சேமிப்பின் சிறப்பு!
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கிராத்துார், புனித ஜார்ஜியார் மலங்கரை கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளியில், 1985ல், 3ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியையாக இருந்தார் மதர் கில்டா. அன்பும், கண்டிப்பும் நிறைந்தவர். சேமிப்புக்கு வழிகாட்டும் விதமாக, 'தின்பண்டம் வாங்க, பெற்றோர் தரும் காசில் சிறு பகுதியை சேமித்தால் அவசர காலத்தில் உதவும்...' என அறிவுரைத்தார்.அதை செயல்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் வகுப்பில், 25 காசுகளை அவரிடம் கொடுப்போம். பெயர் பொறித்த அட்டையில் பதிவு செய்து, பெற்றுக்கொள்வார். இப்படி சிறுக சிறுக சேர்த்த பணத்தில் ஆண்டு இறுதியில், சுற்றுலா அழைத்து செல்வார். சேமிப்பின் உன்னதத்தை அது புரிய வைத்தது.எனக்கு, 40 வயதாகிறது; பிரபல நட்சத்திர ஓட்டலில் பணிபுரிகிறேன். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சேமிக்கிறேன். அன்றாடம் சில்லறையை உண்டியலில் சேர்த்து, எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பயன்படுத்துகிறேன். இதை வழக்கமாக்கிய பெருமை, அந்த ஆசிரியையே சாரும்.ஓய்வு பெற்று, மார்த்தாண்டம் தலைமை மடத்தில் வசித்து வரும் அவரை ஒருமுறை சந்திந்து, அன்பு, மரியாதையை வெளிப்படுத்தினேன். மனங்கனிந்து ஆசிர்வதித்து, மணிமாலை ஒன்றை பரிசளித்தார். அந்த நிகழ்வை வாழ்வின் நெகிழ்ச்சி மிக்க தருணமாக உணர்ந்து போற்றி வருகிறேன்.- ஆ.சிவக்குமார், சென்னை.தொடர்புக்கு: 98417 70772