா கதைவேறு மாதிரி இருக்கிறதே... என்னவோ குடி போதையில் பெண்கள் கலாட்டா செய்வதாக அல்லவா சொன்னீங்க...'சற்று கடுமையாக கேட்டனர் காவலர்கள்.''காவல் நிலையத்துக்கு இழுத்து போய் நாலு தட்டு தட்டுங்க சார்... உண்மையைக் கக்கிடுவாளுங்க...''ஏளனமாக சொன்னார் முருகனின் அப்பா.'என்னய்யா நினைத்து கொண்டிருக்கீங்க; பெண்களை, அதிலும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து போகக்கூடாது என்ற சட்டம் உள்ளது தெரியுமா... பெண்கள் மீது வழக்கெல்லாம் போட முடியாது; போய் ஒழுங்கா குடும்பம் நடத்த வழியைப் பாருங்க! கெடுபிடி செய்தால் முட்டி பெயர்ந்துவிடும்...' எச்சரித்து புறப்பட்டனர் காவலர்கள். மறுநாள் காலை -அப்பா இறந்து விட்டதாக, மாணிக்கத்துக்கு தகவல் வந்தது. அவரது உடலை எடுத்து வந்த சுகாதார அதிகாரி, ''கடுமையான குடியால், குடல் வெந்துவிட்டது. இதயமும் பழுதாகி விட்டது; இனியாவது குடிக்காமல் இருக்க முயலுங்கள்...'' என அறிவுரைத்து சென்றார்.மாணிக்கத்துக்கு அழுகை வந்தது. உடல் தகனம் முறைப்படி முடிந்தது.பெண்கள் தலைமை ஏற்று நடத்திய போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தது. மாணிக்கத்தின் தந்தையின் மரணம், குடிகாரர்களை திருத்தும் என நம்பி போராட்டத்தை சற்று தாமதப்படுத்தினர் பெண்கள்.குடிசைகளில் கூக்குரல் மட்டுப்பட்டிருந்தது. பெண்களின் அழுகை அடியோடு நின்று விட்டதாக சொல்லமுடியாது. எனவே, அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாரகினர். ஒரு சமூகச் சேவை அமைப்பால் துவங்கப்பட்ட, இரவுப் பள்ளியில் சேர்ந்திருந்தான் முருகன். அதை தடுக்க முடியாமல் தவித்தார் அவன் அப்பா. குப்பை சேகரித்த நேரம் போக, மீதி நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்தினான் முருகன். ஐயங்களைப் போக்கி உதவினான் மாணிக்கம். நாட்கள் நகர்ந்தன.அன்று படித்துக் கொண்டிருந்தான் முருகன். திடீரென்று வீட்டுக்குள் நுழைந்தார் தந்தை. ஆத்திரத்தில் புத்தகத்தை பிடுங்கி எறிந்தபடி, ''இனி எப்போதாவது உன்னைப் புத்தகத்தோடு பார்த்தேன், அவ்வளவு தான்...'' என்று உறுமினார். முருகன் மனதில் துணிவு வளர்ந்திருந்தது. அப்பாவை எதிர்க்க தலைப்பட்டான்.சினத்தில் உழன்றார் தந்தை.''எதிர்த்தா பேசுகிறாய்... அந்த மாணிக்கம் பயல் கொடுத்த தைரியமா... அவன்தான் எல்லாரையும் துாண்டி விடுகிறானா...'' ''நாங்க பள்ளி செல்ல உரிமை இல்லையா... குழந்தை பருவத்திலேயே வேலை செய்ய வேண்டுமா...'' முருகன் தைரியமாக பேசியது அம்மாவுக்கு மகிழ்ச்சியை தந்தது. ஆனால், பயமாகவும் இருந்தது. தயங்காமல், ''உண்மையைத்தானே கூறினான்...'' என பரிந்து பேசி குறுக்கே பாய்ந்தாள்.அவளைப் பிடித்து தள்ளியபடி, முருகனை அறைந்தார்.''ஐயோ அம்மா...''முனகியபடி விழுந்தான்; அவனது கடைவாய் பல் உடைந்தது; வாயிலிருந்து ஒழுகியது ரத்தம். சமாளித்து எழுந்தான் முருகன்.கூச்சலைக் கேட்டு, சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் எல்லாம் அங்கு திரண்டனர். - தொடரும்...ஜோதிர்லதா கிரிஜா